இருள் மறைத்த நிழல் (தேனு) - 66
பாடும் குயிலில் இருந்து ஆடும் பயிர் வரை எல்லாமே அவளுக்கு அதிசயம் தான்! காலனியை கழற்றி வைத்து விட்டு இருவரும் வயல் பரப்பில் காலாற நடந்தனர். ஓரிரு முறை அவள் கால் வழுக்க நளந்தன் அவள் கை பற்றி அழைத்து சென்றான். அவனது பெரிய கையில் தன் தளிர் கரம் அழகாக அடங்கியது கூட அதிசயமாக தான் இருந்தது. இந்த ஓரிரு நாளில், பிற எண்ணமின்றி, பாலுணர்வின்றி இருவரும் கை கோர்த்து நடப்பது அத்தனை இயல்பாய் இருந்தது . மனம் கண்டதை நினைத்து வாடாது இளகி கிடந்தது. அதற்கு காரணமும் இருந்தது. எல்லாம் நளந்தன் உதிர்த்த பொன்மொழிகள் தான்!
ஒரு தரம் குத்தகைதாரர் வீட்டிலேயே இருந்து கொண்டு வேறு எவருக்கும் நிலத்தை விற்க நாம் முடிவு செய்தால் குத்தகைதாரர் வருந்த மாட்டார்களா.. குறைந்த பட்சம் விரைவாக முடிவு செய்து விட்டால், முடிவு அவர்களுக்கு சாதகமாக இல்லையென்றாலும், ரொம்ப நம்பிக்கையூட்டியது போல இருக்காதே. இங்கிருப்பது தர்ம சங்கடமாக இல்லையா.. என்று அவள் கேட்ட போது, அறிவுரை போல சொன்னான் நளந்தன்.
"ஒன்று செய்யலாமா, மிதுனா? இங்கிருக்கும் நாள் வரை நீ நாளை பற்றி கவலைப்படாதே. இருக்கும் நாளை, இந்த நிமிடத்தை ரசி. உனக்கும் சரி, எனக்கும் சரி, ஏகப்பட்ட மன உளைச்சல்.. இப்போது தான் நான் என் பிசினஸ் டென்ஷன் இன்றி இருக்கிறேன். இதை ஒரு 'வெகேஷன்' போல நான் பாவிக்கிறேன். அதனால், Let us live one day at a time, என்ன? அதனால், நிலத்தை விற்பதா, அல்லது குத்தகை காலத்தை நீடிப்பதா.. என்றெல்லாம் நேரம் பார்த்து எவர் மனமும் புண்படாமல் நான் அவர்களிடம் பேசி கொள்கிறேன். உன்னிடம் நான் விவரம் சொல்லும் போது உன் முடிவை சொன்னால் போதும். அதுவரை எதை பற்றியும், ஊர், தாத்தா, எதிர்காலம் என்று கூட சிந்திக்காமல், கண்ணில் பார்ப்பதை ரசி, என்ன?" என்றான்.
அதையே மிதுனா தாரக மந்திரம் போல பற்றி கொள்ள சந்தோஷம் குறைவின்றி பொங்கியது. ஆறு, குளம், குட்டை, குருவி என்று பொழுது சிறகடித்து பறந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக முத்துசாமி கவுண்டர் வீட்டில் உறவினர் கூட்டம் கரைய, அவளிடம் சொல்லியபடி நளந்தனும் அவ்வப்போது நிலம் பற்றி அவரிடம் பேசலானான். அவளை தனியே பொழுதுபோக்கிக் கொள்ள பணித்துவிட்டு தான்! 'நீயே பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும்' என்றவன் அவளிடம் நில விவகாரம், பேச்சு வார்த்தை என எதையும் அன்றன்றைக்கு கலந்தாலோசிக்கவில்லை. ஒருவேளை ஒரு அறிக்கை போல விவரம் திரட்டிய பின் சொல்லலாமென்று இருந்தானோ என்னவோ! அது பற்றி மிதுனாவும் கவலைப்படவில்லை. அவள் கவலை எல்லாம் இந்த பத்து நாள் தங்கல் இப்படி இறக்கை கட்டி பறக்கிறதே என்பது மட்டும் தான்.
அவன் கூட இருந்தால் இறக்கை கட்டி பறந்த பொழுதை, அவன் இல்லாத நேரங்களில் 'விடியா பகலே, தொலையா இரவே' என்று தான் நெட்டி தள்ள வேண்டியதாய் இருந்தது!
அன்றும் அது போல தான் மிதுனா பொழுதை நெட்டி தள்ளிக் கொண்டிருந்தாள்.
காலையில் ஊர் பெரியதனக்காரரை கடலைக் காட்டில் சந்திக்க நளந்தன் கிளம்பிய போது பார்த்தது. அதன் பிறகு இருவரும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் ஆடினார். அவள் வயலுக்கு சென்ற போது அவன் திரும்பி வந்தான் போலும். அவள் வீடு திரும்பிய போது மறுபடியும் அவன் எங்கோ சென்றிருந்தான்.
மிதுனா ஒரு தேனீர் மட்டும் அருந்திவிட்டு மறுபடியும் நடை பயின்றாள். பாதை போன போக்கில் கால் போனது. நளந்தன் அல்லாது காணும் காட்ட்சிகள், சினிமாவில் காட்டும் 'சிம்பாலிக் ஷாட்' போல திடுமென வண்ணமிழந்து கருப்பு வெள்ளை ஆகவில்லை என்றாலும் , கண்ணையோ கருத்தையோ கவரவில்லை என்பது மட்டும் திண்ணம்.
ஆனால் சற்றும் எதிர்பாராத தருணத்தில் கண்ணும் கருத்தும் கவரப் பட்ட போதோ, அதை அவள் எதிர்கொண்ட விதம் அவளுக்கே புரியாத புதிர்.
Comments
Post a Comment