Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 6

இருள் மறைத்த நிழல் (தேனு) - 6
    
நளந்தன் சென்றபின் சிறிது நேரம் தாத்தா அவளோடு பேசிக் கொண்டிருந்தார். பேச்சு அவள் தாத்தாவைப் பற்றியதாகவே இருந்தது. "உனக்கு இங்கே என்ன வேண்டும் என்றாலும் தயங்காமல் என்னிடம் கேளம்மா" என்ற அவரது அன்பான குரல் தன் தாத்தாவில் மூழ்கி கிடந்த அவள் நினைவுகளை மீட்டு வந்தது. இருக்க இடம், பெரியவரின் பாதுகாப்பு..இன்னும் என்ன வேண்டும்?..இருக்கிறதே..பிறர் கையை எதிர்பார்க்காது வாழ வகை செய்யும் வேலை..அதுவும் வேண்டுமே..

     அவளது எண்ணத்தைப்  படித்தவர் போல சுந்தரமே அந்த பேச்சையும் எடுத்தார். "உனக்கொரு வேலைத்  தேடித்  தருமாறு சந்தானம் கேட்டானம்மா. என் பேத்தி போல உரிமையோடே இங்கிருக்கலாம் நீ. ஆனால் அவனுக்கு உன் கையில் ஒரு வேலை இருக்க வேண்டும் என்று..சரி..அதுவும் சரிதான். ஆயிரம் இருந்தாலும் சுயசம்பாத்தியம் ஒரு பாதுகாப்புதான். உன் படிப்பையும் பாழடிக்கக்கூடாது  தான்." என்று சொல்லி மூச்சு வாங்கியவர் வினாடி தாமதத்திற்குப்பின் விட்ட இடத்தில் தொடர்ந்தார்.

    "ஒரு சில வாரங்கள் பொறுத்துக் கொள்ளம்மா. விஜியின் வெளியூர் பயணமெல்லாம் முடிந்ததும் அவனிடம் சொல்லி உன் வேலைக்கும் ஏற்பாடு செய்கிறேன். அதற்குள் உனக்கும் இந்த இடம், மனிதர்கள், ஊர் எல்லாம் பழகி விடும்" என்றார்.

   இதற்கும் அந்த நளந்தனிடம் தான் போய் நிற்க வேண்டுமா என மனம் சோர்ந்தது. இருப்பினும் மனதை மறைத்தபடி மென் புன்னகையோடு "சரி தாத்தா. அது வரை வீட்டில் ஏதாவது வேலை சொல்லுங்கள். உங்களுக்கு உதவியாக ஏதாவது செய்கிறேனே..சும்மா இருக்க எனக்கும் போரடிக்கும் " என்றாள்.

   என்னதான் தன் தாத்தாவும் இவரும் உயிர் நண்பர்கள் என்றாலும், தன்னை சொந்த பேத்தி போல என்று இவரே சொன்னாலும்..ஓசியில் சோம்பேறியாய் அங்கே ஒட்டிக்கொள்ள அவளுக்குப்  பிடித்தம் இல்லை. இந்த பெரியவர் கூறியது போல தன் தாத்தாவோடு இங்கே ஓரிரு நாட்கள் விருந்தாட வந்திருந்தால்  அது ஒரு மாதிரி. தானோ கிட்டத்தட்ட பிழைப்பிற்கு வழி தேடி வந்தவள். தன் சுயகௌரவத்திற்கு பங்கமின்றி இங்கே இருக்கப் போகும் கொஞ்ச நாட்களையும் மரியாதையாய் கழிக்கவே அவள் விரும்பினாள்.

  "என்னம்மா, அந்நியமாகவே பேசுகிறாயே. சரி..உன் திருப்திக்கு , இங்கே உன்னால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய். சுருக்கமாக..ம்ம்..சரியாக சொல்லப்போனால்,  இதை உன் வீடாக  நினைத்து உன் விருப்பம்  போல் என்ன வேண்டுமானாலும் செய், எப்படி வேண்டுமானாலும் இரு " என்று வெகு தாராளமாய் உரிமையளித்தார்.

  அதுவே அமைதி இழந்த அவள் மனதுக்கு நங்கூரமிட, அவரது களைத்த முகத்தை கவனித்துவிட்டு, "நீங்கள் ஓய்வெடுங்கள் தாத்தா.." என்று அவரிடம் இருந்துத்  தெளிவான மனதுடன் விடைபெற்றாள்.

     தன்னறைக்கு வந்தவள் சற்றுநேரம் அங்கிருந்த இருக்கையில் சாயந்து கண்மூடி கிடந்தாள். இனி சில மாதங்களுக்கு இந்த அறைதான் அவள் கூடு. தானும் தன் தாத்ததாவுமாக இருந்த கிராமத்து சிறுவீடு நினைவில் மோதியது. அதையே தனிமை என்று குறையாக தாத்தாவிடம் சினுங்கியது ஒரு காலம்! இன்று அந்த தனிமையிலும் தனிமையாய் தான் மட்டும் தனித்திருப்பது அதீத குறையாய் மருட்டியது.

   என்ன இது?! இன்னும் சில மாதங்கள்.. பின் காசியாத்திரை முடித்து பேத்தியைப்  பார்க்க தன் தாத்தா  ஓடோடி வந்துவிடப் போகிறார். அதற்குள் தனிமை அது இது என்று மனதை போட்டு உலப்பிக்கொண்டு.. வலுக்கட்டாயமாக மனதை திருப்ப முயன்றாள் மிதுனா.

  இந்த சுந்தரம் தாத்தா சீக்கிரமே வேலைக்கு வழி செய்தால் நன்றாக இருக்கும். ம்ம்..அதற்கு அந்த 'நள மகாராஜா' மனது  வைக்க வேண்டுமே! இந்த நேரம் பார்த்து தானா அவனும் வெளியூர் செல்ல வேண்டும்? இந்நேரம் புறப்பட்டிருப்பானோ? அதுதான் அவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டானோ? அவன் எப்போதுமே முசுடு தானோ?  மிதுனா தலையை  உலுக்கிக் கொண்டாள். அங்கே சுற்றி இங்கே சுற்றி மறுபடியும் அந்த 'நளந்தனிலேயே' நிற்கிறதே இந்தப் பாழாய் போன மனது!

Comments

  1. //நள மகாராஜா//.... ஹ ஹா... என்ன ஒரு கேலி கிண்டல் ;
    ரசிக்க வைக்கும் வார்த்தைகள் .......

    மனது அதில் உருவாகும் எண்ணங்கள் அதனால் தோன்றும் வார்த்தைகள் அதனை வாக்கியபடுத்தி இருக்கும் நேர்த்தி ........

    சிம்ப்லி சூப்பர்ப் தேனு..

    ReplyDelete
  2. aha.. ithanai rasanai ulla antha priyavai parkanum pola iruke... :)

    ReplyDelete
  3. எனக்கும் தான் தேனு ! இந்தியா வரும்போது தெரிய படுத்துங்கள் .,சந்தித்து கொள்வோம் .,

    உங்களுக்கு எழுதி எனது ப்லோக்ளில் உள்ள உங்கள் மெயில் முகவரிக்கு அனுப்பி அது திரும்பி வந்து விட்டது

    எனக்கு RC நாவல்கள் ரொம்ப பிடிக்கும் .,உங்கள் பதிவுகள் அவர்களே வந்து எழுதியதை போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம் ., உங்களுடைய பன்முக படைப்பாற்றல்(multiple personality) என்னை வியக்க வைக்கிறது பா !

    வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  4. nice nice nice , unarchiganamana varigal , padikkum pothu kannil katchi alikkinrathu ,

    ReplyDelete

Post a Comment