Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 57

இருள் மறைத்த நிழல் (தேனு) - 57

நளந்தனின் மனமுணர்ந்த வார்த்தைகளுக்கு பின் நடந்தவற்றை ஒதுக்க தான் முயன்றாள் மிதுனா. அவனே சொன்னது போல அவசர கோலத்தில் அள்ளி தெளித்த வார்த்தைகளை இனியும் பெரிது படுத்த கூடாது என்று மனதை தேற்றி கொண்டாள். அதிலும் சுந்தரம் தாத்தாவும் அவனும் அவளை அப்படி தாங்கும் போது கோபத்தை இழுத்து வைப்பதும் சிரமமாக தான் இருந்தது. இதைதான் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்றனரோ?

ஆனால் அவன் என்றேனும் அவள் சுற்றம் ஆக கூடுமா? அது விஷயம் மட்டும் இன்னும் குட்டையாய் குழம்பி தான் கிடந்தது அவள் மனதில். நட்பு வட்டத்துக்குள் அவன் வெகு பாந்தமாக அடங்கினான்.

சுந்தரம் தாத்தாவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவளை போனில் அழைத்து பேசினார். அவளது உயில், சொத்து விவகாரம் விஷயங்கள் நளந்தனின் சொந்த அலுவல் காரணமாக கொஞ்சம் தடை பட்டன. அவனது டிராவல்சின் புதிய தொழில் முயற்சி முழு வேகத்தில் நடந்தது போலும். ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்தான். முன்பு போல வெளியூர் பயணங்கள் மட்டும் காணோம். ஒருவேளை மிதுனாவை தனியே விட்டு செல்ல முடியாது என்று அவற்றை தவிர்த்தானோ என்னவோ..

வீட்டிற்கு நேரத்திற்கு வந்தவன் மறுபடியும் கணினியும் கையுமாக உட்கார்ந்து விடுவான்.  அது போல ஒரு தரம் அவன் வேலையில் மூழ்கி கிடந்த போது தாத்தா போன் செய்தார். மிதுனா தான் பேசினாள்.

பொதுவாக பேசி கொண்டிருந்தவர் திடுதிப்பென்று 
" நம் குடும்ப ஜோசியர் நடேசனை கூப்பிட்டு ஒரு நல்ல நாள் பார்க்க சொல்ல வேண்டும். உங்கள் கல்யாணத்தை சீக்கிரமே முடித்து விடலாம். விஜியிடம் சொல்லி..  நானே  சொல்கிறேன் " என்றதும் மிதுனாவின்   முகத்தில் ஏராளமான திகைப்பு.. குரலில் தடுமாற்றம் எல்லாம்.

கணினியில் ஏதோ  டைப்  செய்து கொண்டிருந்த நளந்தன் அவள் தடுமாற்றம் கண்டு தலை நிமிர்ந்தான்.

மிதுனா சமாளித்து, "என் தாத்தாவின் முதலாமாண்டு நினைவு நாள் வரை கல்யாணம் பற்றி எதுவும் பேச வேண்டாம் தாத்தா" என்று தழுதழுத்தாள்.
 
பெரியவர் அவளை அதற்குமேல் அன்று வற்புறுத்தவில்லை.

கலக்கத்துடன் அவள் போனை வைத்து விட்டு நகருகையில், ஒரு கணக்கிடும் பார்வை பார்த்த நளந்தன், "ஏன்?" என்று சுருக்கமாக கேட்டான்.

அவள் பதிலுக்கு அரை நிமிடம் ஒதுக்கி காத்திருந்த நளந்தன் அவள் தொடர்ந்து மௌனம் காக்கவே, தானே பதில் தேடினான்.

தொண்டையை செருமி, "நான் அன்று உன் பேச்சை நம்பவில்லை என்று.. அன்று பேசிய வார்த்தைகளுக்காக வெறுத்து.. அதனால் மறுக்கிறாயா?" என்றான்.

அவள் அதற்கும் பேசாதிருக்க, "பின்னே? மறுக்க காரணம்?" என்றான் அமர்ந்த குரலில்.

"நம்மிடையே இருக்கும் நட்பு போதும்" என்றாள் அவள் ரொம்பவும் யோசித்து.

"நம்மிடையே இருப்பது நட்பா?"

இரு நீர் மணிகள் கண்ணோரம் எட்டி பார்க்க அவள் ஆமாம் என்று தலையசைத்தாள.

"I see.." என்று ஒரு மாதிரி குரலில் சொன்னவன் கண்கள் அவள் கழுத்து சங்கிலியில் பாய்ந்து மீண்டன. எட்டி பார்த்த நீர் துளிகளை உள்ளிழுப்பதில்  முனைப்பாக  இருந்த  மிதுனா பொருள் பொதிந்த அவன் பார்வையை  கவனிக்கவில்லை.
  ஒரு பெருமூச்சுடன்  எழுந்து  பால்கனிக்கு  போனவன்  அதன்  பிறகு  அந்த  பேச்சை  எடுக்கவில்லை.

நிச்சலனமும் நிசப்தமுமாய் நாட்கள் நகர, ஒரு தினம் நளந்தன் தன் புதிய தொழில் பற்றி அவளிடம் ஒரு விரிவாக்கம் செய்தான்.

அவர்கள் டிராவல்ஸில் ஒரு பகுதி பாக்கேஜ் டூர் சேவை. இந்தியாவின் பிரபல சுற்றுலா தளங்கள், பக்தி வாசஸ்தலங்கள் என பல இடங்களுக்கு பயணிப்பது, கைடு ஏற்பாடு செய்வது, தந்கும் வசதி, உணவு வசதி என எல்லாம் அந்த டூரில் அடக்கம்.

தற்போது, நளந்தன் டைம் ஷேர் பிசினஸ் ஒன்றையும் அதில் கொண்டு வர முயற்சி செய்தான். பிரபல சுற்றுலா மையங்களில் கடலோரம், மலையோரம் என இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் கட்டப்பட்ட ஐந்து நட்சத்திர அறைகளை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து அதை தங்கள் வாடிக்கையாளர்களிடம் சில பல சலுகைகளோடு சீசனுக்கு வாடகைக்கு விடுவது..  அவர்களையும்  உள் வாடகைக்கு விட அனுமதிப்பது.

அடுத்த மாதத்தில் இருந்து அவனது டைம் ஷேர் ரிசார்ட்ஸ் திட்டம் அமுலுக்கு வரவிருப்பதையும் சந்தோஷமாக தெரிவித்தான். அதனால் வரக்கூடிய லாபங்கள், வாடிக்கையாளர்களை கவர அவன் யோசித்து வைத்துள்ள யுத்திகள்  என்று  அவன்  சுவைபட  விவரிக்க  விவரிக்க ஏதோ  அது அவளுடைய  சொந்த  வெற்றி  போலவே  உவகை  கொண்டாள்.

அந்த மகிழ்ச்சியில்,  அவன் திடுமென , "உனக்கு  டைப்பிங்  தெரியுமா ?" என்று  கேட்டு
"சில 'Confidential' கடிதங்கள் , டாக்குமெண்டுகள்  டைப்  செய்து  தர  முடியுமா? என்றபோதும்,   "என்னோடு நீயும் அலுவலகம் வாயேன். தினமும் என் வேலை முடிய நேரமாகும், அதுவரை நீ இங்கே தனியே இருக்க வேண்டாம். எனக்கும் டைப்பிங் அது இது என்று உதவலாம்" என்று அவன் சொன்ன போதும், அவளுக்கு மறுக்கவே தோன்றவில்லை. அவனுக்கு உதவுவதை விட  பெரிதாக  எதுவும் படவில்லை. அவனோடு அலுவலகம் செல்லவும் அவள் தயங்கவில்லை.

ஏன் போனோம் என்று ஒரு நாள் வருந்த நேரும் என அப்போது அவளுக்கு தெரியவில்லை. வெகு  சந்தோஷமாக "சரி"  என்று  தலையாட்டினாள்.

 நளந்தன் முகமெங்கும் திருப்தி துலங்க வெளியேறினான்.

Comments