Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 42

இருள் மறைத்த நிழல் (தேனு) - 42

நளந்தனின் கொடூர கற்பனையில் விக்கித்து நின்றாள் மிதுனா. நெருப்பை வாரி தலையில் கொட்டியது போல இருந்தது அவன் பேச்சு. என்ன வார்த்தை சொல்லிவிட்டான்! வெறியாம்!

சாட்டையடி பட்டது போல துடித்து போனாள் மிதுனா. மொட்டு விரிந்து மௌனமாய் மணம் பரப்புவது போல மதுரமாய் மனதுள் பூத்த காதலை கண நேரத்தில் வெறி என்று கொச்சைப் படுத்தி விட்டானே!

சுபலாவின் பேச்சை எழுத்துக்கு எழுத்து நம்புகிறானே! என்ன சொல்லி தன் குற்றமற்ற தன்மையை நிரூபிப்பாள் அவள்? பழுதோ எனும்படி பாதையில் கிடந்த சுபலா பாம்பென படமெடுத்து விட்டாளே.. எடுத்ததோடல்லாது மிதுனாவை தீண்டியும் விட்டாளே. ஆல கால விஷம் அவளை அண்ட விடாது தடுக்க வேண்டிய அவள் சிவனும் 'அடி பாதகத்தி' என்று அவளை கைவிட்டானே! வழி வகை தெரியாது விக்கித்து நின்றாள் மிதுனா.

அடுத்தடுத்து இறங்கிய இடிகளால் அடியோடு அதிர்ந்தவள் மெல்ல மெல்ல நடந்தவற்றை ஜீரணிக்க முயல, தற்காலிகமாக பின்னுக்கு தள்ளப்பட்டிருந்த தன் தாத்தாவின் நினைவு சுனாமியாக தாக்கியது.

ஐயோ! தாத்தா! மரணப் படுக்கையில்! இந்த கலவரத்தில் அவள் யாரிடம் சென்று என்ன சொல்லி இங்கிருந்து வெளியேறுவாள்? அவள் கையை யாரும் பிடித்து வைத்து நிறுத்தப் போவதில்லை தான். ஆனால் கற்பனை வளமிக்க நளந்தன் 'நாடகம்' தோற்றதால் சாக்கு சொல்லி ஓடுகிறாள் என்று கூட சொல்வான்! கொடும் பழிச்சொல்லோடு தான் அவள் தாத்தாவின் முகத்தில் விழிக்க வேண்டுமா? முதலில் அவர் முகத்தில் ஒரு தரமேனும் விழிக்கும் பாக்கியமாவது அவளுக்கு கிட்டுமா? பின்னோக்கி செல்லும் அவர் உடல்நிலை.. அவள் அவரை சென்றடையும் வரை தாக்கு பிடிக்குமா?

தாத்தா! தாத்தா! என்று வாய் விட்டு அழுதாள் மிதுனா. தாத்தாவிற்காக மட்டும் அழுகிறாளா? அல்லது தனக்குமே சேர்த்து அழுகிறாளா என்றே புரியாது குமுறி குமுறி அழுதாள். "அழாதேம்மா" என்று சுந்தரம் தாத்தா அவளைத் தேடி வந்து ஆறுதல் சொல்லும் வரை அழுதாள்.

தடுக்கி விழுந்த குழந்தை தனியே அழுது கொண்டிருக்கையில் தூக்கி விட ஓடி வந்த தாயைக் கண்டதும் இன்னமும் பெரிதாய் அழுவது போல அநாதரவாய் அரற்றிக் கொண்டிருந்த மிதுனா தாத்தா ஆதுரமாய் அவள் தலை வருடவும் முன்னிலும் அதிகமாய் பெருங்குரலெடுத்து அழுதாள்.

"தாத்தா.. நான்.. எந்..த தவறும் செய்யவில்லை தாத்தா.. எல்லாம் வீண் பழி.. யாரோ.. சுபலா!.. சுபலா தான் ஏதோ சதி செய்து விட்டாள்.. தாத்தா"
விம்மல்களுக்கிடையே கொஞ்சம் வார்த்தைகளையும் விரவினாள்.

"நினைத்தேனம்மா.. இது சுபலாவின் வேலை என்று தான் நானும் நினைத்தேன். நீ அழாதே. உன் மேல் எந்த களங்கமும் இல்லை. அப்படியே மற்றவர் உன்னை களங்கப்படுத்தவும் முடியாத படிக்கு நான் தான் விஜிக்கும் உனக்கும் கல்யாணம் என்று எல்லார் வாயையும் கட்டிப் போட்டுவிட்டேனேம்மா..இனியும் நீ ஏன் கலங்குகிறாய்?"
தீனக் குரலில் இயன்ற மட்டும் தேற்றினார்.

மற்றவர் களங்கம் சுமத்தினால் கூட காதையும் கருத்தையும் மூடிக் கொண்டு சகித்துக் கொள்வாளே! இங்கே களங்கம் கற்பிப்பது கண்ணுக்கு கண்ணான அவள் நந்தன் அன்றோ?! அவள் கலங்காது என் செய்வாள்? குடி கெடுக்க வந்த கோடரி நீ என்று கண்ணையும் கருத்தையும் இறுக கட்டிக் கொண்டு குற்றப் பத்திரிகை வாசிப்பவனோடு கல்யாணமா? அது தீர்வாகாதே!

மறுப்பாக தலை அசைத்தாள் மிதுனா.

"அவர்.. உங்கள் பேரன் என்னை தவறாக நினைக்கிறார், தாத்தா"

"என்னம்மா சொல்கிறாய்? ஒன்றும் விளங்கவில்லையே?" என்று அவர் கேட்க அவமானத்தில் முகம் கன்றிய மிதுனா,
"நான்.. திட்டமிட்டு அவரை இக்கட்டில் மாட்டி.. அவரை மணந்து கொள்ள சதி செய்தேன் என்று.." சிரமப்பட்டு நடந்தவற்றை விளக்கினாள்.

"சுபலா! அந்த பத்ரி கழுதை கையில் கிடைக்கட்டும்" என்று வெறுத்து உச்சரித்தார் பெரியவர்.

"எல்லாம் சரியாகிவிடும் தாயி. விஜியின் கோபம் தணிந்தபின் மெதுவே எடுத்து சொன்னால் புரிந்து கொண்டுவிடப் போகிறான்! இந்த சுபலாவும், பத்ரியும் மேற்கொண்டு ஏதும் சதி வேலையில் இறங்குமுன் உங்களிருவருக்கும் ஒரு பரிசமாவது போட ஏற்பாடு செய்கிறேன்" என்று ஆறுதல் என நினைத்து மிதுனாவை பெரிதும் அதிர செய்தார்.

உடல் விரைத்தாள் மிதுனா.

அவளை அவ்வளவு கேவலமாக பேசிய நளந்தனோடு திருமணமா?! முடிவான குரலில், "முடியாது, தாத்தா" என்று தீர்மானமாக மறுத்துரைத்தாள்.

"விருந்தாட வந்த நான் விருந்தாளியாகவே விடை பெற்றுக் கொள்கிறேன். நானும் என் தாத்தாவும் முன்பு இருந்தது போல எங்கள் விதியை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். நான் அவரிடமே போகிறேன், தாத்தா. சுகம் மருத்துவமனைக்கு போகிறேன். இனியும் என்னை தடுக்காதீர்கள், தாத்தா.."

உலகை வெறுத்த அவள் குரலும் அது சொன்ன சேதியும்.. இப்போது தாத்தா அவளை விடவும் அதிர்ந்தார்.

மூச்சிரைப்பு அதிகப்பட்டது. நெஞ்சை தடவி விட்டபடி, "அப்படி சொல்லாதே அம்மிணி..
இப்படி உன்னை நிர்க்கதியாய் விடுவதற்கா அத்தனை பிரயத்தனம் செய்தோம்? என் சந்தானத்திற்கு நான் கொடுத்த வாக்கு? அம்மா.. இப்படி ஒரு பாவத்தை என் தலையில் சுமத்தாதே.. உன்னை அநாதரவாய் விடுவதற்கில்லை.. கல்யாணத்திற்கு ஒத்துக் கொள். உன் தாத்தா மனமும் சாந்தியாகும் " உணர்ச்சிப் பெருக்கு அவர் உடலுக்கு முன்னிலும் கேடு செய்தது.

"ஐயோ தாத்தா! புரியாமல் பேசுகிறீர்களே.. அவர் உங்கள் பேரன் சு..சுபலாவை காதலிப்பார் போலிருக்கிறது.. இந்த பேச்சை இதோடு விடுங்கள் தாத்தா.. என்னை விட்டு விடுங்கள் உங்களுக்கு புண்ணியமாக போகட்டும். குலம் தழைக்க அடங்கா ஆசை என்றால், அந்த சுபலாவிற்கும் அவருக்கும் கல்யாணம் பேசுங்கள்" என்று பட்டென்று கை கூப்பி படபடத்தாள்.

தன் தாத்தாவின் நிலைமையை மறைத்தார் என்பது அவளை சீண்டியது. இதோ அவளுக்கும் உண்மை தெரியும் என்பது அவருக்கு தெரிந்துவிட்டது. ஆனாலும் என்னிடம் சொல்லாமல் மறைத்தீர்களே என்று அவளால் முன்பு நினைத்தது போல எகிற முடியவில்லை. அதற்கான சூழல் இல்லை இப்போது. எனினும் அடக்கப்பட்ட சீற்றம் வேறு வடிவில் வார்த்தைகளாய் வந்து விழுந்தது.

அடி வாங்கிய குழந்தை போல கண் கலங்கினார் பெரியவர். அவள் கோபம், அதன் மூலகாரணம்  புரிந்தது. அது பற்றி அவளை சமாதானம் செய்யும் வகை மட்டும் தெரியவில்லை. முதலில் இன்று நடந்த தவறை நிவர்த்திக்க முனைந்தார்.

"சுபலா நச்சு பாம்பாச்சேம்மா.. இப்போதே கண்கூடாய் பார்த்தாயே.. சாகசக்காரி! அவளிடமா விஜியை பலியிட சொல்கிறாய்? என் பேரனை சின்னாபின்னமாக்கி விடுவாளேம்மா.. பொறுப்பற்ற பெற்றோரால் என் பேரன் குழந்தை பருவத்தை தொலைத்தான். கெட்ட சகவாசத்தால் தடம் புரண்டு போனான். இன்று இவளிடம்.. ஓர் சுயநலப்  பிசாசிடம் சிக்கி இளமைப் பருவத்தையும் அவன் தொலைக்கவேண்டுமா?

அம்மிணி.. சுபலாவின் குறியெல்லாம் விஜயனின் பணத்தில் தானம்மா.. அவனே பருவ கோளாறில் கண்ணை மூடிக் கொண்டு பாலும் கிணற்றில் தான் விழுவேன் என்று போனாலும் கண்ணிருந்தும் அதை பார்த்துக் கொண்டு நான் எப்படியம்மா விழட்டும் என்று இருப்பேன்? சொல்லு தாயி உன்னாலும் தான் அதை பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா? விஜியின் மேல் அளவு கடந்த பாசம் உனக்கும் என்று இந்த கிழவனுக்கு தெரியும்டா.. கண நேர கோபத்திற்கு உங்கள் இருவர் வாழ்க்கையையும் பணயம் வைக்காதே தாயி" என்று குரல் உடைந்து அழுதார் பெரியவர்.

"தாத்தா.." என்று தடுமாறினாள் மிதுனா.  அவர் கூற்றின்  உண்மை அவளை சுட்டது. அவள் நளந்தனை உயிர் வரை நேசிப்பதும் உண்மை. சுபலா ஒரு பாலும் கிணறு என்பதும் உண்மை. நளந்தன் மேல் ஒரு இனுக்கு பட்டாலும் துடித்து போவாள் மிதுனா என்பதும் உண்மை.

மிதுனாவின் தடுமாற்றமே சுந்தரத்திற்கு ஒரு சிறிய நம்பிக்கை நட்சத்திரமாய் ஒளிர்ந்தது. சற்று முன் போல இந்த சின்ன பெண் முடியாது என்று தள்ளவில்லையே. என்ன செய்வது என்று தடுமாறத் தானே செய்கிறாள்.

புதிதாய் துளிர்த்த தளிர் நம்பிக்கையை ஆல விழுதாய் பற்றிக் கொண்டு மிதுனாவை மேலும் வற்புறுத்தினார்.

"வேலியற்ற பயிர் விஜயன் என்பது தானேம்மா சுபலாவின் பலம், நம் பலவீனம்? விஜயனுக்கொரு முள்வேலியை நீ இருந்தால் சுபலா என்ன.. எவள் வந்து என்ன செய்து விட முடியும்? உன் தாத்தனிடம் சொன்னபடி உனக்கும் ஒரு வாழ்வமைத்து கொடுத்து என் பேரனையும் காப்பாற்றிக்கொண்ட திருப்தியுடன் என் காலம் முடிவது.. அது நீ மனம் வைத்தால் மட்டுமே நடக்கும்  தாயி.." தழுதழுத்தார் சுந்தரம்.

நளந்தனுக்கு அவள் முள்வேலியா? தாத்தா என்ன அர்த்தத்தில் சொன்னாரோ. ஆனால் அவள் முள்வேலிதானே.. அவன் நெஞ்சில் நெருடும் நெருஞ்சி முள் அவள்தானே. கசப்பாக முறுவலித்தாள். ஆம்.. முள்வேலிதான்! அவனை காக்கும் முள்வேலி அல்ல.. அவனை காயப்படுத்தும் முள்வேலி! இது இந்த பெரியவருக்கு புரியவில்லையே. சங்க காலம் போல ஒரு தாலியைக் கட்டி விட்டால் மந்திரம் போல மற்றது மறந்து மையல் கொள்வார்கள் என்று நம்புகிறாரே!

அவர் ஒரு படி மேலே போய் கைகளை கூப்ப, நெஞ்சம் பதைத்தாள் மிதுனா.
"என்னை தர்மசங்கடத்தில் நிறுத்தாதீர்கள் தாத்தா" என்று அவளும் கை தொழுது இறைஞ்சினாள்.

தாத்தாவிற்கு ஒரு பொல்லாத சந்தேகம் எழுந்தது. அதற்குள் வெளி வாயிலில் யாரோ வரும் ஓசை கேட்க, எவரும் வருமுன் ஐயம் களைந்து கொள்ளும் வேகத்தோடு கேட்டார்.

"அம்மிணீ! ஒருவேளை உனக்கு அவனது பழக்க வழக்கம் பிடிக்காது.. அல்லது அவன் உன்னிடம் கடுமையாக இப்போது நடந்து கொண்டதை வைத்து.." என்று தடுமாறியவர்,
"இதற்கு மட்டும் பதில் சொல்லம்மா. உனக்கு விஜி மேல் வெறுப்பாக இருக்கிறதா? "
ஆளரவம் சமீபமாக, முன்னிலும் அவசரமாக கேட்டார்,
"நீ விஜியை மனதார நேசிக்கிறாயா அம்மா? எதுவானாலும் மனது விட்டு சொல். இந்த கிழவன் சொல்லிவிட்டானே என்று நீ இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்க வேண்டாம்.
தயங்காதே தாயீ.. நீ விஜியை மனதார நேசிக்கிறாயா சொல்.. இல்லையென்றால் இந்த கல்யாண பேச்சை இத்தோடு விட்டு விடுகிறேன்" என்றார் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க.

எங்கே அவள் இல்லை நான் விஜியை நேசிக்கவில்லை என்று சொல்லிவிடுவாளோ என்று ஒரு மரண பயம் தேக்கி அவளை பார்க்க அவரது கைத்த நெஞ்சம் தாறு மாறாய் அடித்துக் கொண்டது.

அவர் தவிப்பு அவளை துன்புறுத்தியது. அவருக்கு எதுவும் ஆகிவிடுமோ என்று கூட பயமாக இருந்தது. அவள் ஒரு சொல்லில் உயிர் இருப்பது போல பஞ்சடைந்த கண்களால் அவளை பார்த்தார் பெரியவர்.

நளந்தனை வெறுக்கவும் முடியுமா அவளால்? எத்தனை எத்தனை அவதூறு பேச்சிற்கு பின்னும் அவனை விட்டு ஒதுங்க நினைத்தாளேயன்றி அவனை வெறுத்து ஒதுக்கும் எண்ணமே இல்லையே. ஊணிலும் உயிரிலும் உள்ளார்ந்த நேசமாயிற்றே!  எப்படி வெறுப்பாள்?!

"அவரை மனதார நேசிக்கிறேன், தாத்தா. ஆ.." அவள் முடிக்குமுன் ஒரு சூறாவளி போல் உள்ளே நுழைந்த நளந்தன் அவளை வெறி கொண்டவன் போல இழுத்து கன்னத்தில் தன் இரும்புக் கரங்களால் இடியென ஒரு அறை விட்டான்.

Comments

  1. அட்சோ ! என்ன இது மென்மையான காதல் கதை என்று நினைத்து படித்து கொண்டு இருக்கும் போது

    நிகழ்வுகள் இது கன்னத்தில் அரை கொடுக்கும் கதையாக போய் கொண்டு இருக்கிறதே.....................

    போப்பா .............இந்த மாதிரி RC கதைகளில் எல்லாம் இருக்காது.................

    தேனு உங்க கூட டு.டூ ................

    ReplyDelete
  2. konjam 'too' much agidichunu 'doo' vituteengala, akka. :) ellam nalanthanuku konjam kai neelam.. naan enna seiya..

    ReplyDelete
  3. sari .,olunga antha nalanthanai vanthu enga mithuna kitte mannippu ketka sollunga !
    -
    -
    appo thaan unga cooda pazham vita mudiyum :)

    ReplyDelete
  4. Cha naladhane poitu erundhuchu yen endha suravali

    ReplyDelete
  5. hai this is ur first novel or it is ramanichandran novel.

    ReplyDelete
  6. Hai ur novel is very interesting

    ReplyDelete
  7. cha enna ithu mananam ketta jenmam intha mithu

    ReplyDelete

Post a Comment