Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 38

இருள் மறைத்த நிழல் (தேனு) - 38
 

    மிதுனாவின் 'ஹலோவிற்கு' பதிலாக "சுந்தரம் சார் இருக்காருங்களா?" என்றது ஒரு பெண் குரல்.

"அவர் வெளியே போயிருக்கார். வரும் நேரம் தான். என்ன விஷயம் என்று சொல்லுங்கள் நான் வந்ததும் சொல்லிவிடுகிறேன்" என்றாள் மிதுனா.

சற்று தயங்கிய அந்த பெண், "இல்லைங்க.. இது வாராவாரம் நாங்கள் செய்யும் கால் தான். சுகம் ஹாஸ்பிடல்லில்  இருந்து கூப்பிட்டதாக சொல்லுங்க போதும்.. முக்கியமான விஷயம்.. மறந்துடாதீங்க.. நிறைய  தடவை டிரை செய்து இப்போ தான் லைன் கிடைத்தது. எதற்கும் அவரையே கூப்பிட சொல்லுங்களேன்.. எனக்கு மறுபடியும் லைன் கிடைக்குமா என்று தெரியவில்லை..இங்கே ஹாஸ்பிடல்லிலும்  நிறைய கூட்டம்.. " என்றாள்.

சுகம் மருத்துவமனை என்றால்.. சுகவனம் சாருடையது.. முக்கியம் என்று வேறு சொல்கிறாளே.. மிதுனா வற்புறுத்தினாள்.
"முக்கியம் என்று வேறு சொல்கிறீர்கள்.. இந்த கிராமத்தில் சிக்னல் எப்போது எடுக்கும் எடுக்காது என்றும் சொல்ல முடியாது..  விவரம் சொன்னீர்கள் என்றால் நானே தெரிவித்துவிடுவேன்"

"வந்து.. சுந்தரம் சார் கிட்டே தான் எதுவும் சொல்ல வேண்டும் என்று  உத்தரவு.. இருந்தாலும் நீங்கள் சொல்வதும் சரியாக தான் இருக்கிறது.. சரி.. பெரியவர் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லைன்னு சொல்லுங்கள்.. சொல்ல போனால் பின்னேற்றம் தான்." என்றாள் அவள்.

சுகம் மருத்துவமனையில் சுந்தரத்திற்கு தெரிந்த பெரியவரா? மனதில் ஏதோ அபாய மணி அடிக்க, "பெரியவரா?" என்று புரியாமல் கேட்டாள்.

"அது.. சுந்தரம் சாருக்கு தெரியுங்க.. அவருடைய நண்பர்.. பெயர் சந்தானம். கொஞ்ச நாளுக்கு முன்பு டாக்டர் சுகந்தனும், சுந்தரம் சாரும் இங்கே அட்மிட் செய்தார்கள்" என்று இடியைத்  தூக்கிப் போட்டாள் அந்த பெண்.

கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது மிதுனாவுக்கு. சுவரோடு சரிந்தவள், எச்சில் கூட்டி விழுங்கி, மேல் விவரம் கேட்டாள். "தாத்.. அவர் அந்த பெரியவருக்கு.. உடம்புக்கு என்ன?"

அந்த பெண் மேலும் தயங்க, சட்டென சுதாரித்தாள் மிதுனா. இங்கு சுந்தரமோ, நளந்தனோ வந்து விவரம் தரும் வரை பொறுக்க முடியாது. அதோடு எல்லோரும் கூட்டு கள்ளர்கள். உண்மை மறைக்கப்படலாம். விவரம் அறிய ஒரே வழி இந்த டெலிபோன் பெண் தான்.

தன் அதிர்ச்சியை கூடுமானமட்டும் குரலில் காட்டாது, "பாருங்கள் சிஸ்டர், நானும் ஒரு நர்ஸ் தான். சுந்தரம் சார்-ஐ கவனித்துக் கொள்கிறேன். என்னிடம் நீங்கள் தைரியமாக விவரம் சொல்லலாம். டாக்டர் சுகன் தான் என்னை இங்கு அறிமுகம் செய்து வைத்தார். நான் பக்குவமாக சுந்தரம் சாருக்கு சொல்கிறேன். நீங்கள் மேற்கொண்டு விவரம் சொல்லுங்கள்" என்றாள்.

டாக்டர் சுகந்தனை உரிமையோடு அவள் சுகன் என்றதும், அவர் அறிமுகத்தில் வேலைக்கு சேர்ந்தவள் என்று சொன்னதும், கூடவே தன் இனத்தை சேர்ந்தவள் என்பதும் மிதுனாவின் மேல் அந்த நர்சிற்கு ஒரு இளக்கத்தை ஏற்படுத்தியது.

"அவருக்கு 'Multiple Scelerosis' நோய். இது ஒன்றும் புது விவரம் அல்ல.. சுந்தரம் சாருக்கு தெரியும். நோய் முற்றிய நிலையில் தான் இங்கே சேர்த்தனர். என்ன ஒன்று, சில நாட்களாக இங்கே இவருக்கு அடிக்கடி நினைவு தப்புகிறது. இந்த ஒரு வாரமாக டாக்டரும் ஊரில் இல்லை. அவர்கள் வீட்டிலும்  எல்லாரும் வெளியூர் சென்றுவிட்டதாக கேள்வி.. அது தான் சுந்தரம் சாருக்கு சொல்லி.. உற்றார் உறவினருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார் என்றால்.. காலம் கடந்துவிடக் கூடாது பாருங்கள்.." என்று கரிசனமாக சொல்லி பேச்சை முடித்தாள் அந்த நர்ஸ்.

மிதுனா பேயறைந்தார் போல நின்றாள். காலம் கடந்து விடக் கூடாதா? ஐயோ! தாத்தா நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்பதை தானே அந்த பெண் சூசகமாக சொல்கிறாள்!

காலம் கடந்து விட்டதே! காலத்தை கடத்தி விட்டார்களே! சுந்தரம், சுகவனம், நளந்தன், சுகந்தன், சுகிர்தன், சுகுனம்மா.. என்று அத்தனை பேருக்கும் விஷயம் தெரிந்திருக்க வேண்டும்.. மிதுனாவிடம் மட்டும் சொல்லாமல் விடுத்தார்களே.. எல்லாரும் மறைத்துவிட்டார்களே! ஏன்? ஏன் மறைத்தார்கள்? எப்படி மறைக்க முடிந்தது? மாபாதகம் இல்லையா? மரண நோய் தாக்கிய ஒருவரை அவரின் ஒரே சொந்தத்திடம் இருந்து பிரித்து.. அனாதையாக எங்கோ ஒரு மருத்துவமனையில் தள்ளி விட்டு.. சதிகாரர்கள்.. உள்ளம் கொதித்தது.

எத்தனை பொய்கள்.. காசி யாத்திரையே பொய் தானா? அப்படியானால்.. தன் தாத்தாவின் திட்டம் தானா இது? கடைசி காலத்தை ஒரே பெயர்த்தியோடு கழிக்க மாட்டாது இது என்ன மடத்தனம்? அவர் தான் இந்த பித்தலாட்டத்திற்கு சூத்திரதாரியா?

அங்கங்கே தலை காட்டிய சந்தேகங்கள்.. அவ்வப்போதே  அவளும் உரிய நேரம் எடுத்து யோசித்திருப்பாள் என்றால்.. இப்படி தாத்தாவைத் தனியே தவிக்கவிட்டிருக்க வேண்டாமே.. தனக்காக என்று எதுவும் செய்து கொள்ளாத தாத்தா காசி பயணத்தில் உறுதியாக இருந்தது முரணபட்ட்தே.. எங்கே அதை ஆராய்ந்து பார்த்திருக்க கூடாதா அவள்?! அதன் பின்னும் சந்தானம் என்றாலே சுந்தரம் கண் கலங்கினாரே.. அப்போதாவது ஒரு காசி பயணத்தின் பிரிவிற்கா இத்தனை கலக்கம் என்று அவள் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும்.. பயணத்தை தள்ளி போட்டுக் கொண்டே வந்ததும்.. பயணக் கட்டுரை போல பட்டும் படாமல் எவர் கையெழுத்திலோ வந்த கடிதங்கள்.. முட்டாள் போல நளந்தன் சொன்னதை அப்படியா ஒருத்தி கண்ணை மூடிக் கொண்டு நம்புவாள்?! இப்படி ஒரு அசடாக இருக்கிறாளே என்று தான் அடிக்கடி அப்படி கரிசனமாக பார்த்தானா? உன் தாத்தாவின் நிழலில் எத்தனை நாள் இருக்க முடியும் என்றானே? சுயமாக நில் என்பது அல்லாமல், உன் தாத்தாவே இல்லாமல் போய் விடுவாரே  .. நீ எங்கே நிற்பாய் என்று கேட்டானா? ஐயோ.. தாத்தா உயிருக்கு போராடிக்கொண்டு இருக்க.. இங்கே இவள் திருவிழா கொண்டாட...

அக்கணமே ரயிலேறி பெங்களூரு செல்ல துடித்தாள் மிதுனா. சுந்தரம் தாத்தாவிடம் சென்று, "ஏன் இப்படி செய்தீர்கள்? நான் என் தாத்தாவோடு இல்லாமல் போன நாட்களை உங்களால் தர முடியுமா?" என்று கத்த வேண்டும் போல இருந்தது. எத்தனை பொன்னான நாட்கள்.. ஆத்திரம் அழுகையாக பெருக்கெடுத்தது. அரும்பாடுபட்டு அடக்கினாள்.

தாத்தா வரும் நேரம் தான். அவர் வரும் வரை தாமதிக்ககூட மனம் பொறுக்கவில்லை. ஆனால்.. பெங்களூரில் சுகம் மருத்துவமனை என்பது மட்டும் தான் அவளறிந்த விவரம். அதை மட்டும் வைத்துக் கொண்டு.. கண்டுபிடித்து விடலாம் தான்.. முதலில் இங்கிருந்து கிளம்ப வேண்டும்.. இந்த கிராமத்தில் போக்குவரத்து எவ்வளவு எளிது.. எத்தனை மணி நேர இடைவெளியில் பஸ்கள் வந்து போகும்.. என்பன போன்ற விவரங்களும் வேண்டுமே.. இப்போதே இருட்ட தொடங்கிவிட்டது.. மனம் பலவாறு வழி தேடி அலைந்தது.

கண்ணீர் திரையினூடே சுபலா அவளை நோக்கி வருவது தெரிந்தது. சுபலாவிடம் பேசும் மனநிலை மிதுனாவுக்கு இல்லை. அவள் முன் அழவும் விருப்பமில்லை. கஷ்டப்பட்டு அழுகையை அடக்கியவள் சுபலாவின் முகத்தை தவிர்த்து தன் பெட்டிக்குள் எதுவோ தேடுவது போல குனிந்து கொண்டாள்.

அருகே வந்த சுபலாவோ ,
"மிதுனா, அந்த பக்கத்து அறையெல்லாம் நான் சரி பார்த்துவிட்டேன். வலப்பக்கம் நாம் தந்கும் அறைகள். மொத்தம் நான்கு. அனைத்து அறைகளையும் திறந்து, எல்லா ஜன்னல்களும் மூடி திறக்க எளிதாக இருக்கிறதா என்று சரி பார்த்து விடுகிறாயா? ரொம்ப நாள் திறக்காமல் விட்டு தாள் எல்லாம் துருவேறி இருக்கலாம்.. அலமாரியில் எண்ணெய் கூட இருக்கும் அப்படியே ஒரு ரெண்டு சொட்டு கதவிடுக்கில்  விட்டாலும் சரி. என் அண்ணன் வெளி வாசலில் இருக்கிறான்.. அவன் கடைத் தெருவிற்கு செல்லும் முன் அவனைப் பிடித்து ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.. " என்று மிதுனா மறுக்க வழியின்றி ஒரு அவசரத்தோடு கையில் இருந்த சாவிக் கொத்தை அவள் கையில் திணித்தாள்.

சுபலா அந்த இடத்தை விட்டுப் போனால் போதும் என்றிருந்தது மிதுனாவுக்கும். மறுபேச்சின்றி சாவியை வாங்கிக் கொண்டு முதல் அறை நோக்கி நடந்தாள்.ஒரு வெற்றிப் பார்வை பார்த்த சுபலா, "இதற்கு அடுத்த அறையை கொஞ்சம் நன்றாக பார்த்து விடு மிதுனா. அது அவ்வளவாக  உபயோகப்படுத்தப்படாத அறை என்று பொன்னம்மா  சொன்னாள். முடிந்தால் தலையணை உறை கூட மாற்றிவிடு.. உள்ளே பீரோவில் துவைத்தது இருக்கும். பீரோ சாவியும் இதே கொத்தில் உள்ளது" என்றாள். பின்னே.. இந்த சோம்பேறி மிதுனா அந்த இரண்டாவது அறைக்குள் செல்ல சோம்பல் பட்டு போகாது விட்டாளானால், அவள் திட்டம் என்னாவது?!

மிதுனாவின் மனதில் எதுவும் ஒட்டவில்லை. மனமெல்லாம் அங்கிருந்து எப்படி பெங்களூரு செல்வது என்பதிலேயே நின்றது. என்னவோ குழப்பத்தில் கையிலும் கணிசமாக பணம் எடுத்து வரவில்லை.. தாத்தாவின் சொந்த ஊர்.. கிராமம் என்பதால் தனியாக கடை கண்ணிக்கு செல்ல நேராது என்று நினைத்தாளோ..அல்லது நளந்தன் நினைவில் மற்றது அடிபட்டு போனதோ.. தெரியவில்லை.. ஆனால் கையில் அவ்வளவாக பணமில்லை என்பது திண்ணம்.

இந்த இருட்டில் தனியாக எவரிடமும் சொல்லாமல் தனியாக பெங்களூரு சென்று மருத்துவமனை கண்டுபிடித்து.. அது அத்தனை உசிதாகவும் படவில்லை. தாத்தா பருத்திக் காட்டில் இருந்து திரும்பி வரும் வரை பல்லை கடித்து கொண்டு பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்..

ஓவென்று வாய் விட்டு அழக்கூட நாதியற்று எத்தனை நேரம் தான் ஊமை அழுகை அழுவது? இந்த சுபலாவாவது தன்னை தனியே விட்டால் பரவாயில்லையே..சுபலா இன்னமும் நிற்பதை பார்த்த மிதுனா, "சரி செய்கிறேன்" என்று சொன்னாள். திருப்தியுடன் சுபலா நகர, அவளிட்ட பணிகளை உரிமைக்காரியாக பார்வையிட சிறிது நேரத்தில் சுபலா வந்துவிடுவாளோ என்ற பயத்தில் மிதுனா தன் அறைக்குள் நுழைந்து தாளிட்டாள்.

தனிமையில் அழுகை முட்டிக் கொண்டு வர, ம்ஹூம்.. இங்கிருந்தால் இப்படி அழ மட்டும் தான் முடியும்.. வேலை நடக்கவில்லை என்றால்.. சுபலா மீண்டும் பேசியே கொல்வாள். அழுது அழுது மனதை ரணமாக்கிக் கொள்வதை விட அவளிட்ட வேலையை மளமளவென்று முடிப்பதே உசிதம். அதற்குள் சுந்தரம் தாத்தாவும் வந்துவிடுவார். அவரிடம் நியாயம் கேட்டு உடனே இங்கிருந்து கிளம்பி தாத்தாவிடம் சென்று விடவேண்டும்.

விரைந்து அவளிருந்த அறையின் ஜன்னல் கதவுகளை சரி பார்த்தவள், சுபலா சொன்ன அடுத்த அறைக்கு சென்றாள். சுபலா சொன்னது போல அந்த அறை ஒன்றும் அப்படி புழுதியண்டி கிடக்கவில்லை . சுத்தமாகத் தான் இருந்தது. எனினும் அவள் சொன்னாளே என்று அங்கும் ஒரு யந்திரம் போல எல்லா ஜன்னல்களையும் திறந்து வைத்தாள். முந்திய அறை போல் அல்லாது இந்த அறை விசாலமாக இருந்தது. நுழை வாயில் தவிர பக்கவாட்டில்  இதற்கு அடுத்த அறையை இணைப்பது போல ஒரு கதவும் இருந்தது..

ஊரில், சுந்தரம் தாத்தா வீட்டிலும் மாடி அறைகளில் இதே போன்ற அமைப்பு தான். மிதுனா தங்கும் அறையையும், நளந்தனின் அறையையும் தடுத்துக் கொண்டு ஒரு இணைப்பு கதவு இருக்கும். நளந்தன் புறம் திறந்திருக்குமோ என்னவோ, அவள் அறையில் அந்த கதவு தாளிட்டே  இருக்கும்.

ஏதேனும் அறை விசாலமாக தேவைபட்டால் அந்த கதவை திறந்து இரு அறைகளையும் ஒரு அறையாக உபயோகப்படுத்தும் உத்தி.

இந்த இணைப்பு கதவைத் திறந்து அடுத்த அறைக்கு செல்ல முடிந்தால்,  சுபலா கண்ணில் படாமல் அந்த அறையையும்  சரி பார்த்துவிடலாமே என்று தோன்றியது. அனாவசியமாக வெளியே சென்று சுபலாவிடம் மாட்டிக் கொள்ள வேண்டியதில்லையே..

 இணைப்புக் கதவின் தாளை நீக்குகையில் அறை வாயிலில் நிழலாடியது. சுபலாதான் வந்துவிட்டாளோ என்று வெறுப்பாக நிமிர்ந்த மிதுனா இன்னமும் வெறுப்படைந்தாள். அங்கே நிலைப்படியில் நின்றிருந்தவன் நளந்தன்.

கூட்டுக் கள்ளன்! தாத்தா காசிக்கு போய் விட்டார் என்று சொன்னதென்ன.. நம்பும்படி கதை திரித்து கடிதங்கள் தந்ததென்ன.. கோபமும் அழுகையும் பொங்கி வந்தது. அவள் முகத்தை உற்று பார்த்த நளந்தன், "அழுதாயா?!" என்றான்.

மேலும் அவளை பற்றி, " சுபலா வந்து விட்டாளா?" என்று எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினான்.

செய்வதெல்லாம் செய்து விட்டு, அழுதாயா என்று ஒரு கேள்வி! அதற்கு பதில் கூட எதிர்பாராது, சுபலா வந்தாளா? என்று ஒரு பொறுப்பற்ற துணை கேள்வி. அவள் எக்கேடு கெட்டால் என்ன! சுபலாவின் வருகை தானே அவனது தலையாய கவலை! அடக்கமாட்டாது வந்த கோபத்தில் பதிலேதும் சொல்லாது, அவனை உரச நேர்ந்ததையும் பொருட்படுத்தாது சரேலென அங்கிருந்து வெளியேறினாள்.

பற்களால் உதட்டை கடித்துக் கொண்டு , கைகள் நடுங்கியபடி அடுத்த அறையின் பூட்டை அவள் திறப்பதை புருவங்கள் முடிச்சிட புரியாது பார்த்த நளந்தன் தலையை கோதியபடி தன்னறைக்கு சென்றான்.

நளந்தன் தன்னை கவனித்ததை உணர்ந்தாலும், அவன் புறம் திரும்பாது கதவை அவசரமாக திறந்த மிதுனா வேகமாக உள்தாளிட்டாள். அவனிடம் என்னென்னவோ கோபமாக கேட்க எண்ணியிருந்தாலும் எதுவும் பேசாது ஓடி வந்த தன் கோழைத்தனத்தை எண்ணி மேலும் ஆத்திரப்பட்டாள்.

கொஞ்சம் மூச்சு சமன்பட்டதும் மின்விளக்கை ஒளிரவிட, அங்கே கட்டிலில்.. இரை தேடும் ஓநாய் போல பசியோடு காத்திருந்தான் பத்ரி!

Comments

  1. பாவம் மிது அவளுக்கு தான் எவ்வளோ கஷ்டம்
    ஒரு புறம் தாத்தாவின் நிலையை எண்ணி பெரும் அதிர்ச்சி
    அதனை மறைத்து சதி செய்து விட்டார்களே என்று மற்றவர்களின் மேல் கோவம் வருத்தம்
    நளன்தனை கண்டதும் கட்டு படுத்தமுடியாத அழுகை ,துயரம் ,தன்னிரக்கம்
    எப்போது நளன் தோள் கொடுத்து துயரம் தீர்ப்பான்
    அட்சோ ! இந்த சுபலா பத்ரி வேறு ஏதோ சூழ்ச்சி செய்வார்கள் போல இருக்கே
    கதை விறுவிறுப்பாக செல்கிறது .....

    ReplyDelete
  2. very interesting .....

    ReplyDelete
  3. 36.மூங்கில் மனம் 37.கோடை விழா ஆரம்பம் 38.புகையும் எரிமலை

    ReplyDelete

Post a Comment