Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 70

இருள் மறைத்த நிழல் (தேனு) - 70

ஒளிர்ந்த அந்த சந்திரகாந்த கல்லில், நிலை மறந்து நெகிழ்ந்த உடலும், மதியிழந்து மகிழ்ந்த மனமும் ஒருங்கே நிலைபெற்றன. அப்படித் தான் மிதுனா நினைத்தாள். கிராம வாசத்தில் மறந்து போயிருந்த சுபலா காட்டெருமை போல கனவு தகர்த்தாள்.

எப்படி மறந்தாள் இந்த சுபலாவை? சுபலாவிடம் சன்மானம் பெற்றவன், அவளிடமும் சரசமாடுவதா?! மிதுனாவிற்கு உடலெல்லாம் எரிந்தது. மோகத்தால் எரிந்த உடல் இப்போது கோபத்தால் எரிந்தது. வெந்து நோவதே அவள் வாங்கி வந்த வரமா?

தாபத்தோடு  அவள் விரல்களில்  விளையாடிய  நளந்தனின் கரங்களை "சீ!" என்று தட்டி விட்டு  திமிறினாள் மிதுனா.

அந்த ஒரு சொல்லில் அவளை சுற்றியிருந்த தன் கைகளை தீசுட்டார் போல விலக்கி கொண்டான் நளந்தன்.

"என்ன சீ?! "  உதாசீனம் பொறுக்கமுடியாது உறுமினான் அவன்.

வேட்கை கொண்ட ஆண் மனம்! சாதாரண இடையூறே தாங்காத போது, காரணமற்ற உதாசீனத்தை  எப்படி பொறுக்கும்? சீண்டிவிடப்பட்ட சிங்கம் போல சீறினான். அதோடு சென்ற நொடி வரை வெல்ல பாகாய் கையில் நெகிழ்ந்தவள் திடுமென காட்டும் எதிர்ப்பும்  புரியவில்லை.

அவள் அலட்சியமாக முகத்தை திருப்பி கொண்டு போக, அவள் கையை சுண்டி இழுத்தவன், "நான் கேட்டால் பதில் வர வேண்டும் எனக்கு"  என்றான் அதிகாரமாக.

வலித்த கரத்தை வேகமாக விடுவித்து கொண்டு  அவன் பார்வையை நேராக தாங்கி, "உங்களை போல உடலுக்கும் உள்ளத்துக்கும் தொடர்பின்றி வாழ என்னால் ஆகாது" என்றாள்.

 "என்னை போலவா?! என்னை பற்றி உனக்கு என்ன தெரியும்? முட்டாள்.  முதலில், அப்படி வாழ தேவையும் இல்லை. உள்ளம் ஒன்றிய நாம் கௌரவமாக மணந்து கொண்டு ஒன்றாக வாழ்வோம் என்று தான் சொல்கிறேன்" என்றான் எரிச்சலை உள்ளடக்கிய குரலில்.

அவன் அவ்வளவு நிச்சயமாய் பேசியதும் அவளுள் எதிர்ப்பையே கிளப்பியது. சுபலாவை மனதில் வைத்து கொண்டு அவளோடு  மனம் ஒன்றியதாமே! எதை வைத்து சொல்கிறான்?! கொதிப்புடன் கேட்டாள்.
 "உள்ளம் ஒன்றிவிட்டது என்று நீங்கள் சொன்னால் போதுமா? வெறும் உடல் பொருத்தம் தவிர வேறு என்ன இருக்கிறது இங்கே?"

அவளை வெறித்து நோக்கினான் நளந்தன்.

"இதென்ன வறட்டு பிடிவாதம், மிதுனா?! உள்ளம் ஒன்றாமல் தான் சற்று முன் என்னோடு அப்படி ஒன்றினாயா?"

அவன் கேள்வியில் முகம் கன்றினாள் மிதுனா.  வெட்கங்கெட்ட மனதுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்! வேறு தேடினாயா என்று நாக்கில் நரம்பின்றி அவன் கேட்ட அன்றே அவனை தலை முழுகியிருக்க வேண்டும். மனமுருக மன்னிப்பு கேட்டான் என்று மனம் இளகி நின்றது அவள் தவறு. அவனை விட்டு விலக முடியாது நட்பு வேண்டி நயந்து போனவள் அதோடாவது நின்றிருக்க வேண்டும். செய்த தீர்மானம் மறந்து, சுபலாவை ஒரு கையில் ஏந்தி கொண்டிருப்பவனிடம் இன்னமும் ஏங்கி கொண்டு நெக்குருகி நின்றதோ மாபெரும் தவறு. அவளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

அவளின் முக கன்றல் கண்டு கண்கள் கனிய, "மது, என்னை விடு. நீ தான் உடலுக்கும் உள்ளத்துக்கும் தொடர்பின்றி வாழ முடியாதவள் ஆயிற்றே?! உன் நெகிழ்விற்கு இன்னமுமா காரணம் புரியவில்லை?" என்றான் தணிந்த குரலில்.

'பெரிய காதல் மன்னன்' என்று இதழ்கள் இகழ்ச்சியாய் மடிய,  "எல்லாம் உங்களோடு பழகியதால் உண்டான பழக்க தோஷம் தான், வேறென்ன பெரிய காரணம்?! கண நேர மயக்கம். வெறும் உடல் பொருத்தம்." என்று அவனை திருப்பி அடித்தாள் மிதுனா.

"மிதுனா!" என்று வீடே அதிர ஆத்திரத்தில் கத்தியவன்,
"ஓஹோ! அதெல்லாம், வெறும் உடல் பொருத்தம் தானா? வேறு ஒன்றுமேயில்லையா?! சொல் மிதுனா. உன் நெஞ்சை தொட்டு சொல்" என்றான்.

"ஆமாம்! ஒன்றுமேயில்லை தான். உங்களுக்கும் எனக்கும் நடுவே உடல் பொருத்தம் அன்றி வேறு ஒன்றுமே இல்லை!" என்று அவளும் ஆத்திரமாக சொன்னாள்.

அவள் கழுத்து செயினை பிடித்து, "ஒன்றுமில்லை என்றால், இதோ இது இன்னும் ஏன் உன் கழுத்தில் தொங்க வேண்டும்?" என்று கர்ஜித்தான் நளந்தன்.

"அது.. அது.." என்று சற்று திணறிய மிதுனா தன் ரகசியம் கண்டு கொண்டானே என்ற கோபத்தில், "தப்பு தான். அன்றே உங்கள் முகத்தில் கழற்றி எறியாதது என் தவறு தான். ஏதோ புத்தி கெட்டு  போய் ஒரு நட்புணர்வில் விட்டு வைத்தேன்" என்று சப்பை கட்டு கட்டினாள்.

"நட்பு! இன்னும் எத்தனை நாள் அந்த போர்வைக்குள் ஒளிந்து கொள்வாய்?"

"நான் ஒன்றும் ஒளிந்து கொள்ளவில்லை. நமக்குள் நட்பு ஒன்றே சாத்தியம் என்பது நான் நன்கு சிந்தித்து அறிந்த மார்க்கம்." மிதுனா அழுத்தி உரக்க, நளந்தன் உரக்க நகைத்தான்.

"இல்லை. அது சிந்தித்தறிந்த  மார்க்கம் அல்ல. சூடு கண்ட பூனையின் ஒதுக்கம். ஆனால் அது எல்லாவற்றையும் தாண்டி, நீ என்னை நேசிக்கிறாய்." என்றான் அழுத்தம் திருத்தமாக.


"உங்கள் மேல் வெறுப்பில்லை என்றால், உங்களை நேசிப்பதாகிவிடுமா?!"

"வீண் விவாதம் எதற்கு? என்னை மணப்பதில் உன் தடை என்ன சொல்?"

"எனக்கு பிடிக்கவில்லை."

"அது தான் ஏன்?"

சுபலாவின் விஷ தூவல்கள் நெஞ்சில் நெருட, அவனை வெறுத்து பார்த்தாள் மிதுனா. "உங்களை பிடிக்கவில்லை. போதுமா?!" அவள் வெறுப்புடன் உரைக்க, முகத்தில் அடி வாங்கியது போல அதிர்ந்தான் நளந்தன்.

"பொய்! என்னை வெறுக்கவில்லை என்று உன் வாயால் இப்போது தான் சொன்னாய்." என்றவன், தலையை மறுப்பாக அசைத்து, " உன்னால் என்னை பிரிந்து ஒரு கணம் கூட இருக்க முடியாது, மிதுனா" என்றான் சவாலாக.

"உங்களை விட்டு விலக இருந்தவள் நான் என்பதை மறக்க வேண்டாம். இப்படி வசியம் செய்து விழ தட்ட தான் ஊர் விட்டு ஊர் கூட்டி வந்தீர்கள் என்று தெரியாமல் போய்விட்டது. முட்டாள் தானே நான்!  நீங்களானால் எங்கு தட்டினால், எங்கு விழுவாள் என்ற ராஜதந்திரம் பயின்றவர் ஆயிற்றே." அநியாயமாக அவனை குற்றம் சாட்டுவது புரிந்தும், சுபலாவிடம் சல்லாபம் புரிந்தவன் தானே எந்த தைரியத்தில் தன்னையும் அணுகுகிறான் என்ற  கோபம் உந்த, நாவை அடக்க மாட்டாமல்  கொட்டினாள் மிதுனா.

பொறுமை இழந்த நளந்தன் அவளை பற்றியிழுத்து, "வசியம் செய்தேனா?! எதற்கு? இந்த உடலுக்கா? சீ! இதற்கு மேல் உன்னிடம் பேச எதுவுமில்லை. போ! உன் இஷ்டம் போல எங்கு வேண்டுமானாலும் போ! தாத்தா வரும் வரை கூட நீ பொறுக்க வேண்டாம். ஆனால் ஒன்று, உன்னுடைய இந்த முடிவிற்காக மிதுனா, நீ  ரொம்பவும் வருத்த படப் போகிறாய். எனக்கும் தன்மானம் உண்டு. வேண்டாம் வேண்டாம் என்பவளை இனியும் தேடி வர நான் மான ரோஷம் இல்லாதவன் அல்ல. நாளையே உன்னை ஊரில் கொண்டு விடுகிறேன். உன் நில விஷயம் எல்லாம் வக்கீல் வைத்து பார்த்துகொள்ளலாம். அதன் பின் நானாக என்றும் உன்னை தேடி வர மாட்டேன். " என்று கட்டுக் கடங்காத கோபத்துடன் கூறி அவளை உதறி தள்ளி  கையில் இல்லாத அழுக்கை தட்டி விட்டு கதவு நோக்கி வேகமாக சென்றான்.

சமாளித்து நின்றவள், குறையாத ஆங்காரத்துடன் அவனை முறைத்து பார்த்தாள். அந்த பக்கம் சுபலாவிடம் காதல் பரிசாக மோதிரம் வாங்கி கொண்டு, அவளை மறக்க முடியாது காதல் சின்னம் போல தொழிலுக்கு அவள் பெயரையும் வைத்து விட்டு, இந்த பக்கம் உத்தம சிகாமணி போல தன்னை குற்றம் சொல்கிறானே?!

"தன்மானம் என்ன , உங்கள் தலையாய சொத்தா?! எங்களுக்கெல்லாம் மான ரோஷம் கூடாதா?! அரியணைக்கு நான், அந்தபுரத்திற்கு சுபலா  என்று நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வர நான் என்ன இன்னொரு சுபலாவா அல்லது செரீனாவா?!" என்றாள் கொதிப்போடு.

கதவருகில் சென்றிருந்தவன் விருட்டென்று தலை திருப்பி அவளை பார்த்தான்.

"சுபலா, சுபலா, சுபலா! இந்த சுபலா ஜபத்தை நீ நிறுத்தவே மாட்டாயா?! " என்றவன், "நீ சுபலாவும் அல்ல, செரீனாவும் அல்ல. மண்ணில் தலையை புதைத்து கொண்டு உலகம் இருண்டு விட்டதாக நினைத்து கொண்டிருக்கும் நெருப்பு கோழி நீ! நீயாக தலை தூக்கினால் அன்றி  என் நேசம் உனக்கு சொல்லி புரியாது. ஆனால் அது புரியும் போது காலம் கடந்து விடாதிருக்க இறைவனை வேண்டி கொள்!" என்றவன் ஆவேசமாக வெளியேறி முத்துசாமி போக வர அவனுக்கு தற்காலிகமாக கொடுத்திருந்த பைக்கை ஆத்திரமாக உதைத்து அசுர வேகத்தில் கிளப்பினான்.

Comments

  1. hi i can,t expresion on the words for your story chance illa pa.now i'm big fan of u

    ReplyDelete
  2. வேட்கை கொண்ட ஆண் மனம்! சாதாரண இடையூறே தாங்காத போது, காரணமற்ற உதாசீனத்தை எப்படி பொறுக்கும்? சீண்டிவிடப்பட்ட சிங்கம் போல சீறினான். அதோடு சென்ற நொடி வரை வெல்ல பாகாய் கையில் நெகிழ்ந்தவள் திடுமென காட்டும் எதிர்ப்பும் புரியவில்லை.

    அவள் அலட்சியமாக முகத்தை திருப்பி கொண்டு போக, அவள் கையை சுண்டி இழுத்தவன், "நான் கேட்டால் பதில் வர வேண்டும் எனக்கு" i felt this same feeling with my sweetie..........very very painful moment for us that was.............

    ReplyDelete
  3. sema story pa yevlo time padichalum padichikite iruklam sema feeling oru movie pakra mari iruku

    ReplyDelete
  4. AnonymousMay 23, 2016

    superb story.i like u.wrote more story.congrats

    ReplyDelete

Post a Comment