இருள் மறைத்த நிழல் (தேனு) - 41
சுபலாவின் அபத்தத்தை உண்மை என்று நம்புகிறானா அவள் நளந்தன்?! சுபலாவின் பேச்சை வைத்து அவளை சந்தேகிக்கிறானா?! பத்ரியின் மூர்க்கத்தை விடவும் இது அதிர்ச்சியாய் இருந்தது.
"எது பொய்?" என்று மீண்டும் நளந்தன் அதட்ட,
"சுபலா சொல்வது பொய்." என்றாள் பதட்டமாக.
நம்பாமல் அவளை பார்த்த நளந்தன், "ஏன் அப்படி தலை தெறிக்க ஓடி வந்தாய்? சொல்" என்றான்.
"பத்ரி.. உள்ளே.. பக்கத்து அறையின் உள்ளே சென்றால்.. அங்கே பத்ரி இருந்தான்.. நான் உள்ளே நுழைந்தவுடன் என் கையைப் பிடித்து.." அந்த கேவலத்தை சொல்ல முடியாது கேவினாள் மிதுனா.
அவன் பேச்சிலோ முக பாவத்திலோ அவளுக்கு உதவ முன்வரவில்லை. சற்றும் இளக்கமின்றி அவளை முறைத்தான்.
அவனிடம் எந்த எதிரொலியும் இல்லாது போக தானே மூச்சைப் பிடித்து நடந்ததை சொல்லி முடித்தாள்.
"அவனிடமிருந்து தப்பி அந்த கதவை திறந்து கொண்டு உங்கள் அறைக்கு ஓடி வந்தேன்..எனக்கு வேறு ஒன்றும் தெரியாது.. நளந்தன். என்னை தயவு செய்து நம்புங்கள்.. நளந்தன்.. நீங்கள் என்னை நம்புகிறீர்கள் தானே.. நள.."
ஒரு கை உயர்த்தி அவளை அடக்கினான் நளந்தன்.
"சபாஷ்! பூட்டிய அறைக்குள் பத்ரி! மிட்நைட் மசாலா பட டைட்டில் மாதிரி இல்லை?!" என்றான் எகத்தாளமாக.
"பூட்டிக் கிடந்த அறையை என் கண்முன்னே நீ தானே திறந்தாய்? அது கூடவா மறந்துவிட்டது?! பூட்டிய அறைக்குள் பத்ரி எங்கிருந்து வந்தான்? உன் குட்டு உடைந்து விட்டதும் 'On the Spot' எழுதிய வசனமா? லாஜிக் கொஞ்சம் உதைக்கிறதே! " என்று மேலும் ஏளனமாக பேசினான்.
"வசனமெல்லாம் இல்லை நளந்தன்.. நிஜம்.. அறை பூட்டிக் கிடந்ததும் வாஸ்தவம் தான்..
ஆனால் உள்ளே பத்ரி இருந்தான்.. அதுவும் நிஜம் " என்று பதைபதைத்தாள் மிதுனா.
"அது எப்படிம்மா.. நீ வருவாய் என்று தெரிந்து அறைக்கு உள்ளே பதுங்கி கொண்டு வெளியேயும் பூட்டிக் கொண்டானா?"
"ஆமாம்.." எழும்பா குரலில் முனகினாள்.. ஒன்று தோன்ற, "சு.. சுபலா அவனை உள்ளே வைத்து பூட்டி இருக்கலாமே.. நான் விவரமறியாது உள்ளே சென்றதும் பத்ரி என்னிடம் தவறாக.. என்னை பிடித்து இழுக்க.. நான் அந்த இணைப்பு கதவு வழியாக தப்பி.."
அவளின் பாதி பேச்சிலேயே அருவருப்பாய் முகம் சுளித்தான் நளந்தன்.
"ஓஹோ! பூட்டிய அறைக்குள் ஒரு வேளை பத்ரி பதுங்கி இருந்து கையைப் பிடித்தால் என்ன செய்வது என்று, 'திட்டமிட்டு' தான் முதலில் என் அறைக்கு வந்து அந்த இணைப்பு கதவின் தாளை 'வசதியாக' நீக்கி வைத்து விட்டு பக்கத்து அறை பூட்டை திறந்தாய் போலும். நல்ல தீர்க்கதரிசனம் உனக்கு!"
"ஐயோ.. அது அப்படியல்ல.. அந்த இணைப்பு கதவைத் திறந்து கொண்டு அடுத்த அறைக்கு சுருக்காக சென்று விடலாமே என்று தான் தாள் நீக்கினேன்.. அதற்குள் நீங்கள் வந்துவிடவே.. வேகமாக வெளியே சென்றுவிட்டேன்"
"ஏன்? எண்ணியபடி அந்த இணைப்பு கதவு வழியாகவே அடுத்த அறைக்கு செல்வது தானே? என் முன்னால் அந்த கதவு திறக்காதா?"
அவளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. உதட்டை கடித்துக் கொண்டு அவள் நிற்க, "பாவம், நான் வருவதற்குள் தாளை நீக்கி தயார் செய்து வைக்க நினைத்திருப்பாய். அந்த நேரம் என்னை அங்கே எதிர்பார்த்திருக்க மாட்டாய்! கையும் களவுமாக பிடிபட்டு விடுவோமோ என்று பதறி.. அதுதான் அப்படி என்னை தவிர்த்து ஓடினாயா?" என்று அனர்த்தம் செய்தான்.
"முதலில், என் அறையில் உனக்கு என்ன வேலை?"
"அது அறை சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்து.. ஜன்னல் சரியாக திறக்க முடிகிறதா என்று.. தாள் துருவேறி இருந்தால் எண்ணெய் விடவென்று.." தடுமாறினாள் மிதுனா.
"ரப்பிஷ்! இன்று எல்லாரும் வருகிறோம் என்று என் சின்ன தாத்தா வீட்டிற்கு தெரியும். இதையெல்லாம் அவர்கள் செய்திருக்க மாட்டார்களா?"
"சு.. சுபலா தான் சொன்னாள்.."
"மிதுனா! பொய் மேல் பொய் சொல்லிக் கொண்டு.." என்று கோபமாக கத்தினான் நளந்தன்.
"கடவுளே.. என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன் என்றால் நான் என்ன தான் சொல்வது.." என்று அரற்றினாள் மிதுனா.
"உண்மையை சொல்வது." பட்டென்று சொன்ன நளந்தன், சலிப்பாக கையை ஆட்டி,
"உன் லாஜிக்கில் நிறைய ஓட்டை மிதுனா. ஒருவேளை உன் முதல் திட்டம் வேறாக இருந்து, இப்போது நிலைமைக்கேற்ப 'Spot Script' எழுதியதால் இருக்கலாம். Better Luck, Next time " என்று இரக்கமின்றி முடித்தான்.
செயலற்று நின்ற மிதுனாவின் தோற்றம் நளந்தனை என்ன செய்ததோ.. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவன், தாடையை தடவி, "ஒன்று சொல் மிதுனா. நீ சொல்வது போன்றே பத்ரி உன்னிடம் தவறாக நடக்க முயன்றான் என்றே வைத்துக் கொள்வோம். திட்டமிட்டவன் அதுவரை மட்டும் தானே திட்டமிடுவான்? நீ அந்த இணைப்பு கதவு வழியாக என்னிடம் ஓடிவருவாய் என்பதை எவர் எதிர்பார்த்திருக்க முடியும்? நீயும் நானும் ஓர் அறையுள் இருப்பது எப்படி சுபலாவிற்கு தெரியும்? நீ என்னிடம் ஓடி வந்ததும், சொல்லி வைத்தார் போல சுபலா ஒரு கூட்டத்தோடு வந்து கதவை உடைப்பதும், அவர்கள் முன் நீ என்னை தழுவிக் கொண்டு திவ்ய தரிசனம் தருவதும்.. இது எல்ல்லாமுமா தற்செயல் என்கிறாய்?! சொல் மிதுனா.. தற்செயலா அல்லது உன் செயலா?" என்று பொறுமையிழந்து அதட்டினான் .
அநியாயக் குற்றச்சாட்டில் ஆடிப் போனாள் மிதுனா.
"சுபலாவிற்கு எப்படி தெரியும் என்று எனக்கு தெரியாது நளந்தன்.. ஒருவேளை திறந்து கிடந்த ஜன்னல் வழி நம்மை ஒன்றாக பார்த்து கூட்டம் கூட்டி இருக்கலாம்.." அவள் கூற்று அவளுக்கே எதிராக திரும்பியது.
"ஆமாமாம்.. அதை மறந்துவிட்டேனே.. பாவம் நான் வருவதற்குமுன் வேலை மெனக்கெட்டு ஜன்னலை திறந்து விட்டிருந்தாயே.. அது என்ன Plan B-ஆ . அது தான்.. ஒரு வேளை சுபலா நீ சொன்னபடி கூட்டம் கூட்டாவிட்டாலும், போக வர இருக்கும் வீட்டினர் யார் கண்ணிலாவது உள்ளே மகிழ்ந்து குலவுவது படட்டுமே என்ற திட்டமா?"
தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பவனிடம் என்ன பேசுவது.. தன் பேச்சு எடுபடும் என்ற நம்பிக்கை இழந்து, சலித்து சொன்னாள், "துருவேறி இருந்தாலும் இருக்கும் என்று சொல்லி ஜன்னலை திறந்து சரி பார்க்க சொன்னது சுபலா"
"நல்ல கதை! அப்புறம்? ஜன்னல் கதவு எளிதாக திறந்ததா? அல்லது துருவேறி பேரீச்சம்பழம் கடைக்கு தான் தேறியதா?"
வாயடைத்து நின்றாள் மிதுனா.
ஒரு புருவம் தூக்கி ஏளனமாக அவளின் அடுத்த வாதம் என்ன என்பது போல பார்த்தான்.
"அந்த சுபலாவை நம்புகிறீர்கள்.. என்னை நம்ப கூடாதா?" என்று கை கூப்பி இறைஞ்சினாள்.
கண்களை மூடித் திறந்த நளந்தன் அழுத்தமாக சொன்னான், "சுபலாவிற்கு எந்த முகாந்திரமும் இல்லை."
"எனக்கும் தான் இல்லை"
"ஏன் இல்லை? சுகுணா அத்தை ஊருக்கு கிளம்பிய அன்றிரவை மறந்துவிட்டாயா? அன்று நான் ஒருத்தியை காதலிப்பதாக சொன்னேனே.. யார் என்று உனக்கு சஞ்சலம். உண்டா, இல்லையா? சொல்?
வரையறையற்ற வாழ்வு வாழும் என் மேல் உனக்கு மோகம்! என் செல்வநிலை மேல் ஒரு கண். மொத்தத்திற்கும் ஏக போக உரிமை வேண்டி பேராசைப் பட்டாய்.
என்னை கவர உத்தமி வேடமிட்டாய். வாழ்க்கை நெறி முறை பற்றி பாடம் எடுத்தாய். என் மனதில் ஒருத்தி, அவளிடம் திருவிழா சமயத்தில் என் காதலை உரைப்பேன் என்று நான் சொன்னதும் , அந்த ஒருத்தி நீயாக இல்லாவிடில் என்ன செய்வது என்று சஞ்சலப் பட்டாய். ஆனால் அந்த சஞ்சலம் என் மேல் கொண்ட காதலால் அல்ல.. என் மனதில் எவள் இருந்தாலும் அதை பற்றி உனக்கு கவலையில்லை.
வேறு ஒருத்தியாக இருந்துவிட்டால்.. ஏன் அது சுபலாவாகவே இருந்துவிட்டால்,
எங்கே நான் உன் கையை விட்டு போய்விடுவேனோ என்று உனக்கு அச்சம். அதனால் அவசர அவசரமாக திட்டம் தீட்டினாய். தந்திரமாக சுபலாவின் மனதை கரைத்து உன் நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றியும் விட்டாய். நீ நினைத்தது போன்றே தாத்தாவும் திருமணப் பேச்சை எடுத்துவிட்டார். லாஜிக் மேட்ச் ஆகிறதா? உன்னுடையதை போல எந்த ஓட்டையும் இல்லை பார். இருந்தால் நீ தாராளமாக 'Counter Argue' பண்ணலாம். " என்று கையை விரித்தான்.
என்ன சொல்வாள் அவள்? சுபலாவோ என்று சஞ்சலப் பட்டது உண்மை தான்.. அவன் கூற்றில் மற்ற எதுவும் உண்மை அல்லவே.. என்ன செய்வாள் அவள்..இப்படி அடாத பழியைத் தூக்கிப் போட்டால்?!
"நீங்கள் என்ன சொன்னாலும், இது சுபலாவின் சதி தான். சதி தான். சதி தான்" என்று ஆவேசமாக ஆரம்பித்து அழுகையில் முடித்தாள் மிதுனா.
"சரி அப்படி சுபலா செய்த சதியால் அவளுக்கு விளைந்த மகத்தான நன்மை தான் என்ன? சொல் மிதுனா? இதனால் அவளுக்கென்ன லாபம்?" இழுத்து பிடித்த பொறுமையுடன் கேட்டான்.
"என்னை மணக்க விருப்பம் கொண்டவள் சுபலா. இப்படி உன்னோடு என்னை இணைத்து கதை கட்ட அவளுக்கு என்ன பைத்தியமா? நம்மிடையே எதுவும் இருந்தாலும் அதை மூடி மறைக்கவே அவள் பார்ப்பாள். லாப நஷ்ட கணக்கு பார்த்தால் இன்றைய நடப்பும் தாத்தாவின் அதிரடி தீர்ப்பும் உனக்கே சாதகம்.
ஆனாலும் நீ இவ்வளவு மெனக்கெட்டிருக்க தேவையில்லை.. என்னோடு சேர்ந்து என் பணமும் உனக்கு தடையற்று கிடைக்கும் வழி இருக்க, பாவம் வீண் வேலை செய்து மாட்டிக் கொண்டாய்!"
சீசீ.. என்னவெல்லாம் பழி போடுகிறான்! உடலும் உள்ளமும் கூச, அவன் பேச்சில் வெகுண்டாள் மிதுனா.
ஆத்திரம் கை மீற ஓரெட்டில் அவளை பற்றியவன், பலம் கொண்ட மட்டும் அவளை உலுக்கி, "தரம்கெட்டவனா? உன்னை.. என்ன கேட்டாய்? ம்? 'நான் எதற்கு இப்படி ஒரு கீழ்த்தரமான திட்டம் போட வேண்டும்' என்றா?அதையே தான் நானும் கேட்கிறேனடி.ஏன் இப்படி கீழ்த்தரமாய் திட்டமிட்டாய்? ஏன்? அன்று என் தந்தைக்கு பிடித்தது ஒரு கேடு! இன்று எனக்கு! உன் உருவில்.
ஏன் இப்படி செய்தாய்? இப்படியெல்லாம் மாய்மாலம் செய்து தான் ஒருவனை அடைய வேண்டுமா? ம்? என்ன வேண்டும் உனக்கு? பணமா? உரிமையா? அல்லது நானா? " என்று ஆங்காரமாய் கேட்டவன், அதிலும் கோபம் தணியாது ஒரு கையால் அனாயசியமாக அவள் குரல்வளையைப் பற்றி நெரித்து, "அப்படி என்னடி வெறி உனக்கு? தரம் கேட்டது நீயா? நானா? " என்று கர்ஜித்தான்.
பார்வை நிலைகுத்தி அவள் உடல் நிலைகுலைந்து அவன் கைப்பிடியிலே துவள, அதிர்ச்சி சிறிதும் விலகாத அவளை பற்றிய வேகத்திலேயே கட்டிலில் தள்ளி, "ச்சே! உன்னை என்னவெல்லாம் நினைத்தேன்! எப்படி எல்லாம் மனதில் உயர்வாக.. கடைசியில் நீயுமா?! சீ! நான் ஒரு மடையன்! நீயும் அதே குட்டையில் ஊறிய மட்டை தானே! " என்று வெறுத்து உரைத்து அவளை உதறினான்.
உதறிய வேகத்தில் உருக்குலைந்து விழுந்த மிதுனா சமாளித்து எழுமுன் அதே கட்டிலில் சற்றுமுன் வீசியெறிந்த தன் மேல்சட்டையை ஆக்ரோஷமாக எடுத்து அணிந்தபடியே கதவை ஓங்கி அறைந்து சாத்தி வெளியேறினான்.
அப்பாவி மிதுனாவின் மேல் இப்படி ஒரு அபவாத பழியா
ReplyDeleteஎன் இந்த நலன்தனின் புத்தியில் இப்படி ஒரு கோணல்
படிக்கவே பிடிக்க வில்லை .......................
nice story..but hate this chapter....he is so Judgemental...POOr Meethuna...
ReplyDeletei hate that subala idiot.....
ReplyDelete