Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 53

இருள் மறைத்த நிழல் (தேனு) - 53


"நினைத்தேன்! இப்படி ஏதாவது கிறுக்குத்தனம் செய்வாய் என்று நினைத்தேன்!" என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி அடிக்குரலில் சீறியவன் சாட்சாத் நளந்தனே!

தன்னிடமிருந்த வீட்டு சாவியில் கதவை திறந்தவன், "போ உள்ளே" என்று மறுபடியும் சீறினான்.

அவள் உள்ளே நுழையும் வரை பொறுமையை இழுத்து பிடித்து வைத்தவன், அவள் கையை பற்றி கோபமாக அவள் அறைக்கு கூட்டி சென்றான். அதே கோபத்துடன் ஒரு நாற்காலியில் அவளை உட்கார கை காட்ட மிதுனா பணிந்தாள். அவனும் அருகிருந்த அவளது கட்டில் மேல் உட்கார்ந்து இரு கைகளால் தலையை தாங்கி பிடித்து கொண்டு சிறிது நேரம் பேசாதிருந்தான்.

அவன் நிமிர்ந்த போது முகம் வெகுவாக கலங்கி இருந்தது. கலைந்த தலையும், சரியாக டக் செய்யப்படாத சட்டையுமாய்.. அவன் அவனாகவே இல்லை. தான் அங்கு இருந்தால் தானே துன்பம் என்றெண்ணி அவள் போனால்.. அவள் போனாலும் துன்பம் தான் போல.. மிதுனா செய்வதறியாது உதட்டை கடித்து கொண்டு அவன் முகம் பார்த்தாள்.

"நான்கு மணி நேரம்.. எப்படி தவித்து போனேன் தெரியுமா?" என்றவன் அவள் முகம் விகசிப்பது கண்டு , "தாத்தாவிற்கு என்ன பதில் சொல்வதென்று.." என சேர்த்து சொன்னான்.

மிதுனாவின் முகம் விழுந்தது.. ஓ.. அது தான் ஐயாவின் பிரச்சினையா! 'உன் பொறுப்பில் விட்ட பெண் எங்கே?' என்று தாத்தா கேட்டால் என்ன சொல்வதென்று கர்மவீரர் தவித்து விட்டார் போலும்.

ஆனால்.. நான்கு மணி நேரமா? அவள் வாய் விட்டு கேட்க,
"ஆமாம். நான்கு மணி நேரம் தான்." என்று அவளை போலவே இழுத்து சொன்னான். அவன் குரலில் எரிச்சல் கொஞ்சமும் குறையவில்லை.

"நீ இப்படி ஏதாவது செய்வாய் என்று நினைத்து மதியம் வீட்டிற்கு வந்தால்.. உன் அசட்டுத்தனம் அதற்குள் அளவு மீறிவிட்டது. உன்னை காணவில்லையே என்று எங்கெல்லாம் அலைந்தேன்" என்றான்

எங்கெல்லாம் என்று கேட்க அவளுக்கு ஆசை தான்.. ஆனால் கேட்டால் சொல்வானோ மாட்டானோ.. அதனால் வாளாவிருந்தாள்.

"ஏன் இப்படி செய்தாய், மிதுனா? எங்கள் பொறுப்பில் இருக்கும் போது நீ இப்படி சொல்லாமல் கொள்ளாமல் போவது முறையா? ஒன்று கிடக்க ஒன்று ஆனால் என்ன செய்வது?" என்று தணிந்து கேட்டான்.

இவன் ஏன் இப்படி நிலவும் நெருப்புமாய் நொடியில் மாறி அவளை வதைக்கிறான்?! அவன் கனிவும் கல் விட்டெறிந்தது போல் வலிக்க, "சரி.. சொல்லி விட்டே போகிறேன். அவ்வளவு தானே?" என்றாள் வேகமாக.

நிதானமாக அவளை பார்த்தவன், "இன்னும் கோபம் தீரவில்லையாக்கும்.. கோபத்தில் நானும் கொஞ்சம் அதிகப்படி பேசிவிட்டேன் தான். மன்னித்து கொள். நீ சொன்னது போலவே நாம் அந்த திருவிழா சம்பவத்தை மறந்து விடுவோம். முன்பு போல நீ இந்த வீட்டில் இரு. சரியா?" என்று வெள்ளை கொடி உயர்த்தினான் சமாதானமாக.

மறந்து விடுவோம் என்று சொன்னாள் தான். அதோடு அவளும் விலகி விடுவதாக சொன்னாளே.. அது? அதிகப்படியாக பேசிவிட்டான் தான். கொஞ்சமல்ல.. அதிகமாகவே.
ஆனால் திடீர் சமாதானம் ஏன்?

"என்ன திடீரென்று?" மனம் ஆறாமல் மிதுனா கேட்டுவிட்டாள்.

பின் என்ன? இவன் காரணமின்றி தவறாக நினைப்பானாம். கோபத்தில் கொதிப்பானாம். 'கொஞ்சம்' அதிகபடியாக பேசுவானாம். பின்னர் காரணமின்றியே அந்த கோபம் தணியுமாம். அவளும் காரணம் கேட்காமல் 'மன்னித்து' அதை 'மறந்து' முன்பு போல இருக்க வேண்டுமாம்! எந்த ஊர் நியாயம் இது?!

"திடீரென்று இல்லை.. கொஞ்ச நாளாகவே இதே யோசனை தான்." என்றான்.

அவனை போலவே கண்ணில் ஏளனம் தேக்கி, சுற்றும் முற்றும் மும்முரமாக தேடுவது போல பாவனை செய்தாள் மிதுனா.

அவன் "என்ன தேடுகிறாய்?" என்று பொறுமையற்று கேட்க, அதற்காக தானே அவளும் காத்திருந்தாள். பட்டென்று சொன்னாள், "ம்.. உங்கள் போதி மரத்தை காணலையே என்று பார்த்தேன்"

அவன் முகம் மாறியது. அவள் விடாது பேசினாள், "ஞானோதயம் பெற்றது எங்கே? எப்போது?"

அவன் அவளது கேலியை ஒதுக்கி மெய்யான குரலில் சொன்னான்.
"மிதுனா அன்று நான் என் வசமிழந்து ஆத்திரப்பட்டதற்கும், இன்று அது தவறு என்று உணர்வதற்கும் அடிப்படை காரணம் ஒன்றே தான். நடப்பும் நீயும் ஒன்றுக்கொன்று பொருந்தாததே. அன்று நடந்தவை உன்னை ஒரு விதமாய் உருவகித்து காட்ட, என்னுள் நான் வரித்திருந்த நீ வேறு விதமாய் இருக்க, அந்த முரண்பாடு.... என்னிடம் நீ நடித்தாயோ.. உன்னிடம் நான் ஏமாந்துவிட்டேனோ என்று என்னை ஆத்திரப்பட வைத்தது. இன்று வரை அந்த முரண்பாடு அதிகபட்டதே ஒழிய இம்மியும் குறையவில்லை. உன்னையும் குற்றங்களையும் கிட்ட வைத்து பார்க்க கனவிலும் முடியவில்லை. என்ன முயன்றும் அன்றைக்கு சுபலா உன்னை பற்றி சொன்னதும், உன் இயல்பும் இரு துருவமாய் இருக்க என்னால் ஒரு முடிவுக்கு தான் வர முடிகிறது. அது.. நீ குற்றமற்றவள்.. நடந்த எதுவும் உன் தவறல்ல.. என் தவறும் அல்ல. சூழ்நிலையின் தவறு என்று."

நியாயமாக பார்த்தால் மிதுனா அவன் அவளை குற்றமற்றவள் என்று சொன்னதற்காக சந்தோஷப்படவேண்டும். ஆனால் ஏனோ மனம் துள்ளவில்லை. அன்று தைத்த சொல்லம்புகளின் வேகம் இன்றும் புரையோடிய புண்களாய் ஆங்காங்கே வலிக்கையில் மனம் எப்படி துள்ளும்? ஒரு திருப்தி என்னவென்றால் பழி சொல்லோடு அவனை பிரிய வேண்டியதில்லை. அதற்குமேல் திருப்திபட அதிலொன்றுமில்லை என்றே அவளுக்கு தோன்றியது.

"பரவாயில்லை. தப்பு செய்தேன் என்பதற்கு போதிய ஆதாரம் இல்லாததால், "Benefit of Doubt"-ஐ குற்றம் சாட்டப்பட்ட எனக்கே கொடுத்து வழக்கையும் தள்ளுபடி செய்துவிட்டீர்கள் போல. ரொம்ப நன்றி" என்றாள் குதர்க்கமாக.

ஒரு கோடு போல அவனது வடிவான உதடுகள் மீசைக்கடியில் அழுந்தி கிடக்க அவளையே பார்த்தான் நளந்தன்.

மேலும் அவனை வார்த்தைகளால் தாக்கினாள் மிதுனா."எதற்கும் மறுவிசாரணைக்கு நான் தயாராக இருந்து கொள்கிறேன். ஒருவேளை நாளை எனக்கு எதிரான சாட்சியோ, சாட்சியங்களோ கிடைத்தால்.. நீங்கள் பாவம் என்ன செய்ய முடியும்" என்றாள்.

பொறுக்கமாட்டாமல், "மிதுனா.. அன்றைய பேச்சு தவறு என்று தான் சொல்கிறேனே.. இனி அது போல் தவறு நடக்காது. உன்னை பற்றிய என் மதிப்பீடு இனி மாறாது. நான் உன்னை உயர்வாக தான் பார்க்கிறேன்" என்றான்.

அவளுக்கு தான் கோபம் மட்டுப்படவில்லை.
"ஆஹா.. உங்கள் மதிப்பில் உயர்வது தானே என் ஜீவ சங்கல்பம். என் பிறவி பயனை அடைந்தேன்" என்றாள் ஏக ஏளனமாக.

முகம் இறுக அவளை வெறித்தான் நளந்தன்.

"ஒரேயடியாக என்னை குற்றம் சொல்லாதே மிதுனா. என் நிலையில் இருந்தும் நீ பார்க்க வேண்டும். அன்று நான் என்னென்னவோ நினைத்து வந்தேன். என் தாய் தந்தை மன வேற்றுமையின் தாக்கம் வேறு. சந்தர்ப்பம் சூழ்நிலை உன்னை தவறாக உருவகித்து காட்டியது. நிதானமின்றி, மனதில் எண்ணாதவற்றையும்  பேசினேன். இன்று உன் நடத்தையும், அன்றைய நடப்பும் எண்ணெயும் தண்ணீரும் போல ஒட்டாதிருக்க என் உள்ளத்திலும் மெய் பொய் தெளிந்துவிட்டது.  "

மிதுனா  பேசாதிருக்க, நளந்தன் தன்னை அவளுக்கு புரிய வைத்துவிடும் வேகத்தோடு பேசினான்.

"அன்று நான் எத்தனையோ ஆசைகளுடன் இருந்தேன்.. அது அத்தனையும் நொடியில் சிதற எப்படி நொறுங்கி போனேன் தெரியுமா? அந்த அதிர்ச்சியில் அதிகப்படி பேசிவிட்டேன். தவறு தான்.. என் காதலை சொல்ல வந்த .. "  என்று அவன் சொல்ல தொடங்க, மிதுனாவிற்கு கோபம் கனன்றது.

"ஆமாமாம்.  பாவம், உங்கள் சுபலாவிடம் காதலை சொல்ல ஓடோடி வந்தீர்களே.. மறக்க முடியுமா?! அந்த கனவுகள் கலைந்த விதம் படு அதிர்ச்சி தான்" என்றாள் குத்தலாக.

"சுபலா.. ச்சு.. உன் மூளையை மியூசியத்தில் தான் வைக்க வேண்டும். முட்டாள்!" என்றான் நளந்தன் காட்டமாக.

மிதுனாவுக்கும் கோபம் சுறுசுறுவென்று ஏறியது. முட்டாளாமே!

"ஆமாம் முட்டாள் தான். எந்த கிளை கைக்கு எட்டும் என்பதை கூட சரியாக கணக்கிட முடியாதவள் ஆயிற்றே. முட்டாள் தான். அடுத்த கிளை வேறு இன்னும் ஒரு வருடத்திற்கு எட்டாது!" என்று நீட்டி முழக்கி அவன் வார்த்தைகளை கொண்டே அவனை திருப்பி அடித்தாள்.

அன்று பட்ட வேதனை இன்று போல வதைத்தது.

கை முஷ்டியாக இறுக தன்னை கட்டுபடுத்திக் கொண்ட நளந்தன், "வீண் விவாதம் எதற்கு? தாத்தாவிடம் சொல்லிவிட்டு நீ எங்கு வேண்டுமானாலும் போ. அதுவரை உன் முட்டாள்தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வைப்பாய் என்று நம்புகிறேன்" என்று அவளது பெட்டியை சுட்டி காட்டினான்.

அவன் அப்படி விட்டேற்றியாக பேசியது அவளை இன்னமும் சீண்ட, "சொல்லிவிட்டே  போகிறேன்." என்றாள் வேகமாக.

உணர்ச்சியற்ற பார்வையால் அவளை அளந்தவன் எதுவும் பேசாது சென்றான்.

Comments

  1. Samathanama poi.. Thirumpavum ippadi sandaila mudikiringala...

    ReplyDelete
  2. hi thenu akka
    ennaku unka story romba pudichuruku...nan oru 5 or 6 times padichuru pan...unka story mattum illa ungaloda comments, priya mam oda comments ellam ennaku pidikum....
    thanks for your story...
    then i want your second story ka....plz do that and post the link....
    plz... plz...
    by
    nithya

    ReplyDelete

Post a Comment