Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 68

இருள் மறைத்த நிழல் (தேனு) - 68

"ஆ.. அம்மா.." என்ற சன்ன அலறலோடு ஆற்றுக்குள் விழுந்த மிதுனா, தன்னை உள்ளே இழுத்துவிட்ட நளந்தனையே ஆதாரமாக பற்றி நொடியில் சமாளித்து தானே காலூன்றி நின்றாள். வெற்றி பார்வை பார்த்த  நளந்தனை அவள் முறைத்து பார்க்க, அவளது பொய் கோபத்தை நளந்தன் தன் மாய புன்னகையால் சுவடின்றி துடைத்தான்.

சிற்றலை போல அவர்களின் அசைவால் ஆடி ஆடி மேனி தொட்ட தண்ணீர் அவள் மனதின் இறுக்கம் தளர்த்த, சிறுபிள்ளை போல உற்சாகம் பொங்கியது. சிறுவயதில் தன் சொந்த ஊரில் தோழியரோடு  நீந்தி களித்தது நிழற்படம் போல நினைவுக்கு வர, நீர், நளந்தன், நீச்சல் உள்ளிட்ட  மந்திர கலவையில்  மனம் குதூகலித்தாள் மிதுனா.

நளந்தன் சொன்னது போல நீர் குளிர்ச்சியாக இல்லை தான், ஆனாலும் அத்தனை  கதகதப்பாகவும் இல்லை. "கொஞ்ச நேரம் மூச்சு பயிற்சி செய். உடல் இந்த நீரின் தன்மைக்கு பழகி விடும்" என்று சொன்னவன் அவளுக்கு அவகாசம் அளிப்பவன் போல தனியே ஓரிரு முறை குறிப்பிட்ட தூரம் வரை நீந்தி வந்தான். அதற்குள் அவளும் சேலையை லேசாக தூக்கி செருகி கொண்டு நீந்தி பார்த்தாள்.

"சேலை தடுக்குமா?" என்று அவன் யோசனையோடு கேட்க, இழுத்து விடுவதையும் விட்டு விட்டு, நல்ல நேரம் பார்த்து கேட்டான் என்று அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

ஆனால் நம்பிக்கையோடு, "இல்லை. சேலையோடு நீந்தி பழக்கம் தான். " என்றவளால் அவன்  வேகத்திற்கு ஈடு கொடுக்க தான் முடியவில்லை. நளந்தன் அளவிற்கு இல்லை என்றாலும் மிதுனா ஓரளவிற்கு நீந்துவாள். அது என்னவோ அவன் அருகில் இருப்பதால் வந்த தயக்கமா.. என்னவென்று தெரியவில்லை.. சேலை விலகுமோ என்ற அச்சத்தில் காலை வெகுவாக உதைக்காமல் அவள் நீந்திய விதத்தில், அவள் நீந்தினாள் என்பதை விட மிதந்தாள் என்பதே பொருத்தமாக இருக்கும்.

நளந்தனும் அவள் தயக்கம் புரிந்தவன் போல அவளுக்கு இணையாக  தன் வேகத்தை குறைத்து கொண்டான்.

பின்னர் அவன் மல்லாக்க திரும்பி படுத்தவாறே மிதந்தான். "கண்களை மூடி கொண்டு இப்படி சூரிய ஒளி முகத்தில் படுமாறு மிதப்பது நன்றாக இருக்கும். செய்து பார்" என்றான்.

தெரியாதே என்று அவள் சொல்ல, ஒரு ஆசான் போல கரையோரம் அவளை நிறுத்தி, "ஈஸி தான். கழுத்து, முதுகு, கால் எல்லாம் ஒரு நேர்கோட்டில் இருக்குமாறு உடலை நீட்டி 'ரிலாக்ஸ்' செய், எல்லாம் முடியும்" என்று அவள் முதுகுக்கு  பட்டும் படாமலும் தன் உள்ளங்கையால் ஆதாரம் கொடுத்து அவள் மறுப்பையும் மீறி அவளை ஒரு தரம் மிதக்கவும் வைத்தான்.


அவன் சொன்னது போல மிதப்பது நன்றாக இருந்தாலும் கூச்சம் மிக அவள் "பிறகு கற்று கொள்கிறேனே.." என்று திக்கி சொல்லி தள்ளி நின்றாள்.

அதுவரை ஒரு சக மனுஷியாய் மட்டுமே அவளை நோக்கிய நளந்தன் அவளது திடீர் நாணம் கண்டு வியந்து, "வெட்கமா?!  இது வரை இல்லாது இப்போது மட்டும் என்ன?" என்று சொல்லி அவளை பார்த்த மாத்திரத்தில்,அவன் பார்வை மாறியது.

அவளது ஈரம் படிந்த சேலையும், ஈரத்தால் இறுக பிடித்த ரவிக்கையும், உண்ட வீட்டுக்கு இரண்டகம் போல கடமை மறந்து அது காட்டி கொடுத்த செழுமையும், எழிலார்ந்த இடையும், இடையோடிய வளைவும், அது காட்டிய நெளிவும், ஆண் மனதின் உள்ளார்ந்த உணர்வுகளை கிளர்த்தெழுப்ப, அவளின் தளிருடல் மேல் அதுவரை இல்லாத புது விதமாய் அவன் பார்வை படிந்தது.

அந்த பார்வையில் மூச்சடைக்க நின்றாள் மிதுனா.
நளந்தனின் பரந்து விரிந்த மார்பும், அதில் சுருண்டு படர்ந்த ரோமமும், தண்ணீர் அதிகம் சலசலக்காத வண்ணம் அலட்டலில்லாது கைகளை தூக்கி போட்டு அவன் நீந்துகையில் உருண்டு திரண்ட தசை கோளங்களும், அவை  மஞ்சள் வெயிலில் தங்கம் போல மின்னிய  மெருகும் அவளை  என்னவோ செய்ய, மிதுனாவினுள்ளும் அதே தாக்கம் தான்.

அவன் பார்வையில் படாமல் அப்படியே தண்ணீருக்குள் தலை வரை அழுந்தி கொள்ள துடித்தாள்.

நளந்தன் ஒருவாறு தன் குரலை தேடி பிடித்து தொண்டையை கனைத்து, "உன் உடல் இப்படி நடுங்குகிறதே, மிதுனா. போகலாமா? " என்று கேட்க,  இன்னமும் நாணம் மிக மெல்லிய குரலில், "ப்ளீஸ், நீங்கள் முதலில் போங்களேன்" என்றாள் கீழே பார்த்தபடி.

அவள் கூச்சம் மதித்து,  "அந்த மரத்திற்கு பின் நின்று உடை மாற்றி கொள்." என்று சொல்லி விட்டு  தன் சட்டை, டவல்  இருந்த இடத்திற்கு அவளை திரும்பி பார்க்காமல் சென்றான்.

மாற்று சேலையை மார்போடு அணைத்தபடி, "வேண்டாம் வேண்டாம்.. நான் வீட்டிற்கே போய் மாற்றி கொள்கிறேனே" என்றாள் மிதுனா. திறந்தவெளியில் மாற்ற அவளுக்கு இன்னமும் கூச்சம். பொழுது சாயந்து இருட்ட வேறு தொடங்கியிருந்தது. இருட்டோடு இருட்டாக வீட்டிற்கே சென்றுவிடலாமே.. இந்த சேலையை போர்த்திகொண்டால் ஈரம் கூட தெரியாது என்று அவள் நினைத்தாள். அவன் மறுத்தால் சொல்ல தயாராக வைத்திருந்த காரணங்கள் அவன் கேளாததால் சொல்லப்படவில்லை.

மறுபேச்சின்றி தன்னிடமிருந்த பெரிய டவலை எடுத்து அவளுக்கு போர்த்திவிட்ட நளந்தன் ஏதோ குறுக்கு வழியில் அவளை நடத்தி சென்றான். வருகையில் அவள் எங்கெங்கோ சுற்றி கொண்டு ஆற்றங்கரைக்கு வந்திருப்பாள் போல! இப்போதோ ஒரு ஐந்து நிமிட நடையில் அவர்கள் குடிலுக்கே வந்து விட்டிருந்தனர்.

வழியில் நளந்தனோ மிதுனாவோ எதுவும் பேசவில்லை. பருவ போராட்டம் இருவர் வாயையும் கட்டி போட்டிருந்தது. குடிலை அடைந்தவுடன், கதவை திறந்து முகப்பில் தலை இடிக்காமல் குனிந்து உள்ளே சென்ற நளந்தன், தொடர்ந்து உள்ளே நுழைந்த மிதுனாவையும் அவள் மார்போடு அணைத்திருந்த மாற்று சேலையையும் ஒரு பார்வை பார்த்து, மறுபடியும் வெளியே சென்று நின்று கொண்டான்.  பின்னங்கழுத்தை தேய்த்தவன், ஏதும் சொல்லாமல் மிதுனாவை உள்ளே வைத்து கதவை வெளி தாளிட்டு விட்டு குடிலுக்கு வெளியே இருந்த தென்னை மரத்தில் சாய்ந்து கொண்டான்.

மந்திரத்தால் கட்டுண்டவள் போல மிதுனா உள்ளே நின்று கொண்டிருந்தாள். நளந்தன் வெளி தாளிட்டது கூட அவளுக்கு உரைக்கவில்லை. யந்திரம் போல உள்தாளிட்டு கதவருகில் நின்றபடியே உடை மாற்றி கொண்டாள். பின் தாழ் அகற்றிவிட்டு ஜன்னலோரம் வந்து நின்று ஒரு கீற்று தேய்ந்த நிலாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு நின்றாள்.

Comments

  1. Sowmya ManiAugust 13, 2010

    heiii... so..... so Romantic!!

    cha.. epdi pa??

    ReplyDelete
  2. Hey Sowmi, ;) ellam oru flow thaan. ;) Glad u get caught in the romantic wave.

    ReplyDelete
  3. உண்ட வீட்டுக்கு இரண்டகம் போல கடமை மறந்து அது காட்டி கொடுத்த செழுமையும்,

    superb

    ReplyDelete
  4. ;) enakku kooda romba piditha varigal, Kasturi. ;)

    ReplyDelete
  5. Hi Thena..

    So romantic..

    I am waiting for my hsuband :)

    Thanks Ganga

    ReplyDelete
  6. ROFL!! Ganga, How did the romantic 'home coming' go with your dear husband?! ;)I wish you more romantic days-nights. ENJOY!!

    ReplyDelete
  7. ur narration is very good...... it's similiar to rc novels

    ReplyDelete
  8. அவளது ஈரம் படிந்த சேலையும், ஈரத்தால் இறுக பிடித்த ரவிக்கையும், உண்ட வீட்டுக்கு இரண்டகம் போல கடமை மறந்து அது காட்டி கொடுத்த செழுமையும், எழிலார்ந்த இடையும், இடையோடிய வளைவும், அது காட்டிய நெளிவும், ha what a superb romantic.................i start now where is my future wife is now.......

    ReplyDelete
  9. AnonymousMay 04, 2016

    So romantic

    ReplyDelete

Post a Comment