Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 59

இருள் மறைத்த நிழல் (தேனு) - 59

மிதுனாவின் சுளித்த புருவம் கண்ட நளந்தன் அக்கறையாக, "என்ன ஆச்சு?" என்றான்.
"ச்சு.. ஒன்றுமில்லை" என்று அவள் திரும்பி கொள்ள,

"அப்படியானால் எதுவோ இருக்கிறது!"  என்றவன் சாவதானமாக தனது சுழல் நாற்காலியை அவள்  பக்கம் இழுத்து போட்டு அமர்ந்து கொண்டு, "ம்.. இப்போது சொல். என்னவாயிற்று?" என்றான் அதே அக்கறையுடன்.

அதற்குள் தன்னை சமன்படுத்தி கொண்ட மிதுனா, "கொஞ்சம் தலைவலி " என்று சமாளித்துவிட்டு, "உங்கள் சுபலா வந்திருந்தாள்" என்றாள் வேண்டுமென்றே குரலில் அசுவாரசியம் காட்டி.

"'என்' சுபலாவா? ம்.. சரி தான்" என்ற நளந்தனின் பார்வை அவளை அளவிட்டது.

கையில் இருந்த பேனாவை இப்படி அப்படி இருவிரலால் சுற்றியவன், "அவள் வரவு பிடிக்கவில்லை என்றால் வரவேண்டாம் என்று அவளிடமே சொல்லிவிடுவது தானே?" என்று ரொம்பவும் சாதாரணமாக சொன்னான்.

சுபலா அவனிடம் இருப்பது போல காட்டி கொண்ட நெருக்கம், உரிமை தந்த எரிச்சலில் மிதுனா, "அவள் வரவு எனக்கு ஏன் பிடிக்காமல் போக வேண்டும்? உங்கள் இடத்திற்கு உங்களை பார்க்க எவ.. யாரோ வந்தால் அதை பற்றி எனக்கென்ன?" விட்டேற்றியாக சொன்னாள்.

ஒரு சில வினாடிகள் ஒன்றும் பேசாமல் அவளை ஆழ பார்த்தவன், "உன் இஷ்டம்" என்று மட்டும் சொல்லி எழுந்தான்.

அறையை கடக்குமுன், ஏதோ நினைத்தவன் போல திரும்பி அவளை ஒரு தரம் பார்த்து, "அப்புறம் மிதுனா, என்ன சொன்னாள் 'என்' சுபலா?" என்று கிண்டலாக கேட்டான்.

அந்த 'என் சுபலாவில்' மிதுனாவின் பொய்யான அமைதி பறந்தது. அவனை வெட்டுவது போல பார்க்க, கண்ணில் இளநகை துலங்க, "என்னம்மா.. உன் 'சிநேகிதனை' பார்க்க ஒருத்தி வந்திருக்கிறாள்.. என்ன ஏது என்று விவரம் கேட்டிருக்க வேண்டாமா?" என்று சொல்லி உல்லாசமாக சிரித்து சென்றான்.

மறுநாள் அவனோடு சேர்ந்து அலுவலகம் செல்ல அவளுக்கு மனமேயில்லை. அவள் கிளம்பாதிருப்பதை கண்ணுற்ற நளந்தன் என்ன ஏது என்று துளைத்தெடுத்தான்.

சுபலா வந்து விடுவாளோ, அவளை பார்க்க நேருமோ.. அதிலும் நளந்தனும் சுபலாவும் சேர்ந்து இருப்பதை பார்க்க நேருமோ என்பதே  அவள் கலக்கத்திற்கு காரணம். ஆனால் அதை என்னவென்று அவனிடம் சொல்வாள்?

தலைவலி என்று நேற்று போல சொன்னால், "நேற்றிலிருந்தா?!" என்று ஏகத்துக்கும் ஆச்சர்யம் காட்டினான்.

முடிவில், "இந்த காதலர் தினத்தன்று தான் நம் 'ரிசார்ட்ஸ்'  திட்டம் தொடங்குகிறது. அந்த டைம் ஷேர் திட்டம் வழியாக நம் விடுதிகளில் முன் பதிவு செய்பவர்களுக்கான சலுகை, பரிசு முதலான விவரம் சொல்லும் விளம்பர டிசைன்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்...  நீயும் வந்தால் ஒருவருக்கு இருவராக பார்த்து நல்ல டிசைன் தேர்வு செய்யலாம்." என்று தன் பேச்சு சாமர்த்தியத்தை எல்லாம் காட்டி அவளையும் கையோடு கூட்டி சென்றான் நளந்தன்.

அவள் பயந்தது போலவே சுபலா அன்றும் வந்தாள். நேற்று போலவே நளந்தன் அறையில் இல்லை. ஆனால் அவள் வருவாள் என்று மிதுனா எதிர்பார்த்திருந்ததால், நேற்று போல மகா அதிர்ச்சி எல்லாம் இல்லை. சுபலா அன்று போல பேச்சை ஆரம்பிக்க இடைவெட்டிய மிதுனா, "அவர் கான்பரன்ஸ் ரூமில் தான் இருக்கிறார்." என்று மொட்டையாக சொல்லிவிட்டு, நளந்தன் அறைக்குள் இருக்கும் ஒரு ஆள் நிற்கும் அளவிலான கிளாசட் உள் சென்று ஏதோ ஃபைல்  பார்ப்பது போல அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள். இவளை பார்த்து குற்றம் செய்தவள் போல நாம் ஏன் ஓடி ஒளிய வேண்டும் என்று  மனம் முரண்டு பிடித்தாலும், துஷ்டரை கண்டால் தூர விலகுவது மதி தானே என்று சமாதானப் படுத்தி கொண்டாள்.

வம்பளக்க வழியில்லாத சுபலா அவள் முதுகை பார்வையால் சுட்டெரித்துவிட்டு பலனில்லை என்றானதும் நளந்தன் வருவதற்குள் ஏதும் ஒற்றறிய முடியுமா என்று ஆள் தேடி சென்றாள்.

சற்று நேரத்தில் மீட்டிங் முடிந்து உள்ளே வந்த நளந்தன் மிதுனாவின் முக கடுப்பை ஒரு நோக்கில் கவனித்துவிட்டு தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தான். மிதுனாவிற்கு அங்கே செய்ய ஒரு வேலையும் இல்லை. அவன் சொன்ன டிசைன்களும் வந்த பாடில்லை. அதனால்,  இணையதளத்தில் வேலை வாய்ப்பு  விவரம் தேடி கொண்டிருந்தாள்.அவன் வந்ததை உணர்ந்தாலும் அவனை நிமிர்ந்து பார்க்க கூட பிடிக்கவில்லை.

லேசாக கனைத்த நளந்தன் மென்குரலில், "தலைவலி வந்துவிட்டதா, மிதுனா?" என்றான். அவன் குரலில் திடுக்கிட்டு அவனை பார்த்த மிதுனா அவனது குறுஞ்சிரிப்பில் குழம்பினாள். அவள் தலைவலி அவனுக்கு கேளிக்கையாமா?! அவள் ஏதும் சொல்லுமுன் கதவை தள்ளி கொண்டு ஒயிலாக உள்ளே வந்தாள் சுபலா. 'இதோ தலைவலி நேரிலேயே வந்து  விட்டதே!' என்று உரக்க சொல்ல வேண்டும் போல இருந்தது மிதுனாவுக்கு.

கணநேரத்தில் மிதுனாவின் சோர்வையும், நளந்தனின் யோசனையையும் முடிச்சு போட்டு கணக்கிட்ட சுபலா தனக்கு அங்கே ஒரு வாய்ப்பு இருப்பதாகவே நம்பினாள். முன்பு போல நளந்தனின் முகவாயை பற்றி திருப்பி, இதழ் ஒற்ற  துணிவில்லை என்றாலும், அவன் தோளை நெருங்கி சம்பிரதாயம் போல பட்டும் படாமல் அணைத்து  "ஹலோ விஜ்ஜி" என்றாள்.

அவளை விலக்க யத்தனித்த நளந்தன் மிதுனாவின் முகம் போன போக்கில் நிதானித்து,  "வா சுபா" என்றான் குரலில் மகிழ்ச்சி காட்டி. வேலை விண்ணப்பம் ஒன்று டைப் செய்து கொண்டிருந்த மிதுனாவின் விரல்கள் அவன் குரலில் ஓரிரு  வினாடி உறைந்து அந்த நேரத்தை சரி கட்டுவது போல முன்னிலும் வேகமாக டைப்ரைட்டரில் ருத்ர தாண்டவம் ஆடின. நளந்தன் முகத்தில் ஒரு ரகசிய முறுவல் இழைந்தோட, "வீட்டில் எல்லாரும் சௌக்கியமா?" என்று ரொம்ப முக்கியம் போல விசாரித்தான்.

'சுபா' என்ற செல்ல சுருக்கம் சுபலாவுக்குமே அதிர்ச்சி தான்! விலாங்கு மீன் போல இத்தனை நாள் நழுவிக் கொண்டிருந்தவன் இன்று 'பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி தொண்டையில் விழுந்தது போல' அவளை சொர்க்க போகத்தில் ஆழ்த்துகிறானே!

கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா?! சுபலா குரலிலும் உடலிலும் ஏக குழைவு காட்டினாள்.

"சௌக்கியம் தான், விஜியத்தான். முன்பு போல உங்களை வீட்டு பக்கம் அடிக்கடி பார்க்க முடியாதது தான் ஒரே குறை." என்று கொஞ்சினாள்.

நளந்தனை மற்றவர்களிடம் அத்தான் என்று அவள் சொல்லிகொண்டாலும், அவன் முன்னால் அப்படி அழைத்ததில்லை. அவன் முகத்தில் அடித்தார் போல 'அப்படி கூப்பிடாதே' என்று சொல்லிவிடுவானோ என்ற பயம்.
 ஆனால் இன்று அவன் திடீரென்று 'சுபா' என்று சொல்லவும், தைரியத்தை வரவழைத்து கொண்டு 'விஜ்ஜியை' 'விஜியத்தான்' ஆக்கிவிட்டிருந்தாள்.

Comments

  1. // "வா சுபா" என்றான் குரலில் மகிழ்ச்சி காட்டி//

    //நளந்தன் முகத்தில் ஒரு ரகசிய முறுவல் இழைந்தோட, "வீட்டில் எல்லாரும் சௌக்கியமா?" என்று ரொம்ப முக்கியம் போல விசாரித்தான்.//

    How dare he teases our midhuna..

    :) நல்லா இருக்கு.. RCயோட effect தெரியுது.. ஹிஹி..

    ReplyDelete
  2. AnonymousJuly 17, 2013

    Noch. Ithu thaan muthaldavai unkal Padaippai naan padippthu.. atumai genutzt pradeep

    ReplyDelete

Post a Comment