Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 5

இருள் மறைத்த நிழல் (தேனு) - 5  

      கீழ்த்தளம் ஆள் அரவமின்றி இருந்தது. நல்லவேளை தாத்தா தன் குட்டி தூக்கத்தை முடித்துவிட்டிருந்தார். அறை வாயிலில் அவள் தயங்கி நிற்பதை பார்த்தவர் முகம் மலர, "வாம்மா, குளித்தாயிற்றா? அறை வசதியாக இருக்கிறதா?" என்று அக்கறையாக விசாரித்தார்.

               "ஆயிற்று தாத்தா. அறையும் வசதியாக..மிக வசதியாக இருக்கிறது" என்று தானும் முகமலர்ந்து உரைத்தாள் மிதுனா.

"ரொம்ப சந்தோஷம், அம்மா. விஜி முன்பு உபயோகப்படுத்தியது. அடுத்த அறையை விரிவுபடுத்தி அதற்கு மாறியபின் இந்த அறை உபயோகத்தில் இல்லை. விஜியுடையது என்பதால் சகல வசதிகளும் இருக்கும். அதனால் தான் அந்த அறையையே உனக்கு ஒதுக்கி தர சொல்லிருந்தேன்" என்றார்.

               வாய்க்கு வாய் 'விஜி', 'விஜி' என்கிறாரே.. யாராய் இருக்கும்? இவருக்கு ஒரே ஒரு பேரன் மட்டும் தான் என்று தாத்தா கூட சொன்னாரே..ஒரு வேலை ஆண் வாரிசு வகையில் இவன் ஒருவன் மட்டும் என்றிருப்பாரோ.. பார்த்தால் பேத்தியும் இருக்கிறாள் போல! திருமணமாகி இருக்குமோ? தன் தாத்தாவிடம் இந்த விஷயமாவது உருப்படியாக கேட்டு வந்திருக்கலாம் என்று காலம் கடந்து தோன்றியது மிதுனாவுக்கு.
               "உன் தாத்தாவும் இங்கிருந்தால் நன்றாக இருக்கும் அம்மா" நீண்ட பெருமூச்சுவிட்டார் பெரியவர். அவள் தாத்தா அவளோடு இருந்திருந்தால் அவள் எதற்கு இங்கே வர போகிறாளாம் என்று மிதுனா நினைத்தாலும் அதை சொல்லாமல் விடுத்தாள்.

             "என்..எங்களால் உங்களுக்கு தொந்தரவு...தாத்தா" அவள் முடிக்குமுன், "இல்லம்மா..இல்லை..நீ வந்திருப்பது எனக்கு ஒருவகை ஆறுதல் தாயே..தனிமையோடு போராடித் தவிக்கும் கிழவன் நான். சந்தானத்திடம் எவ்வளவோ எடுத்து சொல்லித்தான் உன்னை இங்கே அனுப்பி வைக்க சம்மதித்தான். உன் வருகை நான் விரும்பி கேட்ட வேண்டுகோள் தானம்மா. தொந்தரவே அல்ல " என்று  உணர்ச்சி பொங்க கூறி அவளைத்  திகைக்க வைத்தார் பெரியவர்.

             தாத்தா இதையெல்லாம் சொல்லவேயில்லையே.. விடுதிப் பேச்செடுத்ததுமே அவள் வாயை அடைத்தவர், அடுத்த நாள் திடுமென, "சுந்தரம் என் உயிர் நண்பன். உன்னை தன் சொந்த பேத்தி போல பார்த்துக் கொள்வான்" என்று மட்டும்தான் இரத்தின சுருக்கமாகக் கூறினார். அதுசரி! கடந்த ஆறேழு மாதங்களாகவே தாத்தா பேசுவது வெகுவாக குறைந்து போயிற்றே! எப்போதும் ஒரு கவலை..என்னவென்று வாய் விட்டு சொன்னால்தானே?! 'என்ன தாத்தா' என்று தன்னை மீறி எப்போதாவது கேட்டால்.. ஆதரவாய் அவள் தலையை வருடுவார். கம்மிய குரலில் சில சமயம் 'உனக்கு ஒரு வழி செய்யாமல்.. செய்ய வேண்டும்.." என்று கோர்வையின்றி தடுமாறுவார். அவர் அப்படித்  துன்புறுவதை காண, கேட்க சகியாமல் அவளும் மேற்கொண்டு எதுவும் துருவ மாட்டாள். தாத்தாவைப்  பார்க்க வேண்டும் போல ஏக்கமாக இருந்தது அவளுக்கு.

        அதைக் கண்டு கொண்ட பெரியவரும், பேச்சை திசை திருப்ப எண்ணி, "சரி வாம்மா,  பேசிக்கொண்டே சாப்பிடலாம்" என்று கூறி அவள் தொடர்வாள் என்ற நம்பிக்கையோடு அவர் பாட்டில் டைனிங் டேபிளுக்கு சென்று அமர்ந்தார். அவரது கடுவன் பூனை பேரனும்  வருவானோ?! அவன் வராவிட்டால் பரவாயில்லை என்றிருந்தது அவளுக்கு. அந்த 'விஜி'யும் வருவாளா? யாரையும் கண்ணில் காணோமே..பேரன் தான் சிடுமூஞ்சி..அந்த பேத்தியாவது அவள் வயதை ஒத்தவளாய் இருந்து, அவளோடு சிநேகம் பாராட்டினால் நன்றாக இருக்குமே. அந்த விஜியை  பற்றித்  தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலிட, சுற்றி வளைத்து, "வந்து.. இருக்கட்டும் தாத்தா..வி..விஜியும் வநதுவிடட்டுமே..விஜியோடே சேர்ந்தே சாப்பிடலாம்.." இழுத்தாள்.

           அந்த விஜி இன்னும் இந்த வீட்டில் தான் இருக்கிறாளா..என்று மறைமுகமாக அறிந்துகொள்ளும் முயற்சியாம்! தன் சாமர்த்தியத்தை மனதுக்குள் மெச்சியவள் அழுத்தமான காலடி ஓசை கேட்கவும் பேச்சை நிறுத்தி மாடிப்படிகளை ஏறிட்டாள். ஒற்றை புருவத்தை மேலே ஏற்றி அவளை ஏளனமாய் பார்த்தபடி, மடிப்பு கலையாத சட்டையின் கைகளை முழங்கைவரை மடித்துவிட்டவாறு படிகளில் கம்பீரமாக இறங்கி டைனிங் டேபிளை நோக்கி வந்து கொண்டிருந்தான் அவன் - அந்த பேரன்!

   "இப்போது என்ன தவறாக சொல்லிவிட்டேனாம்?! வீட்டு மனிதர்கள் வந்தபின் எல்லாருமாக சாப்பிடலாம் என்று சொன்னதில் என்ன பெரிய தவறை கண்டுபிடித்துவிட்டானாம்?! அவனது trademark ஏளனப் பார்வைக்கு பதிலடியாய்  அவள் இதழ்களில்  தோன்றிய இகழ்ச்சி, தாத்தா அவனைக்  காட்டி, "இதோ விஜியே வந்தாச்சே! " என்றதும் தோன்றிய வேகத்திலேயே மறைந்தது!

    கடவுளே! இவன் பெயர்தான் விஜியா?! முன்பின் தெரியாதவன்..அதுவும் சில மணிகளுக்கு முன் நடந்த அந்த சேலை சம்பவத்திற்குப்பின் .. எதுவுமே நிகழாதது போல..உரிமையோடு அவன் பேரை வேறு சுருக்கி..விஜி வரட்டும்..விஜியோடு சாப்பிடலாம்..என்று வெட்கமில்லாமல்...சீசீ..பின் அவன் ஏன் அவளை அப்படி ஏளனமாய் பார்க்கமாட்டான்?! ஏன்தான் இவன் பார்வையில் தான் இப்படித்  தாழ்ந்துகொண்டே போகிறேனோ என்று கழிவிரக்கம் பொங்கியது மிதுனாவுக்கு.

     சமாளித்துக்கொண்டு, இந்த ஒன்றிலாவது தன்னை சீர் செய்துகொள்ள நினைத்து, "நான்..வி..விஜி என்றால் உங்கள் பேத்தி என்று நினைத்தேன் தாத்தா.." என  அழாக்குறையாக சொல்லி முடித்தாள். அவள் ஏதோ பெரிய Joke சொன்னது போல வாய் விட்டு சிரித்தார் தாத்தா. அந்த விஜி அவளை ஒரு தரம் கூர்ந்து நோக்கியதோடு சரி.

   "பேத்தியா?!.. நல்லா நினைத்தாயம்மா. ஆளுயரம் ஆணழகனாய் நிற்கும் என் பேரனை.." என்று மீண்டும் சிரித்தவர், "இவன் பெயர் விஜய நளந்தன், அம்மா. நான் விஜி என்றுதான் அழைப்பது." என்றார்.
   அதை அறிமுகமாக ஏற்று அவனைப்  பார்க்க அவளுக்குத்  துணிவில்லை. அவனும் அதை எதிர்பார்த்ததாகத் தெரியவில்லை. அவளது விளக்கத்தை அவன் ஏற்றுக்கொண்டானோ இல்லையோ ஆனால் மறுக்கவுமில்லை. தாத்தாவிடம் மட்டும் பொதுப் பேச்சு பேசிவிட்டு விரைவாகவே உணவையும் முடித்துக் கொண்டு, "நான் அவசரமாக வெளியே செல்ல வேண்டும். Excuse me " என்றுப்   பொதுப்படையாக விடைபெற்றுச் சென்றான்.

Comments

  1. nice sketch of Mithuna in episode 4 and good buildup of friction between Viaji and Mithuna in episode 5.

    ReplyDelete
  2. Very good story. After i started reading it, i was unable to stop it till i finish.

    Very good narration and also the quote you specified was very good.

    Keep it up.

    ReplyDelete
  3. //"இப்போது என்ன தவறாக சொல்லிவிட்டேனாம்?! வீட்டு மனிதர்கள் வந்தபின் எல்லாருமாக சாப்பிடலாம் என்று சொன்னதில் என்ன பெரிய தவறை கண்டுபிடித்துவிட்டானாம்?! அவனது trademark ஏளனப் பார்வைக்கு பதிலடியாய் அவள் இதழ்களில் தோன்றிய இகழ்ச்சி, தாத்தா அவனைக் காட்டி, "இதோ விஜியே வந்தாச்சே! " என்றதும் தோன்றிய வேகத்திலேயே மறைந்தது!

    கடவுளே! இவன் பெயர்தான் விஜியா?! முன்பின் தெரியாதவன்..அதுவும் சில மணிகளுக்கு முன் நடந்த அந்த சேலை சம்பவத்திற்குப்பின் .. எதுவுமே நிகழாதது போல..உரிமையோடு அவன் பேரை வேறு சுருக்கி..விஜி வரட்டும்..விஜியோடு சாப்பிடலாம்..என்று வெட்கமில்லாமல்...சீசீ..பின் அவன் ஏன் அவளை அப்படி ஏளனமாய் பார்க்கமாட்டான்?! ஏன்தான் இவன் பார்வையில் தான் இப்படித் தாழ்ந்துகொண்டே போகிறேனோ என்று கழிவிரக்கம் பொங்கியது மிதுனாவுக்கு.//

    மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தைகளால் வர்ணிப்பது உங்களுக்கு நன்றாக வருகிறது ரசித்து படித்து கொண்டு இருக்கிறேன்பா

    ReplyDelete
  4. Priya,
    vara vara unga comments-ku rasigai agiten.. aduthu eppo enna comment tharuveengannu thrillinga irukku. :) I feel very happy to see someone enjoying the story line by line.. love it, Priya! Thanks so much for giving me this pleasure.

    ReplyDelete
  5. Thanks Thenu .,Such a good artist and writtress like you thinking about me is Nice.,I feel honoured Thenu...........

    ReplyDelete

Post a Comment