இருள் மறைத்த நிழல் (தேனு) - 12
அடுத்த சில தினங்கள் வீட்டில் நளந்தன் இல்லாததும் ஒரு நல்லதாய் போனது. மிதுனாவால் வீட்டு மக்களோடு இயல்பாய் ஒன்ற முடிந்தது. அந்த வீட்டின் அன்றாட செயல்பாடு ஒரு வகையாய் புரிபட்டது.
அரண்மனை போன்ற அந்த வீட்டில் சொந்தம் என்று பார்த்தால்.. சுந்தரமும், ஒரு நாள் முதல்வன் போல வந்த முதல் நாள் மட்டுமே காட்சி தந்த அந்த நளந்தனும் தான். இவர்கள் தவிர்த்து டிரைவர், தோட்டக்காரன், சமையல்காரன், வெளி வேலைக்கு ஒரு ஆள், மேல் வேலைக்கு ஒரு ஆள், அது போக ஒரு எடுபிடி என ஒரு ஆறு பேர். இவர்களோடு தற்காலிக வரவாக இவள் ஒருத்தி!
வேலைக்காரர்களில் கூட ஒரு பெண் இல்லாதது அவளுக்கு வியப்பாய் இருந்தது. அவரவர் வேலையை பிசகின்றி செய்தனர் வேலையாட்கள் அனைவரும். அதிகப்படி பேச்சு ஒன்றும் காணோம். சுந்தரத்திற்கு ஏதோ இதய நோய். கூடவே ஆஸ்துமா. அதிகம் பேசினாலே மூச்சிரைப்புதான். 'பிசினஸ்' எல்லாம் பேரன் தான் பார்த்துக் கொள்கிறான் போலும். இந்த சின்ன வயதில் அவனது பொறுப்பு மிதுனாவுக்கு மலைப்பாய் இருந்தது. கெட்டிக்காரன் தான்..கூடவே கொஞ்சம் சிரித்தால் நன்றாக இருக்கும்.
வேளாவேளைக்கு உணவு பெரியவர் அறைக்கு வந்து விடும். முன்பு எப்படியோ..மிதுனா வந்தபின், அவர் உணவருந்தி முடிக்கும் வரையில் அவர் அருகிலேயே இருந்து பொறுப்பாய் பரிமாறி, உப்பு,ஊறுகாய், தண்ணீர் என குறிப்புணர்ந்து கவனித்து, கூடவே அவருக்கு பேச்சுத் துணையாகவும் இருப்பாள். தள்ளாத வயதில், தனிமைச் சிறையில் அவர் ரொம்பவே ஏங்கிப் போயிருப்பதாக அவளுக்கு தோன்றும்.
இந்த நளந்தன் இவரோடு இப்படி நேரம் செலவிடுவானோ? முதல் சந்திப்பில் அவனிடம் கண்ட கடுமை எதிர்மறையான எண்ணத்தை தோற்றுவித்தாலும்.. 'வேறு ஏதாவது பேசுங்கள், தாத்தா" என்று சொன்னானே..அப்படி என்றால் பேசுவது..ஏதாவது பேசிக் கொண்டிருப்பது வழக்கம் என்றும் அர்த்தமாகிறதே..என அவனுக்காக மனம் வக்காலத்து வாங்கும்!
உணவு வேளைகள் போக, காலையில் ஒரு தரம், மாலையில் ஒரு தரம் தாத்தாவோடு பொதுவாக ஏதாவது உரையாடுவது வழக்கமாகி போனது. மிஞ்சிய நேரத்தில் சமையல்கட்டில் உதவினாள். முதலில் மருண்டு மறுத்த சமையல்காரர் அவளது யதார்த்த குணம் கண்டு ஒரு மரியாதை கலந்தத் தோழமையுடன் பழக ஆரம்பித்துவிட்டார். மற்றவர்களும் 'மீனாம்மா' என்று இயல்பாக அழைக்க தொடங்கிவிட்டனர். அவள் தாத்தாவும் அவளை 'மீனாம்மா' என்று தான் அன்போடு அழைப்பார்! அதுவே அந்த புதிய சூழலில் ஒருவகை ஆறுதலைத் தந்தது .
தோட்ட மேற்பார்வையும் சில சமயம் நடக்கும். ஆனால் அதிகாரமாக உத்தரவிடாது, 'இந்த செடி பட்டுப் போய் விட்டதே..உரம் போட்டாலும் பிடிக்குமா?..இங்கே இன்னொரு ரோஜா பதியன் போடலாமா?' என யோசனைகளாய், சக மனுஷியாய், அவள் கேட்கும் போது, தோட்டக்காரருக்கும் தவறாய் தோன்றுவதில்லை.
உண்ட வீட்டிற்கு தன்னால் ஆன சிரமதானம் என்று செய்தது போக, தனக்கென சில மணித்துளிகளும் அவளுக்கு கிடைத்தன. நளந்தன் வரும்வரை வேலை பற்றி ஒன்றும் கேட்கமுடியாது..அதற்காக சும்மா இருக்கவும் முடியாதே.. அதனால், முன்பு செய்த தன் பகுதி நேர வேலை - ஒரு பெரிய டைப்பிங் அகாடமியில் டைப்பிங் ஹையர், லோயர் பரீட்சை தாள்கள் மதிப்பிடும் வேலை - அதைத் தொடர முடிவு செய்தாள். தாள்கள் அஞ்சல் வழி அவளுக்கு அனுப்பப்படும், திருத்தியதை அவளும் அது போன்றே திருப்பி அலுவலகத்திற்கு அனுப்பிவிடுவாள். சொற்ப சம்பளம் தான். அதிலும் இந்தகாலத்தில் கம்ப்யூட்டர்-ஏ திருத்திவிடும். இன்னும் இப்படி வெளி ஆட்களிடம் கொடுப்பது அவளுக்குமே ஆச்சர்யம் தான். இன்றோ நாளையோ இந்த வேலையும் போய்விடும்..இருக்கும்வரை செய்வோமே..ஒரு நிரந்தர வேலை கிடைக்கும்வரை இது ஒரு பற்றுகோள். சுந்தரம் தாத்தாவிடம் இதுபற்றி அவள் இன்னும் சொல்லவில்லை..அவர்கள் தகுதிக்கு இது கூடாதென தத்துபித்து என்று அவர் மறுப்பு கூறிவிட்டால், மீறி செய்வது முறையாகாது. எப்படியும் அஞ்சல் வழிதான் பரீட்சை தாட்கள் வருவதும், போவதும். இதில் என்ன பெரிய பாதகம்? அதனால் இந்த வீட்டு முகவரியை மட்டும் அந்த அகாடமியில் மறுபதிவு செய்து கொண்டு முன்பு போலவே தன் பணியை எஞ்சிய மணித்துளிகளில் வீட்டில் இருந்தவாறே தொடர்ந்தாள்.
தாத்தா சொன்ன சில வாரங்கள் முடிந்தபாடில்லை. அவரை மீண்டும் மீண்டும் வேலை விஷயமாகவோ, மற்ற விஷயமாகவோ தொந்தரவு செய்ய அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. சும்மாவே நளந்தனின் தாமதப்பட்ட வரவால் சோர்ந்திருந்தார். மூச்சிரைப்பு வேறு!
இந்த நளந்தன் வந்து, அவனிடம் இந்த தாத்தா சொல்லி, பின் அவளுக்கென ஒரு வேலையை அவன் கண்டெடுத்து,..அதற்குள் தன் தாத்தாவே காசியில் இருந்து வந்து விடுவார்! சலிப்பும் ஏக்கமும், நம்பிக்கையும், நம்பிக்கையின்மையுமாய் நாட்கள் உருண்டோடின.
I have a feeling that her Grandpa wont come back.Cant resist to read it fully.GoodWork Thenu!
ReplyDelete//இந்த சின்ன வயதில் அவனது பொறுப்பு மிதுனாவுக்கு மலைப்பாய் இருந்தது. கெட்டிக்காரன் தான்..கூடவே கொஞ்சம் சிரித்தால் நன்றாக இருக்கும்.//
ReplyDeleteவேலை நேரத்தில் பாஸ் எல்லாம் சிரிக்க மாட்டாங்களாம் :)
//என அவனுக்காக மனம் வக்காலத்து வாங்கும்!//
இது பாஸ்க்கு எப்போ தெரிய போகுதோ !
//தோட்ட மேற்பார்வையும் சில சமயம் நடக்கும். ஆனால் அதிகாரமாக உத்தரவிடாது, 'இந்த செடி பட்டுப் போய் விட்டதே..உரம் போட்டாலும் பிடிக்குமா?..இங்கே இன்னொரு ரோஜா பதியன் போடலாமா?' என யோசனைகளாய், சக மனுஷியாய், அவள் கேட்கும் போது, தோட்டக்காரருக்கும் தவறாய் தோன்றுவதில்லை.//
ஏன்னா மலரிலும் மெல்லிய மனத்தையுடைய மிதுனாவுக்கு அதிகாரம் செய்ய தெரியாது
மிதுனாவோட ஸ்பெஷல் என்னன்னா மிதுனாவுக்கு மனதை படிக்க தெரியும் இந்த தேனுவை போல ! soooooo sweettttttt
தேனு !
நன்றி சொல்ல உனக்கு !
வார்த்தை இல்லை எனக்கு !!