இருள் மறைத்த நிழல் (தேனு) - 17
காரில் லாவகமாக அமர்ந்தவன் அவள் பக்கத்து கதவை தன் வலிய கரங்களால் உள்ளிருந்தபடியே எட்டித் திறந்துவிட்டான். அவனோடு முன்புறம் அமர்ந்து செல்ல எப்படியோ இருந்தது. உள்ளே அமர்ந்துகொண்டு கதவை சாத்தியவள் அது முழுமையாக சாத்தாது கண்டு மீண்டும் கதவைத் திறந்து சாத்தினாள். முன் பின் செத்திருந்தால் அல்லவா சுடுகாடு தெரியும்! இதுவோ அவளது முதல் கார் பயணம். கதவை அறைந்து சாத்த வேண்டும் என்பதைப் பாவம் அவள் அறியவில்லை.நளந்தன் அறைந்து சாத்த சொல்லியும், அவள் அறைந்த வேகம் பத்தவில்லை! ரொம்ப வேகமாக அறைந்து கதவு ஏதாவது ஆகிவிடுமோ என்றும் இருந்தது. அவள் முகம் கன்ற, ஒரு சின்ன புன்னகையோடு நளந்தனே தன் இருக்கையிலிருந்து லேசாக அவள் புறம் சாய்ந்து கதவை சாத்தக் கைகளை நீட்டினான். கிட்டத்தட்ட அவளை உரசி கொண்டு நீண்ட கைகளால் அவள் சிலிர்த்து அனிச்சையாய் விலகி இருக்கையோடு அழுந்திக் கொள்ள, நீண்ட கைகளை நீட்டிய வேகத்திலேயே இழுத்துக் கொண்டு வியப்பாய் அவளைப் பார்த்தான். பின் இதழ்க்கடையில் ஒரு மென் முறுவலோடு ஏதொன்றும் சொல்லாமல், தன் சீட் பெல்ட்டை கழற்றிவிட்டு சற்று முன்னோக்கிக் குனிந்து அவள் மேனியில் அவன் நிழல்கூடப் படாமல் கையை நீட்டிக் கதவை அறைந்து சாத்தினான்.
தன் கூச்சத்தையும், விலகலையும் அவன் கண்டுகொண்டதும், அதை இயல்பாய் ஏற்றுக் கொண்டதும் கண்டு அவள் கன்னம் கதகதத்தது..
"நீ இதே ஊர்தானே " என்ற அவனது இயல்பான குரல் உதவி செய்ய அவளும் முயன்று இலகுவான பேச்சில் கவனத்தைத் திருப்பினாள்.
"ஆமாம்..வந்து..பக்கத்தில் உள்ள எடமலை புதூர் என்று ஒரு கிராமம்.." என்றாள். "ஓ!" என்றான் ஏதோ விடை கிடைத்த மாதிரி. கிராமப்புறம் என்பதால் வந்த ஒதுக்கம் என்று எண்ணினானோ?!
"என்னைக் கடைத்தெருவில் இறக்கிவிட்டால் போதும்..வேண்டியதை வாங்கியபின் நானே பஸ் அல்லது ஆட்டோவில் திரும்பி வந்து விடுவேன்" என்று அவள் கூறியதை அவன் கவனித்ததாகவேத் தெரியவில்லை.
"பரம்பரா காம்பிளக்ஸ் ஓகே தானே? அங்கே போகலாமா?" என்று கேட்டு அதிர வைத்தான்.
நகரத்தில் பிரசித்தி பெற்ற வணிக வளாகம் அது. வளமுள்ளவர்களின் வாசஸ்தலம்! பரம்பரா காம்பிளக்சின் வாயில் காப்பானுக்கு 'டிப்ஸ்' கொடுக்கவே அவள் கொண்டு வந்திருந்த பணம் காணாதே!
"வேண்டாம்..வேண்டாம்.." பதறினாள் மிதுனா. "நான்..என்னை அங்கே இறக்கி மட்டும் விடுங்கள். நான்..எனக்கு தேவையானது அங்கே இருக்காது..எனக்கு தெரிந்த வேறு இடத்தில் வாங்கிக் கொள்கிறேன்." அவள் மறுக்க மறுக்க அவன் பார்வைக் கூர்மையானது.
"ஏன்? பரம்பராவில் இல்லாததே இல்லையே! அப்படி என்ன வாங்கப் போகிறாய்? அங்கே எல்லாம் இருக்குமே?"
அவளுக்குக் கோபம் பொங்கி வந்தது. தன் ஏழ்மையைப் பட்டவர்த்தனமாக சொல்ல வைக்கிறானே!
"அங்கே எல்லாம் இருக்கும் தான். என்னிடத்தில் தான் அந்த அளவு பணம் இருக்காது!" குத்தலாக மொழிந்தாள் மிதுனா.
அவன் பார்வையில் உடனே தணிந்து, " பரம்பராவைத் தாண்டி அருகே இருக்கும் பஜார் தெருவில் இறக்கி விடுங்களேன்., ப்ளீஸ்" என்று மன்றாடும் குரலில் கேட்டாள்.
மறுபடியும் வியந்து நோக்கியவன், "பணம் வேறு எடுத்து வந்தாயா? " என்று கேட்டான்.
அவன் கேள்வி புரியவில்லை.
"கேட்டேனே, பணம் தனியாக எடுத்து வந்தாயா?" என்று மீண்டும் கேட்டான்.
"பின்னே, கடைக்கு போகலாம் என்றால், பணம் எடுக்காமல் வருவார்களா?" இதென்ன கேள்வி என்பது போல விடையளித்தாள் மிதுனா.
பார்வை மாறாமலே, "அதையேத்தான் நானும் கேட்கிறேன்! கடைக்குப் போகலாம் வா என்றால், பணம் எடுத்து வராமல் இருப்பேனா?" என்றான்.
அவளுக்கு அவன் எதற்காக பணம் எடுத்து வரவேண்டும்? புரியாமல் அவள் நோக்க, அவனேத் தொடர்ந்து, "உனக்கு வேண்டியதை நான் வாங்கித் தர மாட்டேனா?" என்று மென்குரலில் வினவினான்.
சற்றுத் தடுமாறியவள் கிறங்கவிருந்த மனதுக்கு 'சம்மன்' அனுப்பி, 'கணிசமான தொகை' தர பரிந்துரைத்த 'நள மகாராஜாவை' நினைவில் நிறுத்தி, புத்தியைத் தன்வசப்படுத்தினாள்.
"இல்லை இல்லை..வேண்டாம். என் பணம் தேவையானது இருக்கிறது. என் தேவைகளும் அதிகமில்லை. சில துணிகள், இன்னும் சில.. பொருட்கள் என கொஞ்சம்தான் வாங்க வேண்டும். இதுவே போதும்" உறுதியான அவள் குரல் அவனை மேலே பேச விடவில்லை.
தோளைக் குலுக்கியவன், அவள் விருப்பப்படியே பஜார் தெருவில் காரை நிறுத்தித் தானும் இறங்கினான். "இல்லை நானே.." என்றவளை லட்சியம் செய்யாமல், "ஷ்.. இருக்கட்டும் வா" என்று தானும் கூட வருவதில் உறுதிக்காட்டினான்.
விலை சீட்டைப் பார்த்து பார்த்து அவள் இரண்டு சுரிதார் எடுத்ததை சிறிது நேரம் கை கட்டி வேடிக்கைப் பார்த்த நளந்தன் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து படபடத்தான்.
"பார் மிதுனா, எனக்கு நேரம் ஆகிறது..இப்படி நீ கணக்குப் பார்க்கத் தேவையில்லை. இன்னும் நாலு உடை நல்லதாய் எடுத்துக் கொள். இல்லையென்றால், தாத்தா வருத்தப்படுவார்." என்றவன், அவளை மேலேப் பேச விடாமல், தானே மின்னல் விரைவில் சில் உடைகளைத் தேர்வு செய்து கடைப் பையனிடம் கொடுத்தும் விட்டான். அத்தனை பேர் முன்னிலையில் அவனை மறுத்துப் பேசவும் தயக்கமாக இருந்தது அவளுக்கு.
"பில் போடுங்கள், மற்ற கடைகளுக்கு போய்விட்டு வந்து எடுத்து செல்கிறோம்" என்று கவுன்ட்டரில் அதிகாரமாய் கூறிவிட்டு அவளைக் கைப்பிடியாய் பற்றி வெளியே நடத்திச் சென்றான்.
அவன் கைப்பட்ட இடம் குறுகுறுத்தது. அவனோ "அடுத்து எங்கே?" என்றான் இயல்பாக.
குழறிய குரலை சமன்படுத்தி, முயன்று தருவித்த 'இயல்பான' குரலில் "நீங்கள் காரில் 'வெயிட்' பண்ணுங்களேன், ஒரு அரை மணி நேரத்தில் வந்துவிடுவேன்" என்றாள். இன்னும் சிலது வாங்க வேண்டி இருந்தது... உள்ளாடைகள்..இன்னும் பிற.. . இதெல்லாம் அவனிடம் சொல்லக் கூடியவை அல்லவே ..
அவள் முகத்தில் தென்பட்ட மாற்றத்தால் உண்டான ஆவலில், அவள் கையில் இருந்த 'ஷாப்பிங் லிஸ்ட்'-ல் சட்டென்று பார்வையைத் திருப்பிப் படித்த நளந்தனின் முகத்தில் சின்ன முறுவல்!
அதை முழுதும் படிக்காமலே "OOPS.. சரி, சரி.. நீயே வாங்கி வா. நான் இங்கேயே இருக்கிறேன்." என்று மீண்டும் ஒரு புன்முறுவல் செய்தான். கண்ணோரம் ஒரு ரசனையும், கொஞ்சமே கொஞ்சம் குறும்பும். அவன் பார்வையில் முகம் கவிழ்ந்தாள் மிதுனா.
பக்கத்து கடை தான் 'உள்ளாடை உலகம்'. கடைக்கு வேறு பெயர் வைத்துத் தொலைத்திருக்கலாம்! நல்லவேளை நளந்தன் அவள் தயக்கம் புரிந்து வெளியிலேயே நின்றுகொண்டான்..ம்..இதிலெல்லாம் அவன் மகா கண்ணியம்தான்! இல்லையென்றால், அவன் முன்னிலையில் அளவு சொல்லி..காது மடல் சிவந்தது அவளுக்கு!
ஒருவழியாய் அங்கிருந்து வாங்க வேண்டியது வாங்கி வெளியே வந்தாள் மிதுனா. அடுத்து சில காஸ்மட்டிக்ஸ் போன்றவை வாங்க பக்கத்துக் கடைக்கு சென்ற போது, "இங்கெல்லாம் ஆண்களுக்கு அனுமதி உண்டு தானே? நானும் வரலாமல்லவா? " என்று கேலி போல பேசிக் கொண்டே அவளோடு இணைந்து கொண்டான்.
அவள் வாங்குவது எதிலும் குறுக்கிடாமல், கடையை, சில சமயங்களில் அவளை அளவிட்டுக்கொண்டிருந்தவன், 'சேப்டி பின்' ஒரு செட் வாங்கும் போது மட்டும் 'அது எதற்கு?' என்று முகம் சுளித்தான். கேள்வியாய் அவள் நோக்க, தணிந்த குரலில், "கிழிந்து போனால் வேறு வாங்கி கொள்ளலாமே, பின் எதற்கு?" என்று அதிமேதாவியாய் விளக்கம் வேறு! அவளுக்கு சிரிப்பு பீறிட்டது.
விலை சீட்டைப் பார்த்துப் பார்த்து அங்கே உடை வாங்கியது போல, இங்கும் ஏதோ கஞ்சத்தனம் செய்வதாக நினைத்துவிட்டான் போலும்.
"கிழிந்தால் வேறு வாங்கலாம் தான்.. ஆனால் பாருங்கள், புது சேலையே என்றாலும் அதை உடுத்த, முந்தானைக்கு, கொசுவத்திற்கு என 'பின்' தேவைப்படுகிறதே!" என்று சிரிப்பினூடே சொன்னாள் மிதுனா. அவன் முகத்தில் அசடு வழிந்தாலும், "அதை மறந்து போனேன்" என்று சொல்லி சமாளித்தான் நளந்தன்.
கனிவும், சிரிப்பும், சிறு கேலியும்.. இனிமையாய் கழிந்த அந்த மாலைப் பொழுதில் ஒரு தேவதையாகவே தன்னை உணர்ந்தாள் மிதுனா.
கதையில் விறுவிறுப்பு கூட ஆரம்பித்து விட்டது
ReplyDeleteஅடுத்து என்ன நடக்கும் என்று ஆவலும் நமக்கு வர ஆரம்பித்து விட்டது
''கனிவும், சிரிப்பும், சிறு கேலியும்.. இனிமையாய் கழிந்த அந்த மாலைப் பொழுதில் ஒரு தேவதையாகவே தன்னை உணர்ந்தாள் மிதுனா'
படிக்கும் நமது மனதிலும் ஒரு நிறைவு !
பதிவுக்கு நன்றி தேனு
Hai thenu sister very nice storynga
ReplyDelete