Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 36

இருள் மறைத்த நிழல் (தேனு) - 36

முட்டாளின் சொர்க்கம்  , திரிசங்கு சொர்க்கம் என்பது எல்லாம் போய், திக்கு தெரியாத காட்டில் அல்லவா மாட்டிக் கொண்டாள் மிதுனா! இப்படி சொல்லாமல் கொள்ளாமல் சிதறியதே அவள் உலகம்!

தன் மனதை அவனிடம் சொல்லவும் முடியாது, உள்ளே போட்டு பூட்டவும் முடியாது.. இந்த உயிர் வாதை தாங்க முடியாது மனம் தவித்தது.

ஒரு புறம், இந்த துன்பமெல்லாம் நளந்தன் தன்னை காதலிக்காததால் மட்டும் வந்ததா அன்றி சுபலாவை காதலிப்பதால் வந்ததா என்றும் குழப்பமாக இருந்தது..

 அவன் விருப்பம் சுபலாவிடம்  என்றால், என் விருப்பம் அவனோடு..அதுவும் என்னோடு. இதை யாரிடமும் நான் சொல்ல வேண்டியதும் இல்லை; என் நேசத்தைக் கிள்ளி எறிய வேண்டியதும் இல்லை என்று தனக்குள் திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டாள்.


ஆனாலும், ஏனோ சுபலாவையும் நளந்தனையும் இணைத்துப் பார்க்க மனம் கேட்கவில்லை. என்ன மாய வலை விரித்தாள் இந்த ஜாலக்காரி சுபலா? என்று மனம் வெதும்ப, தன் எண்ணப் போக்கைக் கண்டு தானே முகமும் சுளித்தாள்.

என்ன இது, வலை, ஜாலம்  என்று நன்கறியாத ஒரு பெண்ணைப் பற்றி இகழ்வாக எண்ணுவது?! தான் காதலித்தால் அது நேசம், அந்த சுபலா  காதலித்தால் அது ஜாலமா?  அந்த சுபலாவைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்? ஒருவேளை சுபலா உண்மையாக கூட நளந்தனை நேசிக்கலாமே..அவர்களுக்காக சந்தோஷப்பட முடியாவிடிலும், இப்படி பொருமாமலாவது  இருக்கலாமே..என்று பெரிய நியாயவாதியாக தன்னோடு வாதிட்டு தோற்றாள் மிதுனா.

இல்லை, அந்த சுபலாவிடம் ஏதோ தப்பு இருக்கிறது. சுபலாவைத் தவிர வேறு யாரைக் காதலிப்பதாக நளந்தன் கூறினாலும் ஒரு பெருமூச்சோடு அவனுக்கு பிடித்திருக்கிறது, அது தான் முக்கியம் என்று ஓரளவிற்கு மனதைத் தேற்றி, ஏற்றுக் கொண்டிருப்பாள்  என்றே அவளுக்கு தோன்றியது.

சுபலா கையில் அவன் குரங்கு கை பூமாலை என்று தாத்தா சொன்னாரே..அதனாலா?! அல்லது  தனக்கே காரணமின்றி அவளிடம் வெறுப்பா? நளந்தனின் காதலி என்பதால் மட்டும் வந்த வெறுப்பென்றால்    அது வேறு பெண்ணாக இருந்தாலும் வரவேண்டும் தானே? அப்போது மட்டும் எப்படி தேற்றி ஏற்றுக்  கொள்வாள்?! இல்லை..இது அவன் காதலி என்பதால் மட்டும் வந்த எரிச்சல் அல்ல.

சுபலா சரியில்லை. உள்ளுணர்விற்கு மேல், ஆதாரம் ஒன்றும் அவளிடம் இல்லை. தாத்தாவிற்கும் அப்படித்தான் தோன்றியதா? அது தான் 'உனக்கு புரியாதம்மா' என்று சொன்னாரா?

பதில் தேடி கிடைக்காது அலுத்தாள் மிதுனா.

அலுப்பு அழுகையாக மாறி இனி கொட்ட கண்ணீர் இல்லை என்றானதும் சிந்தனை கொஞ்சம் சீர்பட்டது. இப்போது என்ன ஆகிவிட்டது? அவள் நளந்தன நேசிக்கிறாள். அவன் அவளை நேசிக்கவில்லை. அவ்வளவுதானே?! அவனை அவள் நேசிக்க கூடாது என்று எவரும் தடை விதித்து விடவில்லையே! அப்படி விதிக்கவும் முடியாதே! அவனோடு வாழ்ந்தால் தானா? அவன் நினைவில், தாத்தாவைப் போல தனிமரமாக வாழ அவளால் முடியாதா?


ஏன் இப்படி அசோகவன சீதை போல இடிந்து போக வேண்டும்? சிறு வயதில் இருந்து தன் சுகம் தானே பார்த்து வளர்ந்தவள் அவள். தாத்தா ஒரு பெரிய துணை தான் என்றாலும், ஒரு தலைமுறைக்கு முந்தியவர்..அவரால் புரிந்து கொள்ளமுடியாத உள்ளம் சார்ந்த எத்தனைப் பிரச்சினைகளை அவள் தனியே கையாண்டிருக்கிறாள்! தாய் தந்தை இல்லாமல் வாழ பழகவில்லையா?..இதுவும் அப்படிப்பட்ட விஷயம் தான். ஆனால், இது விஷயத்தில்  தாத்தாவிடம் கூட ஆறுதல் தேட முடியாது.. மனதோடு வைத்து புழுங்க வேண்டும்.. தனியே சுமக்க வேண்டும்..அளவில் பெரியது. பரிமாணத்தில் பெரியது. பாறாங்கல் போல பாரம் தான். இருப்பினும்  அவளால் சுமக்கமுடியும். சுமக்கத்தான் வேண்டும். ஒரு மூச்சு அழுதவள், முகம் கழுவி மனம் தேற்றினாள்.

Comments

  1. கதையின் ஓட்டத்தில் இந்த அத்தியாயம் சற்று தொய்வாக இருப்பினும்
    மிதுவின் மன போக்கை அதனால் உண்டாகும் சிந்தனைகளை
    அதை செயல் படுத்த எடுத்து கொண்ட அவளின் பக்குவத்தை தெரிந்து கொள்ள முடிகிறது
    பதிவுக்கு நன்றிபா

    ReplyDelete
  2. //ஏன் இப்படி அசோகவன சீதை போல இடிந்து போக வேண்டும்? சிறு வயதில் இருந்து தன் சுகம் தானே பார்த்து வளர்ந்தவள் அவள். தாத்தா ஒரு பெரிய துணை தான் என்றாலும், ஒரு தலைமுறைக்கு முந்தியவர்..அவரால் புரிந்து கொள்ளமுடியாத உள்ளம் சார்ந்த எத்தனைப் பிரச்சினைகளை அவள் தனியே கையாண்டிருக்கிறாள்! தாய் தந்தை இல்லாமல் வாழ பழகவில்லையா?..இதுவும் அப்படிப்பட்ட விஷயம் தான். ஆனால், இது விஷயத்தில் தாத்தாவிடம் கூட ஆறுதல் தேட முடியாது.. மனதோடு வைத்து புழுங்க வேண்டும்.. தனியே சுமக்க வேண்டும்..அளவில் பெரியது. பரிமாணத்தில் பெரியது. பாறாங்கல் போல பாரம் தான். இருப்பினும் அவளால் சுமக்கமுடியும். சுமக்கத்தான் வேண்டும். ஒரு மூச்சு அழுதவள், முகம் கழுவி மனம் தேற்றினாள்.//

    இந்த மிது வேண்டுமானால் மனம் தேற்றி கொள்ளலாம்
    அனால் நம்மால் முடியாது என்று தான் தோன்றுகிறது
    மிதுவின் நிலையை நினைத்து கண்கள் பனிக்கின்றன

    ReplyDelete
  3. AnonymousJune 29, 2017

    Nalandhan varaadha chapter konjam dull adikkara madhiri irruku though it is related to the story .

    ReplyDelete
    Replies
    1. Same feelings here :) Even I could not wait for him to show up. - Author

      Delete
  4. AnonymousJuly 02, 2025

    Nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    ReplyDelete

Post a Comment