Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 46

இருள் மறைத்த நிழல் (தேனு) - 46

மருத்துவமனை நெருங்க நெருங்க மிதுனாவின் இருதயம் இரண்டு பங்கு வேகத்துடன் அடித்து கொண்டது. அடிக்கிற வேகத்தில் வாய் வழியே இதயம் குதித்து விடுமோ என்று அஞ்சியவள் போல இறுக வாய் மூடி கிடந்தாள் மிதுனா. அவளது இறுக்கத்தை உணர்ந்தும் செய்ய ஒன்றுமிராது வாளாவிருந்தான் நளந்தன்.

மருத்துவமனையை அடைந்ததும் ரொம்ப தெரிந்தவன் போல லிப்டில் ஏறி மூன்றாம் தளத்திற்கு அவளை இட்டு சென்றான். வழியில் தெரிந்த சில நர்ஸ்களின் சிநேக முறுவல் அவன் அங்கு நன்கு பரிச்சயமானவன் என்று சொல்லியது.

காரிடாரின் கடைசி அறைக்குள் அவன் நுழைகையில் எதிர்ப்பட்ட நர்ஸ் ஒருத்தி அவனை, "வாங்க சார்" என்று முகமன் கூறி அவன் பின்னே கலங்கிய முகத்தோடு தொடர்ந்து நுழைந்த மிதுனாவை பார்த்து,  "நீங்க தான் 'பாப்பாவா'? பெரியவர் நேற்று முழுக்க 'பாப்பா', 'பாப்பா' என்று ஒரே அனத்தல்." என்று சொன்னாள்.

"ஆமாம்" என்று சொல்ல கூட முடியாது தொண்டை அடைக்க,  மிதுனா தாத்தாவின் கட்டில் நோக்கி பதறி ஓடினாள்.

"அவர் மயக்கத்துல இல்ல இருக்காரு.. இரண்டு நாளா இப்படிதான்.. நினைவு வருவதும் போவதுமாய்.. டாக்டர் வேறு ஊரில் இல்லையா.. யாருக்கு சொல்வது என்று ஒரே குழப்பம்.. நல்ல வேளை.. " என்று பேசி கொண்டே போன நர்ஸ் அங்கு அவர்களிருவர் கவனமும் பெரியவரிடம் மட்டுமே என்பதை கண்டு பாதி பேச்சோடு போய் விட்டாள்.

கண்களில் கலக்கம் தேக்கி தாத்தாவை பார்த்தாள் மிதுனா. பல நாட்களுக்கு பிறகு! உடல் மிக மெலிந்து ஒரு கூடு போல இருந்தார். ஏறி இறங்கிய நெஞ்சு ஒன்றே அவர் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி! இந்த நிலையில் கூட தனக்கு தெரிவிக்க வேண்டும் என்று எவருக்கும் தோன்றவில்லையே! அழுகையும், ஆற்றாமையும், ஆத்திரமும் நீயா நானா என்று போட்டி போட்டு வந்தன..

என்ன வந்து என்ன? எவரிடம் ஆத்திரம் காட்டுவது? எவரை கட்டிக் கொண்டு அழுவது? அவளுக்கு தீங்கு நினைத்து எவரும் எதுவும் செய்யவில்லையே. அதிலும் அவளுக்கு ஒளித்து மறைத்து இங்கு வந்து அடைந்து கொள்வது அவள் தாத்தாவின் தனி விருப்பமாக இருக்கும் போது யாரை சொல்லி என்ன பயன்?!

விட்ட நாளை தான் பிடிக்க முடியாது.. சேர்ந்திருக்க சந்தர்ப்பம் கிட்டிய நாளையேனும் தாத்தாவால் புரிந்து கொள்ள முடிந்தால்.. முடியுமா?! பயமும் துக்கமும் அளவு மீற இரு கையால் வாய் பொத்தி ஓசையின்றி குமுறினாள் மிதுனா.

அவள் அருகே ஓரெட்டு வைத்த நளந்தன் அவளைத் தேற்றும் வகை தெரியாது இறுகி தள்ளி நின்றான். சுற்று சூழல் எதையும் அவள் உணரவில்லை. ஒரு நர்சிடம் அவளையும் பார்த்து கொள்ள சொல்லிவிட்டு நளந்தன் எங்கோ சென்றான். நாள் முழுக்க மயக்கத்தில் கிடந்த தாத்தாவின் கையைப் பற்றிக் கொண்டே கண்ணீரில் கரைந்தாள் மிதுனா.

நளந்தனின் சொல்படி யாரோ ஒரு ரூம்பாய் வேளைக்கு கொண்டு வந்து வைத்த உணவு பொட்டலங்கள் பிரிக்க ஆளின்றி அனாதையாய் கிடந்தன. அவ்வப்போது உள்ளே வந்து  அவள் அருகே அமர்ந்து ஆறுதல் சொல்ல சொற்களை தேடித் தோற்ற நளந்தனையும் அவள் உணர்ந்தாளில்லை.

தன்னை ஒரு தரம் கூட பாராது போய்விடுவாரோ என்ற பயம் ஒன்றே அவள் புலன்களை ஆட்கொண்டது. திக்பிரமை பிடித்தவள் போல தன் தாத்தாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.

மாலையில் நளந்தன் உள்ளே வந்து அவள் அருகே ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டு, அவளை தோள் தொட்டு திருப்பி, பேச ஆரம்பித்தான்.

"சாரி.. இப்படி ஆகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.."

'இப்படி' ஆகும் என்றா?.. எப்படி ஆகும் என்று?.. அவன் ஏதோ கொடுஞ்செய்தி கொண்டு வந்திருக்கிறான் என்பது மண்டையில் உரைக்க உயிரை கையில் பிடித்து கொண்டு அவனை ஏறிட்டாள்.

அவளது பயந்த முகம் அவனையும் வருத்த கண்களை தாத்தாவிடம் தற்காலிகமாக திருப்பிக் கொண்டு தொடர்ந்தான்.

"உன் தாத்தாவிற்கு திடீரென்று உடல்நிலை பின்னேறுகிறது. சுகந்தன் ஒரு மெடிக்கல் 'Conference'-காக தவிர்க்க முடியாது சிங்கப்பூர் போயிருக்கிறான். அவனுக்கு கவர் அப் செய்யும் டாக்டருடன்  பேசிவிட்டேன். அவர் எந்நேரமும் இங்கு வந்துவிடுவார். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்" என்றான்.

பேசும் மொழியே புரியாதவள் போல விழித்தாள் மிதுனா. இதற்கு தானா அவள் அப்படி ஓடிவந்தாள்?! எல்லாரும் சதி செய்துவிட்டனர் என்று மறுபடியும் கோபம் பொங்க, அது முகத்தில் தெரிந்ததோ.. அவள் எண்ணப் போக்கை யூகித்து,
""நீ சின்ன பெண்.. அவர் நோய் அதன் தீவிரம் தெரிந்தால் உடைந்து போவாய் என்று உன் தாத்தா உன்னிடம் ஏதும் சொல்லாமல் மறைத்துவிட்டார். அதோடு மட்டுமல்லாது தக்க தருணத்தில் தக்க மருத்துவ உதவி, ஆலோசனை என்று எதுவும் செய்து கொள்ளவுமில்லை. நோயை பெரிது படுத்திக் கொண்டார்.. விஷயமறிந்த என் தாத்தாவும், சுகவனம் தாத்தாவும் ஆலோசித்து, அவர்களின் வற்புறுத்துதலின் பேரில் தான் இங்கு வந்து அட்மிட் ஆக ஒப்புகொண்டார்.. அதுவும் உனக்கு மறைத்து தான் செய்வேன் என்று பிடிவாதம்.. உன்னை துன்பம் அணுகாமல் காப்பதற்கு தான் இத்தனை முயற்சியும்.. அவர்களை தப்பு சொல்லாதே.. விளைவு எப்படியானாலும் அவர்கள் நோக்கம் உன் நன்மை கருதியே.. " என்று பொறுமையாக அவளுக்கு விளக்கினான்.

துன்பம் அணுகாமல் காப்பதற்கா? அப்படி எந்த துன்பத்தில் இருந்து தன்னை அவர் காப்பாற்றிவிட்டாராம்?! அவளுக்காகவே உயிர் தாங்கி நின்ற அவரை கடைசி காலத்தில் கண்ணுக்குள் வைத்து காப்பாற்ற முடியாது, இப்படி அவள் அருகிருப்பதை கூட உணர முடியாது ஒரு அநாதை போல அவரை விட்டிருககிறாளே .. இது தரும் துன்பம்.. இதில் அவளை அணுகாது எப்படி காப்பாற்ற போகிறார் அவர்?! இந்த குற்ற உணர்வு.. அது தரும் வேதனை.. அநாதையாகி விட்டேனே எனும் துன்பத்தோடு சேர்த்து, தாத்தாவை அநாதை போல சாக விட்டேனே எனும் துன்பத்தையும் கூடுதலாய் சுமப்பது அன்றி என்ன நன்மை இவர்கள் ஒளித்து மறைத்ததில்?!

உதடு நடுங்க, அடக்க மாட்டாது, "நீங்கள் கூட சொல்லாது விட்டீர்களே .." என்று வெதும்பினாள் மிதுனா.

முகம் கருத்த நளந்தன், "இது 'Loosing Game' என்று அப்போது எங்களுக்கு தெரியவில்லை.. ஓரளவிற்கு நோய் கட்டுக்குள் அடங்கும், பிறகு தெரிவிக்கலாமென்று இருந்தோம். உன் தாத்தாவை மீறி எங்களால் எதுவும் சொல்ல முடியவில்லை.. இருந்தாலும் நிலைமை கை மீறும் முன்னதாகவாவது உன்னிடம் சொல்லியிருந்திருக்க வேண்டும்.. எனக்கும் உள்ள நிலைமை சரியாக தெரியவில்லை. சுகவனம் தாத்தா சுகனின் மனைவி வீட்டு திருமணத்திற்கு குடும்பத்தோடு சென்றிருக்கிறார்." அவள் பார்வையின் பேதத்தை உணர்ந்து, ஒரு விளக்கத்தோடு தொடர்ந்தான்.

"ம்ஹூம்.. நீ நினைப்பது போல உன் தாத்தாவை மறந்து அவர் செல்லவில்லை.. திருமணத்திற்கும் போகாமல் இருக்க முடியாது என்பதால், போக வர இரண்டு நாள் மட்டுமே எடுத்து கொண்டு உன் தாத்தாவின் அருகில் இருப்பதற்காக நாளையே ஊர் திரும்புவதாக சொல்லி தான் சென்றுள்ளார்.. அதற்குள் இங்கே சந்தானம் சாரின் நிலை மோசமாகிவிட்டது. சுகந்தன் பயணமும் தவிர்க்க முடியாததே.. இருந்தாலும் உதவி டாக்டரிடம் எல்லாம் சொல்லி தான் சென்றிருக்கிறான்...நல்லவேளை, என் தாத்தாவிற்கு ஏதோ தோன்றி உன்னை இங்கே கொண்டுவிட சொன்னார்.. இல்லையென்றால் கடைசிவரை உனக்கு தெரியாமலே போயிருக்கும்.. அந்த வரை மனதை சமாதானபடுத்திக் கொள்.. தவறு தான்.. என்ன செய்வது..'Hind sight' எப்போதும் 20/20 என்பார்கள். இப்போது உன்னிடம் முன்பே சொல்லியிருக்க வேண்டுமோ என்று தான் தோன்றுகிறது.. சாரி.." என்றான் உணர்ந்த குரலில்.

முன்பு போல கனிவோ, கரிசனமோ அவன் குரலில் பொங்கி ஓடாவிட்டாலும், கடனே என்று சொல்லாமல் ஒரு கடமையோடு பேசினான்.

நடந்ததை எண்ணி பயனில்லை, நடக்க வேண்டியதை பார் என்பதே அவன் பேச்சின் சாராம்சம் என்று மிதுனா கண்டாள். ஆனாலும் தாத்தாவிற்கு 'தோன்றி' அவளை அங்கே அனுப்பினார் என்று அவன் சொன்னது அந்த நேரத்திலும் உறுத்தியது அவளுக்கு. அவராக எங்கே சொன்னார்?! அந்த நர்ஸ் சொல்லாவிட்டால், அவளுக்கு எப்படி தெரிய போகிறது? அவன் சொன்ன 'கடைசி வரை தெரியாமலே போகும்' நிலை தான் உண்டாகியிருக்கும். ஏன் இவனிடம் கூட பெங்களூரு செல்ல வேண்டும் என்று அவளாக தானே கேட்டாள்? இவர்கள் எவருக்கும் சொல்லும் எண்ணமே கிடையாது. மனம் சமாதானமடையவில்லை. விரக்தியில் உதடு சுளித்தாள் அவள்.

அவளது ஒப்புக்கொள்ளாத தோற்றம் கண்டாலும், புரிந்தாலும் அதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை என்பதால் நளந்தன், "டாக்டர் வருகிறாரா என்று பார்த்து வருகிறேன்" என்று சொல்லி அவள் பதிலுக்கு காத்திராமல் வெளியேறினான்.

சற்று நேரத்திற்கெல்லாம் உதவி டாக்டரோடு அவனும் வர, பதைபதைத்து  எழுந்தாள் மிதுனா. ஏதேதோ சோதனைகள் செய்த அவர், நளந்தனை மட்டும் தனியே அழைத்து சென்றார். யுகம் போல முடிந்த 15 நிமிடங்களுக்கு பிறகு உள் நுழைந்த நளந்தன், "தாத்தாவிற்கும், சுகன் வீட்டிற்கும் தகவல் தெரிவித்துவிட்டேன்.. நீ யாருக்காவது சொல்ல வேண்டுமா?" என்றான் பரிவோடு.

அவன் பேசும் பாஷையே புரியாதவள் போல மலங்க மலங்க விழித்தாள் மிதுனா. 'தகவல் தெரிவித்துவிட்டேன்' என்று அவன் சொன்னது அவளுக்குமே தகவல் ஆனது. எல்லாருக்கும் சொல்லி அனுப்பியாயிற்று என்றால்.. தாத்தாவை வழி அனுப்ப சொல்லியாகி விட்டதாமா?! ஐயோ தாத்தா! இதற்கா இத்தனை பாடு?! ஒரே ஒரு தரம் 'பாப்பா' என்று அவர் அழைக்க கேட்கும் பாக்கியதை கூட அவளுக்கு மறுக்கப்பட்டு விட்டதா? ராவெல்லாம் 'பாப்பா' பாப்பா என்றாராமே! பாவி சுபலாவும், இவனும் நேற்றிரவு அவளை மாறி மாறி பந்தாடாமல் விட்டிருந்தால் விஷயம் தெரிந்த உடனே ஓடி வந்திருப்பாளே.. தாத்தா 'பாப்பா' என்றழைத்ததை ஒரு தரமேனும் கேட்டிருப்பாளே! ஆயிரமாயிரம் அரற்றல் ஆட்டுவித்தது அவளை. அதன் ஆர்ப்பரிப்பு தாளாமல் உடல் தன் வசமின்றி துவள, அவளை அப்படியே தாங்கி இருக்கையில் அமர்த்தியவன், அவள் தோள் தொட்டு , "மிதுனா..மிதுனா.. ஏதாவது பேசு.." என்று லேசாக உலுக்கினான்.

பேசாமடந்தையாக அவள் அவன் ஆட்டிய பக்கம் ஆட, அவள் கன்னத்தை பற்றி தன் பக்கம் திருப்பினான். அவன் அறைந்த கைத்தடம் பதிந்த கன்னம் வலியால் சுருங்க நளந்தன் முகம் குற்றவுணர்வில் கன்றி கருத்தது.

அதே சமயம் தாத்தாவிடம் ஒரு சிறு அசைவை கவனித்த மிதுனா, "தாத்தா" என்று பாதி கூவலும் பாதி கேவலுமாக அவர் தலைப் புறம் ஓடினாள். அவள் குரலை அடையாளம் கண்டுகொண்டது போல கண்களை பலவீனமாக இமைத்து ஒரு கையை அவளை நோக்கி நீட்டினார் தாத்தா. ஓடி சென்று அவர் கையை உடும்பென பற்றிக் கொண்ட மிதுனா மேற்கொண்டு அவரிடம் எந்த அசைவும் காணாது பதற, "மறுபடியும் நினைவு தப்பிவிட்டது" என்று கரகரத்தான் நளந்தன்.

பிய்த்து போட்ட பூமாலை போல வாடி வதங்கி தாத்தாவின் கைவளைவிலேயே தலை வைத்து சுருண்டு கிடந்தாள் மிதுனா. முந்திய இரவு அவளிடம் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்த நளந்தன் இன்றோ இன்னதென்று புரியாத வேதனையோடு அவளையே பார்த்து கொண்டிருந்தான்!

Comments

  1. மிதுனாவின் வாழ்க்கையில் தான் எவ்வளவு துயரம்

    அவளுக்கு யார் தான் ஆறுதல் சொல்லி தேற்ற முடியும்

    ReplyDelete
  2. I cried after reading this episode! i dont knw what else to say.. hats off thaen!

    ReplyDelete
  3. I cried reading this episode ! Dont knw wht to say.. hats off to thaen !

    ReplyDelete

Post a Comment