இருள் மறைத்த நிழல் (தேனு) - 16
மிதுனாவின் மறுநாள் வழக்கம் போலத் தான் விடிந்தது. இரவில் குழம்பிக் கிடந்த மனமும் தெளிவுற்றார் போலத் தான் இருந்தது. குளித்து உடை மாற்றும்போது மட்டும் அவன்..நளந்தன் தன் ஆடை பற்றி விமர்சித்தது நினைவிற்கு வந்தது. 'நல்லதாய் ஆடைகளாவது வாங்கிக் கொள்வாளே..'
தன் கையில் இருந்த ஆடையைப் பார்த்தாள். பரவாயில்லை ரகம் தான். வந்த புதிதில், சுடிதாரா, சேலையா என்ற சந்தேகத்தை தாத்தாவிடமே கேட்ட போது, அவர் "நீ அங்கே உன் வீட்டில் என்ன உடுப்பாயோ அதைத் தாராளமாக இங்கேயும் அணியலாம்மா..நான் தான் இது உன் வீடு என்று சொன்னேனே" என்றார்.
அதனால் இப்போதெல்லாம் அவள் சுடிதார் தான் அணிவது. நேற்று அணிந்திருந்ததும் சுடிதார் தான். ஆனால் பழையது. அவள் கொண்டு வந்ததே ஒரு பத்து, இருபது உடுப்பு தான். மூன்று மாத தங்கலுக்கு அது குறைவோ?!..கொண்டு வந்த போதே அவை கொஞ்சம் பழையன. வந்த இந்த மூன்று வாரங்களாக அவற்றையேத் துவைத்துத் துவைத்து உடுத்தி, கொஞ்சம் மங்கித் தெரிந்தன..
அதிலும் நளந்தனின் குறிப்பிற்கு பின் ரொம்பவே மங்கித் தெரிந்தன.
அதென்ன அவன் கருத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் தருவது?! தன்னையேக் கடிந்து கொண்ட மிதுனா, ஒரு பிடிவாதத்துடன் கையிலிருந்த அந்த சுடிதாரையே அணிந்துகொண்டாள். இப்போதைக்கு அவளுக்கு வேறு 'Option-ம்' கிடையாதுதான்..ஆனால், இது தான் நான். இது தான் என் நிலைமை..இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை' என்ற நிமிர்வோடு இருக்கலாம் தானே?
இருப்பினும், விடைத் தாள் திருத்திய பணம் கையில் இருந்தது. அதோடு தன் தாத்தா அவளிடம் கொடுத்திருந்தக் கைச்செலவு பணமும் தாராளமாகவே இருந்தது. சுந்தரம் தாத்தாவிடம் சொல்லி இந்த வாரத்தில் ஒரு நாள் கடைத்தெருவிற்கு சென்று ஓரிரண்டு உடைகளாவது நல்லதாய் எடுத்துக் கொள்ளவேண்டும்.. தன் சுய மரியாதைக்காகவாவது நல்ல உடைகளாய்... இன்னும் கூட சில பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது.
தாத்தாவின் சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு அறை வாயிலை அடைந்தவள், இந்த முறை ஞாபகமாக கதவு திறந்தே இருந்தாலும், இருமுறை மென்மையாகத் தட்டி, "வரலாம்" என்ற நளந்தனின் ஆழ்குரலைக் கேட்ட பின்பே உள்சென்றாள். இருபத்தி ஒரு வயது பட்டாம்பூச்சி மனம் நேற்றிரவே தரை இறங்கிவிட்டிருந்ததால் இன்று அவனது முறுவலை இயல்பாய் ஏற்று பதில் முறுவல் தர முடிந்தது.
"உங்களுக்கும் இங்கேயே டிபன் எடுத்து வரவா?" மென்குரலில் வினவினாள் மிதுனா.
"உனக்கும் சேர்த்து எடுத்து வர சொல்லேன்" என்றான் அவன்.
"இல்லை..நான் இன்று விரதம்..உங்களுக்கு மட்டும் சொல்லி விடுகிறேன் " என்று வாய்க்கு வந்ததை சொல்லி விட்டு நகர முனைந்தாள் அவள்.
"விஜிம்மா, இன்று சாயந்திரம் இவளை வெளியே அழைத்துப் போகிறாயா? கடைத் தெரு எங்கானும்..மீனாம்மா, உனக்கும் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் வாங்கிக் கொள்ளலாமே.." திடுமெனத் தாத்தா சொல்ல அங்கே ஒரு சங்கடமான மௌனம் நிலவியது.
"இல்லை.."என இருவரும் ஒரு சேர மறுப்புக் கூற ஆரம்பிக்க, நளந்தன் கண்ணியவானாய் அவள் பேச விட்டுக் கொடுத்தான்.
"நானே போய் கொள்வேன் தாத்தா.."
"புது இடத்தில் எப்படியம்மா.."
"டிரைவர்.." என்று இழுத்தவள் "அடுப்பில் பால்..நான் போகிறேன் தாத்தா " என்று கூறி அங்கிருந்து விரைந்து வெளியேறினாள். நளந்தனும் மறுத்துக் கூறத்தானே முனைந்தான் - அதன்பின்னும் அவனோடு செல்ல அவள் தன்மானம் இடம்தரவில்லை.
அன்று சமையல்காரர் விடுப்பு எடுத்திருந்தார். அதனால் சமையல் அவள் பொறுப்பு. பொதுவாக அவர் விடுப்பு எடுக்க வேண்டியிருந்தால் வேறு ஆளுக்கு அவரே ஏற்பாடு செய்துவிடுவார். ஆனால் மிதுனாதான் தானே பார்த்துக் கொள்வதாகக் கூறி அவரைத் தடுத்துவிட்டாள். இது சுந்தரத்திற்கு கூடத் தெரியாது.
அவரை தன் சொந்தத் தாத்தாவாகவே இந்த குறுகிய காலத்தில் நினைத்துப் பழகிவிட்டிருந்தவளுக்கு, இந்த வீடும் அந்நியமாய் அன்றுவரை அவள் கருத்தில் தோன்றவில்லை. அதாவது, நளந்தன் 'நல்ல சம்பளத்திற்கு' அவளை பரிந்துரை செய்யும்வரை!
மனம் கனக்க சமையலைக் கவனித்தாள் மிதுனா. ஏதோ சமையல்காரியாக நிலையிறங்கிப் போய்விட்ட மாதிரியும் கூட இருந்தது. 'சே! சே!' இது என்ன நினைப்பு! தாத்தா தன் மேல் உண்மையான பாசம் வைத்திருப்பவர். தன் தாத்தாவை ஒத்த வயதுடையவர். அவரது நெருங்கிய நண்பரும் கூட. தனக்குத் தஞ்சமும் அளித்திருப்பவர். அவருக்கு சமைப்பதில் என்ன இழிவு?! மனதைத் தேற்றிக் கொண்டாள் மிதுனா. கூடவே, ஒரு நல்ல உத்தியோகம், படிப்பிற்கு ஏற்ற வகையில், விரைவாக தேடிக் கொள்ளவேண்டும்..சீக்கிரமாக..என்ற எண்ணமும் உறுதிப் பெற்றது.
பலவாறு அல்லல்பட்ட மனம் மாலையில் நிதானப்பட, துவைத்தத் தன் துணிகளை கட்டிலில் உட்கார்ந்து மடித்து வைத்துக் கொண்டிருந்தபோது, அழுத்தமான காலடிகளும், அதைத் தொடர்ந்து கொஞ்சமே சாத்தியிருந்த அவளது அறை கதவில் சன்னமாய் இரு தட்டலும் கேட்டது. ஒரு வினாடி தாமதத்திற்குப்பின், கதவை முற்றிலுமாகத் தள்ளித் திறந்து கம்பீரமாக நின்றுகொண்டிருந்தான் நளந்தன்.
படபடத்து எழ யத்தனித்தவளை கையமர்த்தி, " நானும் ஷாப்பிங் செய்ய வேண்டி இருக்கிறது. சாலமனும் இரண்டு மூன்று நாள் லீவாமே, தாத்தா சொன்னார்..இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பினாயானால், நானே கடைத்தெருவிற்குக் கூட்டிச் செல்வேன். அரை மணி நேரம் போதுமல்லவா? எனக்கு இரவில் ஒரு டின்னர் செல்ல வேண்டும்.." என்றான்.
அவன் பேசப் பேச எழுந்தே விட்டவள் அவன் முகத்திற்கு நேராய் என்ன சொல்லி மறுப்பது என்று தெரியாமல் விழித்தாள். அவனோடு செல்லவும் சங்கோஜம்..அவள் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு, "கீழே வந்து விடு" என்று சொல்லிச் சென்றான் நளந்தன்.
டிரைவரும் லீவு என்று சொன்னபின், 'இல்லை இல்லை அவன் லீவு முடிந்து வரட்டும். நான் அவனோடு தான் போவேன்..உன்னோடு வரமாட்டேன்' என்று வறட்டு பிடிவாதம் செய்வதும் சரியாகப்படவில்லை.
சரி, அவனுக்கும் ஏதோ வேலை இருப்பதாக சொன்னானே. வழியில் இறக்கிவிடப் போகிறான்.இதிலென்னப் பெரிய யோசனை. எப்படியும் சில அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வேண்டியிருக்கிறது..இன்றே போகலாமே!
பொதுவாகவே, மிதுனா வெளியே கிளம்ப என்று பிரத்தியேக அலங்காரமெல்லாம் செய்து கொள்ள மாட்டாள். வசதி இல்லை என்பது உண்மை என்றாலும், இயற்கையிலேயே நல்ல எழில் மிக்க மிதுனாவிற்கு அதிக அலங்காரம் தேவையில்லை என்பதேப் பொருத்தமான காரணம்.
அதிலும் முன் தினம் நளந்தனின் 'நல்ல ஆடை' குறிப்பு ஏற்படுத்திய உறுத்தலின் விளைவாக ஒரு கவனத்துடனேத் தலை வாரி, மையிட்டு, பொட்டிட்டு, இருப்பதில் நல்ல ஒரு சேலையையே மிக நேர்த்தியாக அணிந்திருந்தாள். அதனால் அவன் கடைக்குச் செல்வது பற்றி கூறிய போதே அவள் 'ரெடி' தான்.
இருப்பினும், பரக்காவெட்டி போல, 'நீ எள் என்றால், நான் எண்ணையாக்கும்' என்று அவன் முன் அக்கணமே சென்று நிற்க அவளுக்கு விருப்பமில்லை. நிதானமாகவே, மீதமுள்ளத் துணிகளையும் மடித்து, ஹாங்கரில் மாட்ட வேண்டியவற்றை மாட்டி வார்டுரோபில் தொங்கவிட்டு, அரை மணிக்கு ஐந்து நிமிடமிருக்கையில் கீழிறங்கி ஹாலில் அவன் வருகைக்காகக் காத்திருந்தாள்.
சொன்னபடி அரைமணி நேரத்தில் அங்கு வந்த நளந்தனின் பார்வையில் ஒரு மெல்லிய மெச்சுதல் இருந்தது. பின்னே?! சொன்ன நேரத்தில் கிளம்பிவிட்டாளே! அவனது மெச்சிய பார்வையிலேயே உள்ளம் குளிர்ந்தது, அவள் என்ன தடுத்தும் முடியாமல்!
மிகையற்ற அவளின் அலங்காரத்தையும், எழிலுருவத்தையும் அவன் இனிய ரசனையுடன் நோக்கியது மேலும் நெஞ்சுக்குள் குளிர் பரப்பியது. "குட்" என்று சுருக்கமாய் தன் ரசனைக்கு முத்தாய்ப்பு வைத்தான் நளந்தன். அந்த 'குட்' அவளது 'Punctuality'-கா, 'Personality'-கா என்று புரியாது விழித்தது நேற்று தடுக்கி விழுந்து தரை இறங்கிய அந்த இருபத்தியொரு வயது பட்டாம்பூச்சி! மனப்போராட்டத்தை மறைத்து, பெரிய ரசிகன் தான் என்று கிண்டலாய் பாவித்துக் கொள்ள முயன்றாள் மிதுனா.
மனம் பண்பட்ட மிது
ReplyDeleteசுய மரியாதை உள்ள மிது
தனது நிலை உணர்ந்த மிது
அதற்க்காக வெட்கபடாமல் "இது தான் என் நிலைமை..
இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை' என்ற நிமிர்வோடு இருக்கலாம் தானே" என்று
இருக்கும் தன்னம்பிக்கை உள்ள மிது
சமையல்காரியாக நிலையிறங்கிப் போய்விட்ட மாதிரி நினைத்த மிது
பின் மனதை தேற்றி கொண்ட மிது
ஷாப்பிங் செல்ல நேர்த்தியாக அலங்கரித்து கொண்ட மிது
அந்த 'குட்' அவளது 'Punctuality'-கா, 'Personality'-கா என்று புரியாது விழித்த மிது ! மனப்போராட்டத்தை மறைத்து, பெரிய ரசிகன் தான் என்று கிண்டலாய் பாவித்துக் கொள்ள முயன்ற மிது.
எனக்கு எல்லா மிதுவையும் தான் பிடிக்கிறது
பதிவுக்கு நன்றி தேனு
ஒரு கதையை படித்து உள்ளம் எப்படி கொள்ளை போகிறது என்பது பற்றியும்
ReplyDeleteஎனது கருத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன்!
கதா பாத்திரங்களின் சாயல் நமக்கு இருப்பதாக உணர்வது
கதையின் மைய கருத்து ;அதன் இனிமையான முடிவு
கதை மாந்தர்களின் உரையாடல் ,கதை நடக்கும் இடம் ,ஊர் ,தோட்டம் ,பேச்சு வழக்கு
இதில் மனம் ஒன்றி போவது
மனமென்ற உள்ளம் ,அதில் உருவாகும் எண்ணங்கள் ,அதில் தோன்றும் உணர்வுகள்
அதில் உருவாகும் வார்த்தைகள் ,அதில் வெளிபடுத்தும் பாதிப்பு ,அந்த
வார்த்தை ஜாலங்கள் படிப்பவர்களை பரவச படுத்துவது
இது போன்ற நிகழ்வுகள் தான் அந்த கதையை நினைக்கும் தோறும் மனதிற்கு நெகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் அளிக்கின்றன
அது போன்று தான் இந்த கதையும் என் போன்றோருக்கு நிறைவையும் மகிழ்வையும் கொடுக்கின்றன
இது தொடர வேண்டும் என்பது தான் எனது விருப்பம் ;வேண்டுதலும் கூட !
நன்றி தேனு
எல்லா மிதுவும் உங்களுக்கு பிடிக்குதுன்னா...
ReplyDeleteநீங்களும் ஒரு மிது தான். :)
இப்படி ரசிக்கறீகளே.. நன்றி-கா.
Sure-ka. கண்டிப்பா எழுதறேன்.
ReplyDeleteநீங்க இப்பிடி ரசிச்சு படிக்கறது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு தெரியுமா..
ஒரு வருடத்திக்கு பிறகு திரும்பவும் படிக்க ஆரம்பித்து விட்டேன் தேனு :))
ReplyDeleteWhen u complete it
ReplyDeletesuper but new story write pls.i read this story 15 times.ok mam.
ReplyDeleteCan any1 send me a link to read this full story. I am much eager to read this please help me.....
ReplyDeleteHi, This is the author. Pls click on the blog archive to the right hand side on the blog. You will see links to all episodes. Thanks
Delete