Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 52

இருள் மறைத்த நிழல் (தேனு) - 52


விலகி விடுகிறேன் என்று சொன்ன பிறகும் ஏன் இந்த ஆத்திரம்? உன் ஆலோசனை வேண்டும் போது கேட்கிறேன் என்று பட்டு கத்தரித்தார் போல இடை வெட்டி பேசினானே.. இதற்கு என்ன அர்த்தம்?! என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். உன்  வேலையைப் பார் என்று தானே?

அவள் சொன்னதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? வேறு நல்ல மாற்று யோசனை தான் என்ன? நிச்சயமாக அவனை மணக்க அவளுக்கு விருப்பம் இல்லை தான். மனதுள் அவன் மேல் மிச்சம் மீதி காதல் இருக்கிறதா இல்லையா என்பதல்ல கேள்வி. நெஞ்சு முட்ட விரும்பினாலும், வெறுத்தாலும் அதெல்லாம் இரண்டாம் பட்சம் தான் இப்போது.

இது மானப் பிரச்சினை. தன்மானம் நிறையவே அடி வாங்கிவிட்டதே. அதை கொன்று ஒரு திருமணமா? மனம் கொண்டவனே என்றாலும், மனம் கொன்றவனும் அவன் தானே.. இருமனம் இணைவது தான் திருமணம். அதில் ஒரு மனம் வெறுக்க, ஒரு மனம் மரிக்க..  ஜடத்துக்கும் ஜடத்துக்குமா திருமணம்?!

ஒருவேளை அவள் அஞ்சியது போன்றே இதையும் அவளது 'அடுத்த நாடகம்' என்றே எண்ணிவிட்டானா?! தன்னை நிரூபிக்கும் வழி அறியாது மிதுனா விழித்தது சில மணி நேரங்களே.

நளந்தன் வெளியே சென்றிருந்தான். அலுவலகமாக தான் இருக்கும் என்று மிதுனாவே யூகித்து கொண்டாள். அவன் போகிறேன் என்று கூட அவளிடம் சொல்லவில்லையே. சொன்னால் அல்லவா எங்கே என்று கேட்பதற்கு.

அறையுள் அடைந்து கிடந்த மிதுனா செய்ய வேண்டியது மனதுள் விரிய, மட மட வென்று தன் உடமைகளை ஒரு பெட்டியில் அடைத்தாள்.
தாத்தா வந்த சில நாட்களில் அவளிடம் கொடுத்து வைத்திருந்த  'பெட்டி காஷ்" வைக்கும் பீரோவின் கொத்து சாவி, வீட்டு செலவு கணக்கு புத்தகம் ஆகியவற்றை தன் மேஜை மேல் வைத்தாள்.  தாத்தா திருவிழா செல்லுமுன் பாட்டியுடையது என்று அணிய கொடுத்த ஒரு ஆரம் நினைவிற்கு வரவும், கைப்பையில் கிடந்த அதையும் ஒரு கண்ணாடி கவரில் போட்டு மேஜை மேல் வைத்தாள். ஆரத்தை வைக்கும் போதே தன் கழுத்தில் உறவாடும் அவனது தங்க சங்கிலியும் நினைவிற்கு வந்தது..

அதையும் கழற்றி வைத்து விட அதில் கை வைத்தவளுக்கு அதை கழற்ற தான் மனம் வரவில்லை! வடிகட்டின முட்டாள்தனம் தான்! என்ன செய்வது?! அவனை பிரிய துணிந்த மனம் அவன் தந்த அடையாளத்தை பிரிய மறுத்தது. இருக்கட்டுமே.. அவனே அதை மறந்திருப்பான்.. அவனோடான வாழ்வு தான் இல்லை என்றாகிவிட்டது.. இனி வாழ்வு முழுமைக்கும் அவன் நினைவாக அந்த செயினாவது தங்கட்டுமே....

மறந்து போனது போல அதோடு மறைந்து போயேன் என்றது ஆசை கொண்ட மனது. மறந்தே போனாலும் அதை மறதி என்று நளந்தன் ஒருநாளும் நம்ப போவது இல்லை.. தங்கமாவது லாபம் என திருடி சென்றாள் என்று தான் தூற்றுவான்.. திருடி என்று அது வேறு ஒரு பழி சொல் தேவையா என்றும் தோன்ற, ஆமாம் இப்போது மட்டும் தேவதை என்றா சொல்கிறான்.. என்று கசந்து கொண்ட மிதுனா, அந்த சங்கிலியை கழற்றி வைக்க  'மறந்து' போனாள். 'Selective Amnesia' என்று இகழ்ந்த மனசாட்சி கண்களை இறுக மூடி கொண்டது.

வீட்டில் எந்த வேலையாளும் இல்லாதிருப்பதும் வசதியாக இருந்தது. ஒரு ஆட்டோ பிடித்து லைப்ரரிக்கு அடுத்து உள்ள மகளிர் காவல் நிலையம் அணுகியவள் அவர்கள் தயவால் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் சென்றாள். அங்கே பேசி முடித்து மாலை வந்து சேர்வதாக தெரிவித்துவிட்டு நேரே  நளந்தனின் வீட்டிற்கு சென்றாள்.

இனி தன் பெட்டியை எடுத்து கொண்டு வீட்டை பூட்டி காவலாளியிடம் சாவி கொடுத்து விட்டு செல்ல வேண்டும்.. அவ்வளவு தான். எளிதாக சொல்லிகொண்டாலும் தொண்டையை அடைத்தது. சாவியை காவலாளியிடம் தருவது உசிதமா என்றும் மனம் அடித்து கொண்டது.. ஆனால் வேறு வழியுமில்லை. விசுவாசமானவன் தான். சாவியை தரலாம்..எப்படியும் நளந்தன் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவான்.

நினைத்தபடி, தன்னறைக்கு வந்து  ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த தன் பெட்டியை தூக்கி கொண்டு வெளி வாசலை பூட்டி கொண்டிருந்த போது, "நினைத்தேன்!" என்று மிக அருகாமையில் குரல் கேட்க துள்ளி விழுந்தாள் மிதுனா.

Comments

  1. AnonymousJune 29, 2017

    //இருமனம் இணைவது தான் திருமணம். அதில் ஒரு மனம் வெறுக்க, ஒரு மனம் மரிக்க.. ஜடத்துக்கும் ஜடத்துக்குமா திருமணம்?!//- unga sol valamai rombaa arpudham.

    ReplyDelete
  2. Nice. .very nice . interesting

    ReplyDelete
  3. AnonymousJuly 24, 2025

    Super superb . .

    ReplyDelete

Post a Comment