இருள் மறைத்த நிழல் (தேனு) - 3
முத்துவுக்கு என்ன குழப்பமோ தெரியவில்லை, தன் சின்ன முதலாளி சென்ற திசையையே சில வினாடிகள் பார்த்தவன், "சரி தான்.. பெரியவர் எழ இன்னும் நேரமிருக்கு.. எப்படியும் பெரிய அய்யா சொன்னபடி தானே.. சின்ன அய்யாவும் அதானே சொன்னார்.." என்று தனக்குத்தானே பேசிக்கொண்டது அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ முடிவுக்கு வந்த முத்து, "வாங்கம்மா" என்று அவளை மீண்டும் வீட்டினுள் மாடி நோக்கி அழைத்து சென்றான். ஆனால்.. அவனுடைய 'சின்ன அய்யா' கீழே ஒரு அறை என்று தானே சொன்னான்?! மனம் தன் பாட்டில் குழம்பினாலும், கேள்வி ஏதும் கேட்காமல், மாடியில் அவன் காட்டிய அறைக்குள் சென்றாள். கையில் இருந்த பெட்டியை தரையிலும், தோளில் கிடந்த தன் கைப்பையை அருகிருந்த ஒரு மேஜையிலும் வைத்துவிட்டு, "ரொம்ப thanks, முத்து" என்றாள்.
முகமலர்ந்த முத்து, "இருக்கட்டும்மா, எதுவும் தேவை என்றால் ஒரு குரல் கொடுங்க, ஓடி வந்துடுவேன்" என்று பவ்யமாய் கூறி கீழே இறங்கி சென்றுவிட்டான். கதவை சற்று தள்ளியவுடன் அதுவே மூடிக்கொண்டது. auto-lock போல! AC பொருத்தப்பட்ட அந்த அறையை நோட்டம்விட்டவள் ஒரு விருந்தாளியாக வந்த தனக்கு இவ்வளவு வசதியான அறையை ஒதுக்கியிருக்கிறார்களே என்று அதிசயித்துப்போனாள். சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு உயர் தர நட்சத்திர ஹோட்டல் அறை போன்று இருந்தது. சமையலறை ஒன்று தான் இல்லை. ஆனால் ஒரு குட்டி microwave-ம், mini fridge-ம் அந்த குறையை ஈடுகட்டின. ம்.. பணம் இருந்தால் எதுவும் செய்யலாம் தான்! ஊரில் தாத்தாவுடன் வசித்த அந்த சின்ன வீடு நினைவில் வந்தது. தலையை சிலுப்பினாள் மிதுனா. அன்பு ஒன்றே பிரதானமாக தாத்தாவோடு வசித்த, இனியும் வசிக்கப்போகும் இனிய இல்லம் அது... அதை போய் இந்த தங்க கூண்டோடு ஒப்பிட்ட தன் மடமையை என்ன சொல்ல?!
வாழ்ந்து கெட்டவர் அவள் தாத்தா சந்தானம். தொழிலில் நொடித்துப்போனாலும், வயது பெண்ணான பேத்தியோடு கௌரவமாக வாழ தேவையான அளவிற்கு பணம் கையில் மிஞ்சியது. பணம் மட்டும் தான். மற்றபடி நிம்மதியையும், கௌரவத்தையும் கெடுக்கத்தான் இறந்து போன மகனின் இரண்டாம் தாரத்தின் வழியில் ஒரு முப்பது வயது மலை மாடு வந்து தொலைத்ததே! மிதுனாவை கட்ட வந்த முறை மாமன் என்று சொல்லிக்கொண்டு வேறு!
அந்த குடிகார வரதனுக்கு பயந்துதான் தாத்தா அவள் விடுதியில் தங்க மறுத்திருப்பார் என்று மிதுனாவுக்கு தோன்றியது. ஆனால் அவ்வளவு அவள் பாதுகாப்பிற்காக பார்ப்பவர், அவளை யார் பாதுகாப்பிலாவது இப்படி விட்டுவிட்டு, காசி யாத்திரை செல்ல துடித்ததுதான் அவளுக்கு புரியவில்லை.
ச்சு..பாவம் தாத்தா. தனக்கென இதுவரை ஒன்றும் செய்து கொண்டதில்லை. இந்த காசி பயணம் தவிர. இளவயதிலேயே மனைவியை இழந்த பின் தன் ஒரே மகனுக்காக மறுமணம் செய்து கொள்ளாதவர். தாய்க்கு தாயாய், தந்தைக்கு தந்தையாய் அவர் வளர்த்த அதே மகன், தன் முப்பதாவது வயதில், அவனது மனைவி மறைந்த அடுத்த வருடமே வேறு பெண்ணை பிடிவாதமாய் மணந்து வந்து காலில் விழுந்ததும், மனம் நொந்து, பேத்தியின் நல்வாழ்விற்காக தள்ளாத வயதில் மீண்டும் ஒரு முறை மிதுனாவுக்காக தாயாய் தந்தையாய் தன்னையே அர்ப்பணித்தவர். அவரது சொந்த ஆசையாய்... ஒரே ஆசையாய் அவர் அவளிடம் வாய்விட்டு சொன்னது இந்த காசி யாத்திரை ஒன்றுதான்.
அதற்கும் தான் எவ்வளவு முன்னேற்பாடு! தன் பால்ய சிநேகிதரான இந்த சுந்தரம் தாத்தாவிடம் பேசி, பேத்தி தங்கிக்கொள்ள பாதுகாப்பு செய்து, கூடவே படித்த படிப்பிற்கும் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து தர சொல்லி.. வேலை.. அடடா.. அதுபற்றிக்கூட கீழே சுந்தரம் தாத்தாவிடம் பேச வேண்டுமே.. பரபரத்தது அவளுக்கு. உடை விஷயத்தில், இன்ன பிற விஷயங்களில் ரொம்பவும் கட்டுப்பாடு விதித்த தாத்தா, அவள் வேலைக்கு போக விரும்பியதை மட்டும் தட்டிப்பேசியதே இல்லை! சுய சம்பாத்தியம் வெகு அவசியம் என்று நினைத்தாரோ?! இதே சுந்தரம் தாத்தாவிடம் சொல்லி இருப்பதாகவும், அவர்களது கம்பெனியிலோ அல்லது அவர்களுக்கு தெரிந்த இடத்திலோ சுந்தரமே அவளுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்வார் என்றும் சந்தானம் சொல்லியிருந்தார். இன்றே எப்படியாவது சுந்தரம் தாத்தாவிடம் வேலை பற்றி பேச வேண்டும். அப்படியே.. முடிந்தால் paying guest-ஆக தங்கி கொள்ள விருப்பம் என்றும் சொல்லிவிட வேண்டும் என்று மனதுக்குள் குறித்துக்கொண்டாள்.
தாத்தா வரும்வரை இங்கே தங்கி வேலைக்கும் போய் வர வேண்டியது. அவர் வந்தவுடன், அலுவலகத்திற்கு அருகாக சக்திக்கு தகுந்த அளவில் ஒரு வீடு பார்த்துக்கொண்டு அவரோடு மரியாதையாக இங்கிருந்து நகர்ந்து விடவேண்டும் என்று முடிவு செய்த பின்தான் மனம் லேசானது. ஏனோ அந்த 'சின்ன அய்யா'வின் - சின்ன அய்யாவா? சிடுசிடு அய்யா என்றால் பொருத்தமாக இருக்கும் - அந்த அவனின் புண்ணியத்தால் வந்த ஒரு மணி நேரத்திலேயே தன்னை 'அழையா விருந்தாளியாக' உணரத் தொடங்கியிருந்தாள் மிதுனா.
" சுந்தரமும் அவன் பேரனும் தான் அம்மா அந்த வீட்டில்" என்று தன் தாத்தா சொன்னாரே.. அப்போதெல்லாம் அது ஒரு பொருட்டாக அவளுக்குப் படவில்லை. இப்போதோ, அந்த பேரனின் ஏளன பார்வையும், கடுமையும் நெஞ்சில் நெருட, இவனோடு ஒரே வீட்டிலா என்றிருந்தது. அதே வீட்டிலேயே அவனும் இருந்தாலும், எது வேண்டும் என்றாலும் அந்த முத்துவை வரந்தாவிலோ தோட்டத்திலோ தேடி சென்று கேள் என்று அவன் சொன்னது, 'இனி என்னை தொந்தரவு செய்யாதே' என்று சொல்லாமல் சொல்லியதாக அவளுக்கு உறுத்தியது. சரியான முசுடு! பெரிய மன்மதன் என்று நினைப்பு! வாய் முனுமுனுக்கையிலே மனம் 'மன்மதனே தான்' என்று இடைசெருகியது!
மன்மதனோ அன்றி வெறும் மனிதனோ! ஓரிரு மாதங்களில் ஜாகையை மாற்றிக்கொண்டு நடையைக் கட்ட போகிறாள். அதுவரை இவன் கண்ணில் படாமல் ஒதுங்கி கொள்ள வேண்டும். அவ்வளவே! அவன் தாத்தா நல்ல மாதிரியாகத்தான் தெரிகிறார். உடல் ஒத்துழைத்திருந்தால் இன்னும் கூட நன்றாக அப்போதே பேசியிருப்பார். அவரது களைத்த தோற்றம் நினைவில் வந்தது. பாவம் பெரியவர். அவருக்கு போய் இப்படி ஒரு முசுட்டு பேரன்! அவரிடம் கூட சிரிப்பானோ என்னவோ?! அவள் உள்ளே நுழைகையில் கூட 'வேறு பேச' சொல்லி சலிப்பாகதானே சொன்னான்!
எண்ணம் அவனையே சுற்றி சுற்றி வர, சே! முதலில் சுந்தரம் தாத்தா கூறியது போல ஒரு குளியலாவது போட்டால் தான் புத்தி உருப்படியாக யோசிக்கும் என்று மிதுனாவுக்கு தோன்றியது. ஆனால் அந்த attached bathroom-ல் குளிக்கும் போதும், 'அப்படி அவனுக்கு சலிப்பூட்டுமாறு என்னத்தைதான் இந்த தாத்தா பேசியிருப்பார் ?!' என்று அவள் குரங்கு மனம் அவனிலேயே நின்று குறுகுறுத்தது.
Hi Thenu,
ReplyDeleteI'm a big fan of Ramanichandran.I have seen your blog yesterday and start reading your novel.I feel like reading ramanichandran's novel.Your novel looks interesting.
Good work.My Best Wishes...
//சரியான முசுடு! பெரிய மன்மதன் என்று நினைப்பு! வாய் முனுமுனுக்கையிலே மனம் 'மன்மதனே தான்' என்று இடைசெருகியது!//
ReplyDeleteபடிக்கும் போது வாயில் புன்னகையும் மனதில் சுவாரஸ்யமும் வருகிறது
நல்ல பதிவு தேனு
hai,
ReplyDeleteExcellent writings
aarambame romba nalla irrukku innaiku
ReplyDeleteYour manuscript is outstanding.keep writing.
ReplyDelete