Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 64

இருள் மறைத்த நிழல் (தேனு) - 64

சங்ககிரி! பெயரை போலவே ஊரும் அழகாக இருந்தது. டாக்ஸி ஒரு கிளை பாதை தொடங்குமிடத்தில் இருந்த ஒரு எல்லை கோவில் முன் வந்து நின்றது. முகப்பு இல்லாத அந்த கோவிலும் உள்ளே விண்ணளப்பது போல காவல் தெய்வமாக உயர்ந்து நின்ற மிக  பெரிய முனியப்பன் சிலையும்.. ஊருக்கு உள்ள பாரம்பரியம், தனி சிறப்பு சொல்ல, பக்தியோடு கை கூப்பி நின்ற டாக்ஸி டிரைவரோடு, நளந்தனும் மிதுனாவும் கூட பரம்பொருளில் மனம் ஒன்றி வழிபட்டனர்.

குத்தகைதாரர் வீட்டிலேயே தங்குவதாக ஏற்பாடு. நில உரிமையாளர்கள் என்ற முறை மட்டுமல்லாது இயல்போடு வந்த விருந்தோம்பலும் சேர்ந்து கொள்ள அவர்களுக்கு அங்கே நல்ல வரவேற்பு, உபசரிப்பு. சமீபத்தில் தான் வீட்டில் ஒரு திருமணமும் நடந்தேறியிருக்க, மறுவீடு அழைப்பு, நாத்தனார் மரியாதை, மச்சினன விருந்து, மச்சான் முறை என வீட்டில் பல சொந்தங்களின் அணிவகுப்பு. கடா வெட்டி விருந்து தடபுடல் பட்டது. சொந்தத்தோடு சொந்தமாக அவர்களிருவரையும் கூட வஞ்சமின்றி அணைத்து கொண்டனர். கள்ளமற்ற கிராமத்து வாசம்.

நல்லவேளை, நளந்தன் முன்கூட்டியே கோடிகாட்டியிருந்ததால், அவள் கொண்டு வந்ததனைத்தும் சேலைகளே. அவன் யோசனைப்படி இரு பட்டு சேலைகள் கூட. வெறும் ஒரு பத்து நாளுக்கு எதற்கு என்று அவள் மறுத்த போது கூட கிராமம் என்றால் ஏதாவது விசேஷம் வந்து போகும். ஒரு கோவில் குளம் என்று செல்லவேண்டி இருக்கும். அப்போது நீ மட்டும் சாதாரண சேலையில் இருப்பாயா என்று பெரிய தாத்தா போல அவன் வாதாட, ஏதோ அவன் திருப்திக்காக என்று தான் ஒன்றிரண்டு பட்டு சேலைகளையும் எடுத்து வைத்தாள். வந்த அன்றே புது பெண்ணையும், பையனையும் அழைத்து கொண்டு அந்த வீட்டினர் அம்மன் கோவில் செல்ல, மிதுனாவும் கலந்து கொண்டாள் - பட்டு சேலையில். சொன்னேனே பார்த்தாயா என்று நளந்தன் ஒரு வெற்றி பார்வை பார்த்தான்.

இன்னும் அவர்கள் தங்கவிருக்கும் கிராமம் பற்றி அவன் சொன்ன விதத்தில் இரவில் 'நைட்டி' கூட அதிகப்படியோ என்று அவளுக்கு தோன்றி விட, எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரே ஒரு  நைட்டி தான் எடுத்து வைத்திருந்தாள். ஆனால் அதுவும் அவர்கள் தங்குமிடம் பார்த்ததும் சாத்தியமில்லை என்று தெரிந்து போனது! இடத்தை பார்த்த மாத்திரத்தில் பெரும் அதிர்ச்சி தான்.

குத்தகைதாரர் முத்துசாமி கவுண்டரின் பேரன் திருமணத்திற்கு வந்த சாதி சனம் விருந்து சம்பிரதாயம் முன்னிட்டு அவர் வீட்டில் தங்கிவிட நளந்தன் மிதுனாவுக்கு என்று அவர்களது 'குடில்' ஒன்றை ஒதுக்கி தந்தார். 'குடில்' என்றால் என்னவோ கற்பனை செய்து கொண்டு போன மிதுனாவிடம் ஒரு சின்ன ஒற்றை அறையை காட்டினால் வேறு எப்படி இருக்கும்?!

காற்றோட்டத்திற்கு இரு புறம் ஜன்னல் வைத்த சிக்கனமான சின்ன அறை அது. சுவரை குடைந்து அமைக்க பட்டிருந்த அலமாரி. பூட்டப்படாத ஒரு கோத்ரேஜ் பீரோ, அறை மூலையில் குவித்த மணல் பரப்பின் மேல் தண்ணீர் சுமந்த ஒரு அழகிய மண் பானை. அதை மூடிய ஒரு சிறிய வெண்கல தட்டு. சுவர் ஓரம் ஒரு சின்ன ஸ்டூல், அதன் மேல் ஒய்யாரமாக உட்கார்ந்திருந்த ஒரு டேபில் ஃபேன்.

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல ஒட்டி போடப்பட்டிருந்த இரண்டு இரும்பு கட்டில்! தடிமன் அதிகமில்லாத இலவம் பஞ்சு மெத்தை, தலையணை, கம்பளி என  எல்லாம் இரண்டிரண்டு, ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு!

திகைத்து போய் மிதுனா அறையை அளந்த விதம் கண்டு நிலைப்படியில் சாய்ந்து இலகுவாக நின்ற நளந்தன் தொண்டையை செருமி, "பகவத் கீதையா? பைபிளா? குரானா, மிதுனா?! " என்று மென்குரலில் கேட்டான்.

 அவன் குரலில் ஒலித்த குறும்பில் ஏதோ கலாய்க்கிறான் என்று புரிய, எச்சரிக்கை கலந்த 
 ரசனையோடு அவனை ஏறிட்டு, "ச்சு.. புரியாமல் பேசுவதில் பட்டதாரி நீங்கள்!" என்றாள் சலுகையாக.

அதே ரசனையோடு அவளை நோக்கி, "நானா?! அது சரி! புரிந்து கொள்ளாமல் பேசுவதில் நீ முதுகலை பட்டதாரி ஆயிற்றே!" என்று லேசாக சிரித்து சொன்னவன், "இல்லை..  இந்த ராத்திரியில் தனியே ஒரு கட்டை தடியனோடு மாட்டிக்கொண்டாயே.. கட்டில் நடுவே வைக்க ஏதும் கீதை, குரான் தேடுகிறாயோ என்று பார்த்தேன்" என குறும்பாக நகைத்தான்.

அவனது இலகு பேச்சு அவளது இறுக்கம் தளர்த்த அவளும் கிளுக்கி சிரித்து விட்டு, "ஒன்றும் தேவையில்லை. அதெல்லாம் இல்லாவிட்டாலும் உங்கள் மேல் எனக்கு ரொம்பவே நம்பிக்கை இருக்கிறது" என்றாள். மனதின் ஆழத்தில் இருந்து வந்த வார்த்தைகளே அவை.

"உன் மேல் நம்பிக்கை இல்லையா?" என்று அவன் கேட்க, ஒரு வேகத்துடன் நிமிர்ந்த மிதுனா அவன் கண்ணில் தெரித்த குறுநகை அவன் சீண்டலை சொல்ல, அவன் குறும்பு புரிந்து தானும் இணைந்து சிரித்தாள்.

சிரித்த படியே கதவை தாளிட்டவன், ஒட்டி இருந்த கட்டில்களை பிரித்து போட்டான். ஜன்னல்களை நன்கு திறந்து விட்டு விட்டு, பின்னர் கதவோரம் இருந்த கட்டிலில் கால் நீட்டி படுத்து கொண்டு, "குட் நைட்" என்று சலனமின்றி சொல்லி சீக்கிரமே நித்திரையில் ஆழ்ந்தான்.

Comments

  1. //"இல்லை.. இந்த ராத்திரியில் தனியே ஒரு கட்டை தடியனோடு மாட்டிக்கொண்டாயே.. கட்டில் நடுவே வைக்க ஏதும் கீதை, குரான் தேடுகிறாயோ என்று பார்த்தேன்" என குறும்பாக நகைத்தான்.//

    லொள்ளு தாங்க உங்க ஹீரோவுக்கு.. :)

    ReplyDelete
  2. Ha Ha.. ellam thamizh padam paththa effect thanga..

    ReplyDelete
  3. AnonymousJune 29, 2017

    Nalandhan-kku odambellam kozzhupudan. But story-la life-ye avanoda dialogues dhan.i admire his characterization very much ( except his smoking habit and Pre marital indiscipline.)

    ReplyDelete

Post a Comment