Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 49

இருள் மறைத்த நிழல் (தேனு) - 49


மிதுனா "நந்தன்!" என்று அலறிய அடுத்த கணம் எங்கிருந்தோ ஒரு பேருந்து வேகம் எடுத்து பறந்துகொண்டிருந்த அவர்கள் காரை நேர் எதிர்க்கே அசுர வேகத்தில் குறுக்கிட்டது. டிரைவர் சட்டென்று காரை ஒடித்து திருப்ப பேருந்து நளந்தன் இருந்த பக்கத்தை பலமாக உரசி கிரீச்சிட்டு நின்றது.

பேருந்து வந்த வேகத்தையும், சென்ற திசையையும் மிதுனா கண்கூடாக பார்த்தாளே!
அவன் புறம் இடிபட்டதும், அதை தொடர்ந்த சத்தமும்.. அப்பப்பா! உயிரை கிழித்தபடி கேட்டதே! அவள் நந்தன் என்னவானான்?!

கணப்பொழுதில் எம்பி முன் இருக்கையில் எட்டி பார்க்க அங்கே நளந்தன் தலை கவிழ்ந்து இருக்க வெறி கொண்டவள் போல ஆவேசமாக அவன் தோள் பற்றி "நந்தன்! நந்தன்! " என்று அவனை உலுக்கி கதறினாள் அவள்.

மிதுனாவின் அலறல் தந்த எச்சரிக்கையும், அவனின் சமயோசிதமும் கை கொடுக்க டக்கென்று தலையை இரு கைகளால் அரண் போல காத்து கொண்டு குனிந்து டிரைவர் பக்கம் வெகுவாக சாயந்து கொண்ட நளந்தன் மயிரிழையில் காயமின்றி உயிர் தப்பியிருந்தான். ஆனால் அவன் உயிரோடு தான் இருக்கிறான் என்பதை கூட உணராது அவனது கவிழ்த்த தலை கண்டு உயிர் பதறினாள் மிதுனா.

அதற்குள் சுதாரித்துவிட்ட நளந்தன், "ஒன்றுமில்லை.. ஒன்றுமில்லை.." என்றபடி தலை தூக்கி, கதவை திறக்க முயன்றான். டிரைவர் பக்கம் சேதமில்லாததால் உடனே வெளியேறிய அவர், "சார், உங்க பக்கம் கதவு ஜாம் ஆகியிருக்கும். இப்படிக்கா வெளியே வாங்க" என்று தன் பக்கம் காட்ட நளந்தனும் அதன்படியே வெளியே குதித்தான். விரைந்து வெளியேறிய மிதுனா ஓடி சென்று அவனை ஒட்டி நின்றாள். இல்லை.. நிற்க முயன்றாள்.. அவ்வளவே.

உடல் நடுங்க, கால் வெலவெலக்க தோயந்தவளை சமயத்தில் விழாது பற்றிய நளந்தன்,  "ச்சு.. மதூ.. இதோ பார்.. எனக்கு ஒன்றுமில்லை.. இங்கே பார்.." என்று அவள் கன்னத்தை தட்டி நிகழ்வுக்கு இழுத்து வந்தான். அவன் குரலும், மது என்ற அவன் அழைப்பும் அவளுள் எதையோ உயிர்ப்பித்தது. அவன் முழுதும் சேதமின்றி மொத்தமாய் இருக்கிறான் என்று ஒருவாறு உணர்ந்த பின்பே தன் கால்களை மதித்து தானே நின்றாள் அவள்.

ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்றவன் அவளை விட்டு ஓரடி எடுத்து வைத்த போது தான் அவனது கையிலும் காலிலும் ரத்தம் கசிய கண்டாள். "ரத்தம்" என்று அவள் மீண்டும் பதற, அவளை இறுக அணைத்து ஆசுவாசப்படுத்தியவன் சாலையோரம் கிடந்த ஒரு கல்லில் அவளை உட்கார்த்தி வைத்தான்.

"இங்கேயே இரு. யாரிடமும் பேச்சு கொடுக்காதே. நான்.. இதோ வருகிறேன்..  அங்கே பேருந்தில் வந்தவர்களுக்கு என்னவாயிற்று என்றும் பார்க்கவேண்டும்.."

ஒரு வினாடி தயங்கியவன், தன் ஸ்வெட்டரை கழற்றி இன்னமும் நடுங்கி கொண்டிருந்த அவள் மேல் போர்த்தினார் போல போட்டு விட்டு விட்டு பேருந்து பக்கம் விரைந்து சென்றான்.
'
விபத்து நடந்தது பிரதான சாலை என்பதாலும் அருகில் சில பல கடைகள் இருந்ததாலும் நடமாட்டம் இருக்க அதற்குள் அங்கே பெரும் கூட்டம் கூடி விட்டிருந்தது. உதவும் எண்ணத்தில் சிலரும், உதவுவதை வேடிக்கை பார்க்கும் எண்ணத்தில் சிலரும் என ஆளாளுக்கு முடிந்ததை செய்தனர். நல்லவேளை பேருந்தில் பயணித்தவர்களுக்கும் பலத்த காயம் எதுவும் இல்லை. ஆனால் மொத்த கூட்டமுமே அதிர்ந்து போயிருந்தது.

சச்சரவு அடங்கி சமரசம் பேசி ஒருவழியாய் யார் தவறு என்று அலசி விஷயம் ஒருவாறு முடிய, சிறிது நேரத்தில் நளந்தன் அவளை தேடி வந்தான். இரத்த கசிவை நிறுத்த யாரோ அவன் கைக்கு கைக்குட்டையால் ஒரு தற்காலிக கட்டு போட்டு விட்டிருந்தனர். அருகில் வந்தவன் மறுகையில் இருந்த ஒரு பெப்சி பாட்டிலை அவளிடம் கொடுத்து, "குடி" என்றான்.

கூட்டம் சுவாரசியம் குறைந்து கலையலாயிற்று. அவள் பெப்சியை குடிக்கையில், நளந்தன் சற்று தள்ளி நின்று யாரிடமோ என்னவோ செல்லில் அழைத்து பேசினான். அவள் குடித்து முடித்ததை கவனித்துவிட்டு அருகே வந்து, "வா" என்று மட்டும் சொல்லி முன்னே நடக்க, மிதுனா அவர்கள் வந்த டாக்சியையே திரும்பி திரும்பி பார்த்தபடி அவனோடு நடந்தாள்.

கார் இங்கிருக்க..எங்கே செல்கிறான்? கார் நன்றாக தானே இருக்கிறது.. ஏன் அதை விடுத்து செல்கிறான்? கேள்விகள் அவளை தொடர அவள் அவனை தொடர்ந்தாள்.

எதிர் சாலையில் சென்ற ஆட்டோ ஒன்று அவன் கையாட்டி கூப்பிட வழுக்கிக் கொண்டு வந்து அவர்கள் அருகாக நின்றது.பின்னர் இருவரையும் ஏற்றிக் கொண்டு அவன் சொல்படி ஒரு பெரிய ஹோட்டலின் முன் நின்று கடமை ஆற்றி காசு பெற்று சென்றது.

வரவேற்பறைக்கு சென்று, "விஜய் நளந்தன். சற்று முன் போனில்  இரு அறைகள் முன் பதிவு செய்தேன்." என்ற அவனது அமர்ந்த குரலுக்கு பதிலாக, "இதோ சார்" என்று உதட்டுக்கு வலிக்காமல் சொல்லி ஒரு கவரை நீட்டினாள் அந்த சிவப்பு சேலை ரிசெப்ஷனிஸ்ட். கிரெடிட் கார்டில் பில் செட்டில் செய்த நளந்தன் ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு அவள் காட்டிய திசையில் திரும்பினான்.

மறுபடியும் "வா" என்ற அவனது ஒற்றை சொல்லில் 'கீ' கொடுத்த பொம்மையானாள்   மிதுனா.

இரண்டாவது தளம் சென்று ஒரு அறையின் எலெக்ட்ரானிக் பூட்டில் கவரில் இருந்த ஒரு கார்டை எடுத்து அவன் 'ஸ்வைப்' செய்ய பூட்டு திறந்து கொண்டது. அவள் உள்செல்ல வழி விட்டு நின்றான்.

இரண்டு அறை என்றானே.. தன்னை இங்கே விட்டு அடுத்த அறைக்கு செல்வான் போலும் என்று நினைத்தவள் அவனும் உள்ளே வந்து கதவை தாளிட குழப்பமாக இருந்தது.

அவள் குழப்பம் எதையும் அவன் கவனிக்கவில்லை. எந்நேரமும் அது என்ன தான் சிந்தனையோ.. "எக்ஸ்க்யூஸ் மீ" என்று சொல்லி குளியலறை சென்று கதவடைத்து கொண்டான்.

அறையை பார்வையால் துழாவினாள் மிதுனா. இரண்டு பெரிய கட்டில் கொண்ட விசாலமான அறை.  இரு கட்டில்களுக்கு நடுவே சுவரை ஒட்டி ஒரு சின்ன  'நைட் ஸ்டாண்ட்". அதன் மேல் ஒரு மேஜை விளக்கு.

சற்று நேரத்திற்கெல்லாம் முகம் கழுவி வெளியே வந்தவன் அவள் இன்னமும் நின்று கொண்டிருப்பதை பார்த்து விட்டு, "சாரி, நீயும் ரெஸ்ட் ரூம் போக வேண்டுமா? " என்று கேட்டு ஒதுங்கி கொண்டான்.

கையில் கட்டியிருந்த கைக்குட்டையை காணவில்லை. ஒரு பெரிய சிராய்ப்பு தெரிந்தது. காயத்தை  உறுத்தாதிருக்க சட்டையை முழங்கை வரை மடித்து விட்டிருந்தான்.  ரொம்ப வலிக்கிறதோ என்று கலங்கியது அவளுக்கு. அவள் பார்வையை கவனித்தவன் அது பிடிக்காதவன் போல ஒரு அவசரத்துடன் பேச்சை மாற்றினான்.

"நான் டிரைவரை பார்த்து அவன் அறை சாவியை கொடுத்து விட்டு வருகிறேன். இந்த அறைக்கு ஒரு "Access Card" தான் உள்ளது. அதனால் வெளியே பூட்டி செல்கிறேன். நீ பாத்ரூம் கதவை மட்டும் தாளிட்டு கொள். ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவேன்.." என்றவன் தயங்கி, " ஒன்றும் பயமில்லையே?" என்றும் கேட்டான்.

அவன் கேட்டதே தென்பாக இருக்க, "பயமில்லை" என்பது போல மிதுனா தலையை மட்டும் ஆட்டினாள்.

இரண்டு அறையில் ஒன்று டிரைவருக்கு என்று புரிந்தது. ஆனால், இன்னமும் ஏன் காரில் செல்லவில்லை, எதற்காக இங்கு தங்குகிறோம் என்று தெளிவாக புரியவில்லை. கார் ஓடும் நிலையில் தான் இருந்தது.. அதிக சேதமில்லை.. கதவு ஜாம் ஆகியிருந்தது தான்.. ஆனால் ஓடாது என்றில்லை.. ஏதாவது காரணம் இருக்கும். இல்லாமல் செய்ய மாட்டான்.. யோசித்தபடியே உள்ளே சென்று தானும் முகம் அலம்பி வந்த போது தான் அவனும் உள்ளே நுழைந்தான்.

"பசித்தால் சாப்பிடு" என்று அவளிடம் ஒரு வறுத்த முந்திரி பாக்கட்டை கொடுத்து விட்டு வாயில் புறம் இருந்த கட்டிலுக்கு சென்று கால் நீட்டி படுத்தவன், "நீயும் தூங்கு. வந்த காரிலேயே காலையில் கிளம்பி விடலாம். டிரைவருக்கும் அதற்குள் அதிர்ச்சி அடங்கியிருக்கும்."  என்றான். அதற்கு மேல் அவனிடம் அசைவில்லை.ஒரு கையை தலைக்கு அடியில் வைத்து மறு கையை மடக்கி நெற்றி மீது வைத்து மல்லாக்க படுத்தவன் விரைவில் உறங்கியும் போனான்.

அவனை போல படுத்தவுடன் தூங்குவது அவளுக்கு என்றுமே சாத்தியப் பட்டதில்லை. சாதாரண நாட்களிலேயே அன்று முழுக்க நடந்ததை அசை போட்டவாறே   படுத்து தான் அவளுக்கு பழக்கம். கடந்த சில நாட்களாக தாத்தாவின் மறைவும் அதை ஓட்டிய சம்பவங்களும் ஜீரணிக்கப்படாமல்  நெஞ்சை கரித்து கொண்டிருக்க,  இன்றோ விபத்தின் அதிர்ச்சி வேறு. அடுத்த கட்டிலுக்கு சென்றவள், படுக்கவும்  பிடிக்காமல் அப்படியே கால்களை கட்டி கொண்டு தலையை சுவரோடு சாய்த்து கண்களை மட்டும் மூடி கொண்டாள்.

எவ்வளவு யோசித்து ஒவ்வொன்றும் செய்கிறான்..  விபத்தில் எல்லாரும் போல அவனையும் பதற்றம் தொற்றினாலும் எவ்வளவு விரைவில் சமாளித்து நிதானம் காட்டினான்! பரபரப்பாக சுற்றினாலும் நிதானம் இழக்காமல் சிந்தித்து செயல்படுகிறான்.. காருக்கு அதிக சேதமில்லை என்றாலும், டிரைவரின் மனநிலை கண்டு, நள்ளிரவில் அந்த அதிர்ச்சியோடு அவனை மீண்டும் ஓட்ட சொல்வது உசிதமில்லை என்று யோசித்து, பயணத்தை தாமதபடுத்தி.. 'காரிலேயே படுத்து கொள்' என்று டிரைவரிடம் சொல்லாது, அந்த டிரைவருக்கும் ஒரு அறை பதிவு செய்து.. எண்ணமெல்லாம் நளந்தனையே சுற்றியது.

இக்கட்டில் கூட இப்படி யோசித்து நிதானம் இழக்காமல் செயல்படுபவன் தன் விஷயத்தில் மட்டும் அடி முதல் நுனி வரை தவறாகவே முடிவு செய்கிறானே! அவனை பற்றி பெருமிதமாக எண்ணிய மனம் பாதை மாறி நொந்தும் போனது.

தன்னையும் தனியே விடாது ஓர் அறை எடுத்து கண்ணியமாக தள்ளி நின்று அவளை காக்கும் அவன் பொறுப்புணர்வு  பிடித்திருந்தாலும் அவன் தனியறை எடுக்காதது தனக்கு பிடித்திருந்தது தான் அவளுக்கு பிடிக்கவில்லை. அவன் அருகில் இருந்தாலே ஒரு தென்பு ஊறுவது போல உணரும் இந்த பைத்தியகாரத்தனம் என்று வடியும்?

Comments

  1. //இக்கட்டில் கூட இப்படி யோசித்து நிதானம் இழக்காமல் செயல்படுபவன் தன் விஷயத்தில் மட்டும் அடி முதல் நுனி வரை தவறாகவே முடிவு செய்கிறானே! அவனை பற்றி பெருமிதமாக எண்ணிய மனம் பாதை மாறி நொந்தும் போனது.//

    oru velai intha nalanum nallavano!

    //தன்னையும் தனியே விடாது ஓர் அறை எடுத்து கண்ணியமாக தள்ளி நின்று அவளை காக்கும் அவன் பொறுப்புணர்வு பிடித்திருந்தாலும் அவன் தனியறை எடுக்காதது தனக்கு பிடித்திருந்தது தான் அவளுக்கு பிடிக்கவில்லை. அவன் அருகில் இருந்தாலே ஒரு தென்பு ஊறுவது போல உணரும் இந்த பைத்தியகாரத்தனம் என்று வடியும்//

    ahaa .,kathalil intha mithu nallaa ulararugiraale !
    alauggu pidigga villai enpathu enaggu pidithu iruggirathu

    ReplyDelete
  2. avalai thaniyaga vidadhu athay arail kaniyamaga nadandhan nalandhan. ippa thaan story ful interest aga pogudhu......

    ReplyDelete
  3. Hai I am RC fan.now also ur fan.Thnx for chances to reading ur story.welldone...

    ReplyDelete
  4. AnonymousJune 29, 2017

    //அவன் தனியறை எடுக்காதது தனக்கு பிடித்திருந்தது தான் அவளுக்கு பிடிக்கவில்லை. அவன் அருகில் இருந்தாலே ஒரு தென்பு ஊறுவது போல உணரும் இந்த பைத்தியகாரத்தனம் என்று வடியும்?//. You never miss even a single chance to express mithuna's love for nalandhan. That is the most impressive quality of your writing.

    ReplyDelete

Post a Comment