Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 63

இருள் மறைத்த நிழல் (தேனு) - 63

சங்ககிரியில் குறைந்தது பத்து நாட்களாவது தங்க வேண்டியிருக்கும் என்பதால் நளந்தன் அவனில்லாத சமயம் நிர்வாக செயல்பாடுகளை கவனிக்க தக்க ஏற்பாடுகள் செய்தான். அன்று மாலை வந்து அவளை அழைத்து செல்வதாக சொல்லி அலுவலகம் சென்றவன் மதியமே வந்து நின்றான்.

பத்து நாட்கள் வீடு துடைக்க பெருக்க ஆளின்றி கிடக்குமே என்று மிதுனா மதியம் வீடு முழுவதும் வேக்குவம் கிளீன் செய்து கொண்டிருந்தாள்.

அதை கண்ணுற்ற நளந்தன், பட்டென அவள் கையில் இருந்த வேக்குவம் கிளீனரை பிடுங்கி  தள்ளி வைத்தான்.

"இதெல்லாம் நீ ஏன் செய்கிறாய்?" என்றவன், அவள் ஊரில் இருந்து வந்ததில் இருந்து வீடு  ஒரு தூசு தும்பு இன்றி தூய்மையாக இருப்பதும், வீட்டில் வேலையாட்கள் இல்லை என்பதும் மனதில் பட, முகம் மாறி, "சாரிம்மா.. வேலையாட்களை நிறுத்திவிட்டது உனக்கு சிரமமாக இருந்திருக்கும் இல்லையா.. நான் அன்று அதை நினைத்து பார்க்கவே இல்லை.. ஏதோ கணக்கில்" என்றவன் சொல்ல வந்ததை நிறுத்தி, " ரொம்ப வேலையா? அவர்களை வர சொல்லி விடட்டுமா? ச்சு.. நாம் தான் ஊருக்கு போகிறோமே .." என்று தடுமாறினான்.

அவன் கனிவு மனதை தொட, "இல்லையே.. சிரமமெல்லாம் ஒன்றுமில்லையே" என்றாள் முகம் மலர.

கண்கள் கனிவுற அவளை நோக்கி முறுவலித்தவன், முகம் கன்றி, "வந்து.. அவர்கள் இருந்தால் நாம் இயல்பாக .. வந்து.. அக்கம் பக்கம் பார்த்து பேச வேண்டும்.. நாம்.. நமக்கிருக்கும் மன உளைச்சலில் அது வேறு தொல்லை என்று தான் அவர்களின் விடுப்பை சம்பளத்தோடு நீட்டி விட்டேன்." என்றான் மறுபடியும்.

"நான் ஒன்றும் குறைபட வில்லையே" என்று மிதுனா தன் ஒப்புதலை சின்ன குரலில் காட்டினாள்.

அப்போது அங்கே மேஜை மேல் அனாவசியமாக எறியப் பட்டிருந்த ஒரு நகை பெட்டி கண்ணில் பட , "நகை போல் தெரிகிறதே..  பத்திரமாக வைக்காமல் இப்படி போட்டிருக்கிறீர்களே" என்று கள்ளமின்றி சொன்னாள் மிதுனா.

அசுவாரசியமாக அந்த பெட்டியை பார்த்தவன், "இருப்பது நீயும் நானும் மட்டும் தான். அதனால் எல்லா இடமும் பத்திரமான இடம் தான்" என்றான் வசீகரமாக புன்னகைத்து.

அவன் காட்டிய நம்பிக்கை மனதை குளிர்விக்க அவளும் புன்னகைத்தாள்.

பேச்சு போக்கில் அந்த பெட்டியை திறந்த நளந்தன் ஒரு அழகு நீல கல் பதித்த மோதிரத்தை எடுத்து அந்த கல்லின் ஒளிர்வை பார்த்தபடி , "ஏதோ ஆசையில் வாங்கியாகி விட்டது. இப்போது அணிந்து பார்க்க கூட மனமில்லை" என்றான்.

சந்திர காந்த கல் பதித்த அந்த மோதிரம்! மிதுனாவின் நெஞ்சு நின்று பின் துடித்தது. காதலின் பரிசாக சுபலா கொடுத்ததா?! ஆசையில் வாங்கிய பின் முதுகில் கட்டிய கல்லாக மிதுனா இருப்பதால் அணிய மனம் வரவில்லையா? அவனது சுருக்கமான பேச்சுக்கு மிதுனா கண்ட விரிவாக்கம் விகாரமாக விரிந்தது.

தொண்டையில் அடைத்ததை விழுங்கி, "ஏன்? " என்றாள் சின்ன குரலில்.

நளந்தன் ஒற்றை விரலால் அவள் முகவாயை நிமிர்த்தி மிருதுவான குரலில் சொன்னான், "எதையோ இழந்ததை போல வெறிச்சோடி கிடக்கும் உன் பார்வை.. இந்த முகம்.. உன் மனம் எல்லாம் என்னை வெகுவாக வாட்டுகிறது, மிதுனா. இதில் உன் பழைய துள்ளலை கண்டால் தான் எதுவும் எனக்கு ரசிக்கும்" .

அவளுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது. பழைய துள்ளல்.. அது என்றேனும் வருமா?! நளந்தனை வெறுக்கவும் முடியாமல் அவனோடு ஒன்றவும் முடியாமல் அவள் அனுதினமும் போராடுகையில் அவள் துள்ளுவது என்று? அலை ஓய்வது என்று? அவன் கரை சேர்வது என்று?

சுபலாவிடம் கொண்ட காதலையும் தன்னிடம் கொண்ட கருணையையும் கடமை. தியாகம் என்று அவன் தான் போட்டு குழப்பி கொள்கிறான் என்றால்.. தன்னை பொறுத்தவரை  இனி நளந்தன் தனக்கு ஒரு நண்பன் மட்டுமே என்ற அவள் கருத்தை அவளாவது தெளிவுபடுத்த வேண்டாமா?

கண்ணெதிரே மின்னிய சுபலாவின் பரிசும், மனக்கண்ணில் வந்து போன "SUBHASTHALA RESORTS" என்ற தங்க  நிற  விளம்பர அட்டையும் அவள் எண்ணத்தை உறுதிபடுத்த,

மனம் வலித்தாலும் அதை மறைத்து, நளந்தனின் நலம் மட்டும் கருத்தில் கொண்டு ஒன்று உரைத்தாள் மிதுனா.

"நான் நன்றாக தான் இருக்கிறேன். தாத்தா ஞாபகம் சில சமயம். வேறு ஒன்றுமில்லை. இதை போட்டு காட்டுங்களேன்" என்றாள் முயன்று தருவித்த முறுவலோடு.

"சந்திர காந்த கல். ஜூன் மாதம் பிறந்தவர்களுக்கு உகந்ததாம்.  ராசி கல்." என்றவன், "போடத்தான் வேண்டுமா?" என்று கேட்டான்.

அவள் ஆமாம் என்று உறுதி காட்ட, "அவ்வளவு தானா? ஹ்ம்.. போட்டே விடுவாயோ என்று நினைத்தேன்" என ஒரு பொய்யான நெடுமூச்சு விட்டு பற்கள் மிளிர சிரித்தான்.


துணுக்குற்றாலும் சமாளித்து "ம்ஹூம்.. உங்களை வாழைப்பழ சோம்பேறியாகவே ஆக்கிவிட்டேன் போலிருக்கிறதே" என்று ஒரு விரலால் பத்திரம் காட்டி சிரித்தாள்.

அவளது முயற்சியை கண்டு கொண்டவன் அதே குரலில், "மறுப்பை நாசூக்காக தெரிவிக்கிறாயாக்கும்" என்று சொல்லி சிரித்து கொண்டே அந்த மோதிரத்தை அணிந்து கொண்டான்.

அவனது நீண்ட உறுதியான விரலில் அளவெடுத்து செய்தது போல கச்சிதமாக பொருந்தியது அந்த நீல சந்திரகாந்த கல் மோதிரம். ஆரோக்கியமான நகங்களும், அந்த ராசி கல்லும் அழகாக ஒளிர, அதற்கு ஈடாக மிதுனாவின் பளிங்கு கண்களில் இரு நீர் மணிகள் மின்னின.

Comments

  1. Unga hero love a nera eppathan solluvaru...

    ReplyDelete
  2. AnonymousMay 04, 2016

    Ya eppo solluvaru

    ReplyDelete
  3. AnonymousJuly 21, 2016

    Hai thenu neenga enga kongu mandalama? Storyla kongu tamil thulli vilaiyaduthe

    ReplyDelete

Post a Comment